

செழுமையாக இருந்த மரகதபுரி நாட்டை மன்னர் விஜயவர்மன் ஆட்சி செய்துவந்தார். இல்லை என்று வருவோருக்குப் பொன்னும் பொருளும் வாரிவழங்கினார். நாட்டில் குற்றங்கள் நடக்காதவாறு பார்த்துக்கொண்டார். மன்னராக அல்லாமல் சாதாரண மனிதராக நடந்துகொண்டதால், மக்களின் அன்பைப் பெற்றிருந்தார்.
அன்று அமைச்சரிடம் மன்னர் பேசிக்கொண்டிருந்த போது, “நம் மக்கள் இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்” என்றார்.
“தங்கள் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. ஆனால்...?” என்று தயக்கத்துடன் பேச்சை நிறுத்தினார் அமைச்சர்.
“ஆனால், என்ன அமைச்சரே?”
அமைச்சர் சற்றுத் தயங்கிவிட்டு, “தாங்கள் தவறாக நினைக்கக் கூடாது. உங்கள் காலத்துக்குப் பிறகு அவர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை நினைக்கும்போது எனக்குக் கொஞ்சம் கவலையாக இருக்கிறது” என்றார்.
“அமைச்சரே, கவலை வேண்டாம். மக்களின் மனம் அறிந்து இந்த மரகதபுரியைச் சிறப்பாக ஆட்சி செய்ய என் மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து என்னைப் போலவே மக்களைப் பேணிகாக்கச் சொல்லிவிடலாம்” என்றார் மன்னர்.
“அரசே, தங்கள் மகன்களில் யார் மக்களுக்கான ஆட்சியை நடத்துவார்கள் என்று எப்படி அறிவீர்கள்?”
“நல்ல கேள்விதான், யோசிக்கிறேன்” என்றார் மன்னர்.
மறுநாள் காலை ஆதித்யவர்மன், வித்யாவர்மன், நலவர்மன் ஆகிய மூவரையும் அரசவைக்கு அழைத்தார் மன்னர்.
“தந்தையே, தாங்கள் எங்கள் மூவரையும் அழைத்தமைக்கான காரணம் என்னவென்று அறியலாமா?” என்று பணிவுடன் கேட்டான் ஆதித்யவர்மன்.
“வருங்கால அரசர்களே, இந்த மரகதபுரியை என்னால் முடிந்தவரை சிறப்பாக ஆட்சிசெய்து வருகிறேன். மக்களும் நிம்மதியாக வாழ்கிறார்கள். எனக்கு வயதாகிவிட்டது. அதனால், உங்களில் ஒருவருக்கு மணிமுடி சூட்டி, இந்த நாட்டின் மன்னனாக அரியணையில் அமர வைக்கப்போகிறேன்” என்றார் அரசர்.
“அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் தந்தையே?” என்று ஆவலுடன் கேட்டான் நலவர்மன்.
அப்பொழுது பணியாள் ஒருவர், அவர்கள் மூவருக்கும் தலா ஒரு சாக்குப்பையைக் கொண்டுவந்து கொடுத்தார்.
“தந்தையே, எதற்காக எங்கள் மூவருக்கும் இந்தச் சாக்குப்பையைக் கொடுத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டான் வித்யாவர்மன்.
“கவனமாகக் கேளுங்கள். அரசனாக வேண்டும் என்கிற விருப்பம் உங்களுக்கு இருந்தாலும் அதற்கேற்ற தகுதி உங்களிடம் இருக்கிறதா என்பதை நான் அறிய வேண்டாமா? அதற்காக உங்களுக்கு ஒரு போட்டி வைக்கப்போகிறேன். நம் நாட்டு எல்லையில் இருக்கும் வனத்திற்குச் சென்று ஒரு வாரம் தங்கி, அங்கிருந்து உங்களால் முடிந்த உணவை இந்தச் சாக்குப்பையில் கொண்டுவர வேண்டும். யார் பை மிகவும் கனமாக இருக்கிறதோ அவரே அரசனாக அறிவிக்கப்படுவார்” என்றார் மன்னர்.
மூவரும் வனத்துக்குச் செல்ல சம்மதித்தனர்.
மறுவாரம் காட்டுக்குள் சென்ற மூவரும் ஆளுக்கொரு திசைக்குச் சென்று உணவைத் தேடினார்கள்.
ஆதித்யவர்மன் மிகவும் புத்திசாலி, நற்பண்புகள் மிக்கவன். நாட்டு மக்களைத் தன் தந்தையைவிடச் சிறப்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான். ஒவ்வொரு மரமாக ஏறி காய், கனிகளைச் சுவைத்து, எது நல்ல காய், கனி என்று தேர்ந்தெடுத்து, சாக்குப்பையில் சேமித்தான்.
வித்யாவர்மன் மிகவும் சோம்பேறி. உடலை வருத்தி ஒரு காரியத்தையும் செய்ய மாட்டான். ‘இந்த மக்கள் சாப்பிட நான் பாடுபட வேண்டுமா? அவரவர் உணவை அவரவர்தான் தேடிக்கொள்ள வேண்டும்’ என்று நினைத்தான். ஆனால், மன்னர் பதவிக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தான். மரங்களிலிருந்து விழுந்து நசுங்கிய பழங்களையும் காய்ந்த இலைகளையும் எடுத்து, சாக்குப்பையில் போட்டுக்கொண்டான்.
நலவர்மன் சுயநலம் பிடித்தவன். யாருக்கும் உதவ மாட்டான். சாக்குப்பையில் இருப்பது யாருக்குத் தெரியப் போகிறது என்று நினைத்தான். மரத்தடியில் உண்டு, உறங்கிவிட்டு, கீழே இருக்கும் கற்களையும் குப்பைகளையும் அள்ளித் தன் சாக்குப்பையில் போட்டுக்கொண்டான்.
மூவரும் ஒரு வாரம் கழித்து அரசவைக்கு வந்துசேர்ந்தனர்.
களைப்புடனும் சோர்வுடனும் இருந்த மூவரையும் பார்த்த அரசர், “என் அருமை செல்வங்களே, மக்களுக்காக மிகுந்த சிரமத்துடன் சேகரித்த உணவை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். நான் அடுத்த போட்டியைக் கூறுகிறேன்” என்றார்.
இதைக் கேட்ட அமைச்சர், “மன்னா, நீங்கள் அடுத்த போட்டியை அறிவிப்பதற்குள் முதல் போட்டியின் வெற்றியாளர் யார் என்று தெரிவித்துவிடலாமே?” என்றார்.
அதற்கு மன்னர் விஜயவர்மன், “இரண்டாவது போட்டியில் வெற்றிபெறுபவர்தான் முதல் போட்டியில் வெற்றி பெற்றவர்” என்றார்.
அனைவருக்கும் குழப்பமாக இருந்தது.
“உங்கள் அனைவரின் குழப்பத்தையும் தெளிவுபடுத்துகிறேன். என் அரியணையில் அமரப்போகும் வருங்கால அரசர்களே, உங்கள் சாக்குப்பையில் வைத்திருக்கும் உணவுதான் அடுத்த வாரம் முழுக்க நீங்கள் உண்ண வேண்டிய உணவு. இதுதான் என் இரண்டாவது போட்டி” என்றார் மன்னர்.
இதைச் சற்றும் எதிர்பாராத வித்யாவர்மனும் நலவர்மனும் அதிர்ச்சியில் உறைந்தார்கள். அவர்களுக்குத் தாங்கள் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பது புரிந்தது.
உண்மையாக மக்கள் நலனில் அக்கறைகொண்ட ஆதித்யவர்மன் மட்டும் தந்தையின் இரண்டாவது போட்டிக்குத் தயாரானான்.