

சட்டமன்றத்தைக் காண அனுமதி பெறுவது எப்படி, டிங்கு?
- ரா. கலைவேந்தன், 4-ம் வகுப்பு, ஊ.ஒ.தொ. பள்ளி குருவரெட்டியூர், ஈரோடு.
தனிநபராக நீங்கள் சட்டமன்ற நிகழ்ச்சியை நேரில் காண வேண்டும் என்றால், உங்கள் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினரிடம் (எம்.எல்.ஏ.) அல்லது சபாநாயகரிடம் அனுமதி கடிதம் பெற்று, அவர்கள் அனுமதிக்கும் நாளில் குறிப்பிட்ட நேரத்தில் காணலாம். பள்ளி மூலம் மாணவர்கள் சட்டமன்ற நிகழ்ச்சியைக் காண வேண்டும் என்றால், தலைமைச் செயலகத்தில் விண்ணப்பம் கொடுத்து அனுமதி பெற வேண்டும், கலைவேந்தன்.
பீட்ரூட் சாப்பிட்டால் மட்டும் அடுத்த நாள் மலமும் சிறுநீரும் சிவப்பு நிறத்தில் வெளியேறுவது ஏன், டிங்கு?
- ஷரதுல், 7-ம் வகுப்பு, நேவி குழந்தைகள் பள்ளி, கோவை.
பீட்ரூட் சாப்பிடும்போதும் பீட்ரூட் சாறு குடிக்கும்போதும் மலமும் சிறுநீரும் லேசாக நிறம் மாறலாம். இதைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பீட்ரூட்டில் இருக்கும் பீட்டானின் நிறமியால் ஏற்படும் மலம், சிறுநீர் நிற மாற்றத்தை ‘பீட்டூரியா’ என்று அழைக்கிறார்கள். பீட்ரூட் சாப்பிட்டு எப்போதாவது நிறம் மாறினால் பயப்பட வேண்டியதில்லை. பீட்ரூட் சாப்பிடும் ஒவ்வொரு முறையும் நிறம் மாறினால், மருத்துவரைச் சந்திக்க வேண்டும். ஒருவேளை மலத்துடனும் சிறுநீருடனும் ரத்தம் கலப்பதாலும் நிறம் மாறலாம். இது உடனே கவனிக்க வேண்டிய பிரச்சினை என்பதால் யோசிக்காமல் மருத்துவமனை சென்றுவிட வேண்டும், ஷரதுல்.
மான் ஏன் வேகமாக ஓடுகிறது, டிங்கு?
- செ. வடமலை அரசு, 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
பாதுகாப்புக்காகத்தான் மான்கள் வேகமாக ஓடுகின்றன. ஆனால், இவற்றால் நீண்ட நேரம் வேகமாக ஓடவும் முடியாது. அதனால், ஓடும்போது பலவித தற்காப்பு உத்திகளைப் பயன்படுத்துகின்றன. உணவுப் பற்றாக்குறை ஏற்படும் காலத்தில் மான்கள் மிகவும் கவனமாக இருக்கும். வேட்டையாடும் விலங்குகள் மான்களை நோக்கி வரும்போது, இப்படியும் அப்படியுமாக ஓடி வேட்டையாடிகளைக் குழப்பும். பல தடைகளைத் தாண்டிச் செல்லும். உயரமாகக் குதிக்கும். இப்படிச் செய்யும்போது வேட்டையாடிகளின் கவனம் சிதறும். அந்த நேரத்தில் மான்கள் தப்பிவிடும். வேட்டையாடிகளை எதிர்த்து நிற்கப் போதுமான பலமோ பாதுகாப்போ இல்லாத காரணத்தால் மானுக்கு ஓடும் திறமையை இயற்கை வழங்கியிருக்கிறது, வடமலை.
வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்த்து, நாட்டுச் சர்க்கரையைச் சாப்பிடுங்கள் என்று ஆசிரியர் கூறுகிறார். இது அறிவியல்ரீதியாக எவ்வளவு உண்மை, டிங்கு?
- வி. இசைவர்மன், நான்காம் வகுப்பு ஊ.ஒ.தொ. பள்ளி, குருவரெட்டியூர், ஈரோடு.
இயற்கையாக விளைந்த கரும்பிலிருந்து பெறப்படும் சாறு மட்டுமே ரசாயனக் கலப்பு இல்லாதது. நாட்டுச் சர்க்கரை, வெல்லம், வெள்ளைச் சர்க்கரை போன்றவை சுவையிலும் நிறத்திலும் வெவ்வேறாகத் தெரிந்தாலும் இவை எல்லாவற்றிலும் ரசாயனக் கலப்பிருக்கிறது. பொதுவாகச் சர்க்கரையைக் குறைவாக எடுத்துக்கொள்வதே நம் உடலுக்கு நல்லது, இசைவர்மன்.