ஆழ்கடல் அதிசயங்கள் 18: ஈட்டி முனையில் நஞ்சு!

ஆழ்கடல் அதிசயங்கள் 18: ஈட்டி முனையில் நஞ்சு!
Updated on
3 min read

ஆஸ்திரேலியாவின் பெரும் பவளத்திட்டுக்கு அருகில் நின்றது நாட்டிலஸ் நீர்மூழ்கி. பவளத்திட்டின் விளிம்பில் பேரா ஆமைகள் மெல்ல நீந்திக்கொண்டிருக்க, கிளி மீன்கள் ஆங்காங்கே பாசிகளைச் சுரண்டியபடி இருந்தன.

“இந்தப் பெரும்பவளத்திட்டை நேரில் பார்ப்பது கடல்சார் ஆராய்ச்சியாளர்களின் வாழ்நாள் கனவு” என்று புன்னகையோடு சொன்னார் அருணா. நீர்மூழ்கி மெல்ல நகர்ந்து பவளத்திட்டுகள் குறைவாகவும் மணல் அதிகமாகவும் உள்ள பகுதிக்குச் சென்றது. கேமரா ரோபாட் முன்னேறி ஓர் இடத்தில் நின்றது.

“மண்ணுலேருந்து ஏதோ நீட்டிட்டிருக்கே” என்று கேமரா அனுப்பிய காட்சியைச் சுட்டிக்காட்டினாள் ரக்‌ஷா. “ஆமாம், விலாங்கு மீன் மாதிரி ஏதோ இருக்கு” என்று செந்தில் சொல்ல, “இல்ல, இது குழல் மாதிரி இருக்கு” என்றாள் ரோசி.

மெல்ல குழல் மேலெழுந்தது. நான்கு அங்குல நீளம்கொண்ட, கூம்பு வடிவிலான விலங்கு மணலில் இருந்து வெளியில் வந்தது.

“இதுதான் கூம்பு நத்தை (Cone snail). இதில் 800 இனங்கள் உண்டு. சில இனங்கள் அரை அடி நீளம்கூட வளரும். இது ஊன் உண்ணி. ஒவ்வொரு இனமும் ஒவ்வொரு வகையான இரையைச் சாப்பிடும். இது மீன்களைச் சாப்பிடும். அதோ பக்கத்துல ஒரு சின்ன மீன் வருது பாருங்க” என்று கைகாட்டினார் அருணா.

நத்தையின் அருகில் ஒரு மீன் மெதுவாக நீந்தியது.

“குழல் மாதிரி நீட்டிட்டு இருக்கே, இது ஒரு வகையான தூம்புக் குழாய் (Siphon). இது ஆக்சிஜனை சுவாசிக்கவும் மோப்ப சக்தி மூலம் இரையைக் கண்டறியவும் பயன்படும். நீட்டிட்டு இருக்கும் தூம்புக் குழாய் மூலம் இந்த மீனோட வாடை தெரிஞ்சிருக்கும், அதனால் நத்தை மேல வந்திருக்கு” என்று விளக்கினார் அருணா.

“நத்தைனாலே மெதுவா நகரும். இது பார்க்கக் கொஞ்சம் குண்டா வேற இருக்கு. இந்தக் குட்டி மீன் வேகமா நீந்தித் தப்பிச்சிடாதா? எப்படி மீனை வேட்டையாட முடியும்?” என்று கேட்டாள் ரோசி.

“அப்படிச் சொல்லிட முடியாது. ஒவ்வொரு வேட்டையாடிக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும்ல, இந்த நத்தை ஏதோ வித்தை வைச்சிருக்கும்னு தோணுது” என்றான் செந்தில்.

“கவனமா பாருங்க” என்றார் அருணா.

நத்தையின் வயிற்றுப்பகுதியில் இருந்து வேறொரு மெலிதான குழல் வெளியில்வருவது போல் தெரிந்தது. மூவரும் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அந்தக் குழல் வேகமாகப் பாய்ந்தது; மணல் துகள்கள் மேலெழும்பின. அடுத்த நொடி அந்த மீன் நத்தைக்கு அருகில் கிடந்தது!

“ஆ” என்று ரோசி ஆச்சரியப்பட்டுக்கொண்டிருந்த போதே இன்னொரு குழல் போன்ற அமைப்பு நத்தைக்குள்ளிருந்து வந்து அந்த மீனை அப்படியே விழுங்கிவிட்டது!

“என்ன நடந்ததுனு எனக்குச் சுத்தமா புரியல” என்று முகத்தைச் சுளித்துக்கொண்டாள் ரோசி.

கேமரா அனுப்பிய காட்சியை மீண்டும் ஒருமுறை ஓடவிட்டார் அருணா. கூடவே இணையத்திலிருந்து கூம்பு நத்தையின் உடல் அமைப்பு பற்றிய வரைபடத்தையும் காட்டினார். “முதல்ல இரை இருக்கானு தேட ஒரு தூம்புக் குழாய் உதவியா இருந்தது. நத்தை இரையைக் கண்டறிஞ்ச பிறகு, அடிப்பகுதியிலிருந்து ஒரு உறிஞ்சுகுழல் (Proboscis) வெளியில் வரும். இதற்குள் ஒரு குத்தீட்டி (Harpoon) போன்ற அமைப்பு இருக்கும். இந்தக் குத்தீட்டியோட வெளிப்புறத்தில் கூர்மையான கொக்கி போன்ற அமைப்பு இருக்கும். இதோட உள்பக்கம் நச்சுப்பையோட பிணைக்கப்பட்டிருக்கும்” என்று சொல்லி நிறுத்தினார் அருணா.

“வெளியில் பார்த்தா ஒரு குழல் தாக்குவதுபோலத் தெரியுது. ஆனா, அந்தக் குழலுக்குள்ளிருந்து நஞ்சு சேர்ந்த ஒரு குத்தீட்டி வந்திருக்கு. அதான் இரை டக்குனு மயங்கி விழுந்ததா, சூப்பர்” என்றான் செந்தில்.

“ஆமாம், ஆனா அதுவும் படிப்படியாதான் நடக்கும். இரையை நெருங்கிட்டாலும் உடனே நஞ்சு வராது. முதலில் உறிஞ்சுகுழல் கொஞ்சம் சுருங்கி விரியும். உள்ளே இருக்கும் குத்தீட்டியில் பாதி அளவு நஞ்சு நிரம்பும். எல்லா நஞ்சும் அங்கு வந்து சேர்வதால் அழுத்தம் அதிகமாகும். அடுத்த ஒரு மைக்ரோ விநாடிக்குள்ள அந்த நஞ்சு முன்னோக்கி வந்து குத்தீட்டி முனையில் சேரும். குத்தீட்டி வெளியில் வந்து இரையைத் தாக்கிடும். குத்தீட்டியோட முனையில் இருக்கும் கொக்கியால் இரை இழுக்கப்பட்டு நத்தைக்குப் பக்கத்தில் வரும். உடனே நத்தைக்குள்ளிருந்து வாய்ப்பகுதி (Rostrum) வெளியில் வந்து இரையை விழுங்கிடும்” என்று விளக்கினார் அருணா.

“மீன் அப்படியே கிடந்ததைப் பார்த்தா இந்த நஞ்சு நரம்பு மண்டலத்தைத் தாக்கிச் செயலிழக்க வைக்கும்னு தோணுது. எல்லாம் எவ்வளவு வேகமா நடந்திருக்கு” என்றாள் ரோசி.

“ஆமா, ஒரு விநாடியில் ஐந்தில் ஒரு பங்கு நேரத்தில் வேட்டை முடிஞ்சுபோச்சு” என்றான் செந்தில்.

“கூம்பு நத்தைகளில் இனத்துக்கு இனம் மட்டுமில்ல, ஒவ்வொரு முறை வேட்டையாடும் போதுகூட நஞ்சின் தன்மை மாறுமாம். தேவைக்கு ஏற்றபடி புரதங்களைக் கலக்கி இந்த நத்தைகள் இரை வேட்டைக்குப் பயன்படுத்தும். இந்த நத்தைகளின் நஞ்சில் 800-க்கும் மேற்பட்ட தனிப் புரதங்கள் இருக்குனு கண்டுபிடிச்சிருக்காங்க. 1977இல்தான் இந்த நஞ்சுப்பொருள்கள் தனியாகப் பிரிக்கப்பட்டன” என்றார் அருணா.

“அது என்ன பரிசுப்பொருளா? அதை எதுக்கு பிரிச்சுப் பார்க்கணும்?” என்றான் செந்தில்.

“எல்லாமே புரதம்தானே, ஏதாவது மருத்துவ ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துவாங்க” என்றாள் ரக்‌ஷா.

“ரொம்ப சரி. இந்தப் புரதங்கள் மருத்துவரீதியா பல பிரச்சினைகளுக்குத் தீர்வு தருமாம். தூக்கமின்மை, நினைவாற்றல் பிரச்சினைகள், சில வகை புற்றுநோய்கள், தொடர்ச்சியான வலி ஆகியவற்றுக்கு இவை உதவலாம் என்பதால் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடக்குது. இந்த நஞ்சிலிருந்து 2004ஆம் ஆண்டு ஒரு வலி நிவாரணி மருந்தையும் உருவாக்கியிருக்காங்க” என்றார் அருணா.

“மீன்களா இருந்தா இதுகிட்ட மாட்டிக்க வேண்டியதுதான். மனிதர்களா இருப்பதால் இந்த நஞ்சே வலி நிவாரணி உருவாக்கப் பயன்படுது” என்றாள் ரக்‌ஷா.

“இல்லை, இதில் சில வகை நத்தைகளின் நஞ்சு மனிதர்களையும் கொல்கிற அளவுக்கு வீரியம் உடையது. சின்ன நத்தை ஆறடி மனிதனையே சாய்க்கும் ஆற்றல் கொண்டதா இருக்கு” என்றார் அருணா.

“எக்காரணம் கொண்டும் எதையும் கையால் தொட வேண்டாம்” என்று மூவரும் ஒரே குரலில் சொன்னார்கள். தலையாட்டி அதை ஆமோதித்தார் அருணா.

விருந்து சாப்பிட்ட திருப்தியில் நத்தை மீண்டும் மணலுக்குள் புதைந்துகொண்டது. ரோபாட் திரும்பி வந்ததும் ஒரு சின்ன உறுமலுடன் நாட்டிலஸ் நீர்மூழ்கி புறப்பட்டது.

(அதிசயங்களைக் காண்போம்)

கட்டுரையாளர்: கடல்சார் ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: nans.mythila@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in