மழலை மதிப்புரை: வேட்டையாடி விளையாடு!

மழலை மதிப்புரை: வேட்டையாடி விளையாடு!
Updated on
2 min read

நாவல்ன்னா என்ன? அதை எப்படியாவது படிக்கணும்னு எனக்கு ஒரே ஆசை. இதை என் அப்பாகிட்ட சொன்னேன். எனது பிறந்த நாள் அன்னைக்கு ஒரு சின்ன தமிழ் நாவலை எனக்குப் பரிசா கொடுத்தாரு எங்கப்பா. நாவலோட தலைப்பைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப ஜாலியாயிடுச்சு. ஏன்னா, இது கடல் வாழ் உயிரினம் பற்றிய நாவல்.

கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய செய்திகள், கதைகள்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த நாவலை மூனே நாள்ல படிச்சுட்டேன். இந்த நாவலோட மையக் கருத்து தேடல். அதை வைச்சு கதையை விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் ஆசிரியர் ஹெர்மன் மெல்வில். தமிழ்ல மோகன ரூபன் எழுதியிருக்காரு. இது 1850-ம் ஆண்டுல எழுதி 1851-ம் ஆண்டுல இங்கிலாந்துல வெளியான நாவலாம்.

இந்த நாவலின் பெயர் என்ன தெரியுமா? ‘திமிங்கில வேட்டை’. திமிங்கில வேட்டையோட, கடல் பயணம் பற்றியது இந்த நாவல். இதுல கதாநாயகன் பேரு இஸ்மாயில். இரண்டாவது கதாநாயகனின் பேரு மோபி டிக். இவன்தான் திமிங்கில நாயகன். இவனைத் தேட ஒரு கப்பல் ஒரு வருஷமா பயணம் போகுது. கடைசியில் மோபி டிக்கைக் கண்டுபிடிக்க முடியாம எல்லாரும் செத்துப்போறாங்க. இஸ்மாயில் மட்டும்தான் உயிர் பிழைத்துக் கதைக்கு உயிர் கொடுக்கிறான்.

அப்புறம், எதற்காகத் திமிங்கிலத்தை வேட்டையாடுகிறார்கள் தெரியுமா? ‘பிளப்பர்’ன்ற கொழுப்புக்காகத்தானாம். கடல்ல திமிங்கிலத்தை வேட்டையாடுறது ஈஸியான விஷயமில்லை. திமிங்கிலம் சுவாசிக்கக் கடல் மட்டத்தோட மேலே வரறப்ப வேட்டையாடணும். விட்டுட்டா திரும்பவும் சந்தர்ப்பம் கிடைக்கக் காத்திருக்கணும். அப்படியே பிடிப்பட்டாலும் போராடிப் பிடிக்க அவ்ளோ கஷ்டப்பட வேண்டியிருக்கும். இப்படி நாவல் பூரா விறுவிறுப்பான தகவல்கள் ஏராளமா கொட்டிக் கிடக்கு.

அப்புறம், திமிங்கிலத்துக்கு எத்தனை வகைகள், அதுபற்றிய தகவல்கள்னு படிக்க நிறைய விஷயங்கள் இருக்கு. கடல்வாழ் உயிரினங்களைப் பத்தி தெரிஞ்சுக்க விரும்புற குழந்தைகளுக்கு ‘திமிங்கில வேட்டை’ நல்ல அனுபவத்தைக் கொடுக்கும்.

நூல் : திமிங்கில வேட்டை
ஆசிரியர் : ஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்
விலை : ரூ. 125 | வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியீடு
முகவரி : 142, ஜானி ஜான் கான் சாலை,
ராயப்பேட்டை, சென்னை - 600 014. | தொலைபேசி : 044-28482441


நூலை மதிப்புரை செய்தவர்: த.க. செங்கதிர்,
9-ம் வகுப்பு, அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளி, சென்னை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in