

கின்னஸ் சாதனை என்றாலே தனி மதிப்புதான். உலக அளவில் மெச்சப்படும் சாதனை இது. கின்னஸ் சாதனை படைக்க எந்தக் கட்டுபாடும் இல்லை. எந்த விஷயத்தை வைத்தும் கின்னஸ் சாதனை படைத்துவிடலாம். கின்னஸ் சாதனை புத்தகத்தில் வெளிவரும்போது ஒவ்வொரு சாதனையும் வியப்பாக இருக்கும். கின்னஸ் சாதனையில் பல வகைகள் உள்ளன. குழந்தைகள் விரும்பக்கூடிய சாதனைகள்கூடத் தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. 2017-ம் ஆண்டுக்கான கின்னஸ் சாதனை புத்தகத்தில் குழந்தைகள் பகுதியில் இடம் பிடித்துள்ள சாதனைகள் என்னென்ன? ஒரு ரவுண்டு பார்ப்போமா?
கை நிறைய பந்து
உங்களுடைய ஒரு கையில் எத்தனை டென்னிஸ் பந்துகளை அடைத்து வைத்துக்கொள்ள முடியும்? நான்கு பந்துகளை வைக்கவே திணறிவிடுவோம் இல்லையா? மகாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்த மகாதியோ புஜ்பால் ஒரு கையில் 23 பந்துகளை ஈஸியாக வைத்துக்கொள்கிறார். இந்தச் சாதனையை 2013-ம் ஆண்டில் இவர் செய்தார். கையில் நிறைய பந்துகளை வைத்துக்கொண்டவர் என்ற கின்னஸ் சாதனை இவரது வசமாகியிருக்கிறார்.
மெகா ஸ்பூன்
உலகிலேயே மிகப் பெரிய ஐஸ் கிரீம் ஸ்பூன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இத்தாலியைச் சேர்ந்த திமிட்ரி பான்சிரா என்பவர் பிரம்மாண்ட ஸ்பூனைக் கொண்டு ஐஸ்கிரீமைப் பரிமாறுகிறார். இந்தச் சாதனை கடந்த ஆண்டு படைக்கப்பட்டது. ஸ்பூனின் நீளம் 1.95 மீட்டர். அகலம் 58 செ.மீ. ஸ்பூனின் ஆழல் 17 செ.மீ. எவ்ளொ பெரிய ஸ்பூன் பாருங்களேன்!
மிரட்டும் கொம்பு
ஆஸ்திரியாவில் லையின்ஸ் என்ற இடத்தில் உள்ள எட்டு வயது ஆடு ஒன்று கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது. எப்படி? அகலமான கொம்பு இந்த ஆட்டுக்கு இருப்பதால் இந்தப் பெருமை. ஆட்டு கொம்பின் ஒரு முனையிலிருந்து இன்னொரு கொம்பின் முனைக்கு உள்ள இடையே உள்ள தூரம் 1.35 மீட்டர். அப்போ எவ்வளவு அகலமான கொம்பு என்று உணர முடிகிறதா?
பிரம்மாண்ட கிடார்
அமெரிக்காவைச் சேர்ந்த லாரன்ஸ் ஸ்டம் என்பவர் மிகப் பெரிய கிடார் ஒன்றைச் செய்திருக்கிறார். அதுவும் வாசிக்கக்கூடிய கிடார் இது. கிடார் 3.99 மீட்டருக்கு நீளமாக உள்ளது. இந்த கிடார் செயல்படும் விதம் கடந்த ஆண்டு மிச்சிகனில் உறுதி செய்யப்பட்டது. வழக்கமான கிடார்களைவிட இது ஏழரை மடங்கு பெரியது.
பெண்ணுக்கு மீசை
இங்கிலாந்தில் வசிக்கிறார் ஹர்னம் கவுர். முழுமையாகத் தாடியுள்ள இளம் பெண் என்ற சாதனைக்காக இவரது பெயர் கின்னஸில் இடம் பிடித்துள்ளது. உடலில் ஏற்பட்ட ஹார்மோன் குறைபாடு காரணமாக 11-வது வயதில் முகத்தில் தாடி, மீசை முளைக்க ஆரம்பித்தது. இப்போது முழுமையாகத் தாடி, மீசையுடன் காணப்படுகிறார் இவர். இந்தச் சோதனையான விஷயம் கின்னஸில் சாதனையாக இடம் பிடித்திருக்கிறது.
2017-ம் ஆண்டுக்கான கின்னஸ் புத்தகத்தில் இப்படி நான்காயிரத்துக்கும் மேற்பட்ட சாதனைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் சில சாதனைகளைத்தான் இப்போது பார்த்திருக்கிறோம். |