

தத்தித் தத்தி தாவிச் செல்லும் தவளைகளும் மழைக் கால அடையாளமாகிவிட்டன. அதற்கேற்ப டூப்ளிகேட் தவளையைச் செய்துபார்ப்போமா?
தேவையான பொருட்கள்
பச்சை வண்ண பேப்பர் கப், பச்சை; மஞ்சள்; சிவப்பு; வெள்ளை வண்ண அட்டைகள், மார்க்கப் பேனா, பென்சில், பசை, கத்தரிக்கோல்.
எப்படிச் செய்வது?
# படத்தில் காட்டியபடி பேப்பர் கப்பைப் பச்சை அட்டை மேலே கவிழ்த்து அதன் வெளி வட்டத்தை வரையுங்கள் (படம் 1). மிக்கிமவுஸ் காது போல இரண்டு வட்டப் பகுதியையும் வரைந்துகொள்ளுங்கள்.
# வரைந்த பிறகு அதை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். வெட்டி எடுக்கும்போது 3 மி.மீ. அளவு அதிகமாகவே வெட்டியெடுத்துக்கொள்ளுங்கள். அதைத் திருப்பி வைத்து அதில் தவளையின் கால்களை மார்க்கர் பேனா கொண்டு வரையுங்கள் (படம் 2).
# கண்களுக்காக இரண்டு பச்சை வட்டங்களை ஒரே அளவில் வெட்டிக்கொள்ளுங்கள். அது மட்டுமல்லாமல் 2 வெள்ளை வட்டங்களையும் சற்றுச் சிறிதாக வெட்டியெடுத்து, அதில் மார்க்கர் பேனாவால் கண் கருவிழியை வரைந்து இதைப் பச்சை வட்டத்தின் நடுவில் ஒட்டிவிடுங்கள் (படம் 2).
# வாய்ப் பகுதிக்காகச் சிவப்பு அட்டையில் முட்டை வடிவத்தில் வெட்டிக்கொள்ளுங்கள். பிறகு கிரீடத்துக்காக மஞ்சள் அட்டையில் மூன்று முனைகளை வெட்டியெடுத்துக் கீழ்ப் பகுதியை சற்று மடித்துக்கொள்ளுங்கள் (படம் 2).
# இப்போது படம் 3-ல் காட்டியது போல பேப்பர் கப்பைக் கவிழ்த்து, கால் வரைந்த அட்டையில் சரியாகப் பசையைத் தடவி ஒட்டுங்கள். கண் வட்டங்கள் இரண்டையும், வாய் சிவப்பு முட்டை வடிவ அட்டையையும் படத்தில் காட்டியபடி ஒட்டுங்கள்.
# கிரீடத்தை மேலே (கப்பின் அடிப்பகுதி) படத்தில் காட்டியபடி மடித்த பகுதியைப் பசை தடவி ஒட்டுங்கள். மார்க்கர் பேனா கொண்டு தவளை வாயின் நடுவே கோடு வரையுங்கள். இதேபோல இரண்டாவது தவளையைச் செய்து கிரீடத்தை மட்டும் சற்று வடிவம் மாற்றி (படம் 2) வெட்டி, ராஜா தவளைக்கு வையுங்கள்.
இந்தத் தவளைகளைப் பரிசாகவும் கொடுக்கலாம். எப்படி? தவளையின் கால்கள் வட்ட அட்டையை ஒட்டும் முன் கப்புக்குள் சாக்லெட்களைப் போட்டு ஒட்டிவிடுங்கள். பிறகு அதைப் பிறந்த நாட்களில் உங்கள் நண்பர்களுக்குப் பரிசளிக்கலாம்.
என்ன! தவளைகளைச் செய்யத் தயாராகிவிட்டீர்களா?