Published : 03 Aug 2022 05:44 PM
Last Updated : 03 Aug 2022 05:44 PM

நீபாவும் பட்டாம்பூச்சியும் - கதை - சாமி கிரிஷ்

என்றைக்கும் இல்லாத பரபரப்போடு இயங்கிக்கொண்டிருந்தது நீபாவின் வகுப்பறை. காரணம், அன்றைய முதல் பாடவேளையின்போது வகுப்பாசிரியரால் அறிவிக்கப்பட்ட ஓவியப் போட்டிதான். இதுவரை எந்தப் போட்டியிலும் நீபா கலந்துகொண்டதில்லை. இந்தப் போட்டியில் கண்டிப்பாக அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று ஆசிரியர் சொன்னதால், பெயரைக் கொடுத்திருந்தாள் நீபா.

மாணவர்களிடையே நேர்மைப் பண்பை வளர்க்கும் விதமாகப் போட்டிக்கான ஓவியங்களை வீட்டிலிருந்தே வரைந்து வரலாம் என்றும் கூறியிருந்தார் ஆசிரியர். இதனை நல்ல வாய்ப்பாகக் கருதிக்கொண்ட நீபா, தன் அம்மா, அண்ணன், அப்பா யாரிடமாவது கொடுத்து வரைந்து வாங்கிவிடலாம் என எண்ணியிருந்தாள்.

நீபா தன் ரகசியத் திட்டத்தைப் பற்றி யாரிடமும் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை. வீட்டுக்குச் சென்றதும் அண்ணனிடம் வரைந்து கொடுக்கச் சொன்னாள். அவனோ தனக்கு நிறைய வீட்டுப்பாடம் செய்ய வேண்டியிருப்பதாகக் கூறி மறுத்துவிட்டான். அடுத்ததாக அப்பாவிடம் சென்றாள் நீபா. அவரோ தனக்கு நிறைய வேலைகள் இருப்பதாகவும் அம்மாவுக்குத்தான் ஓவியம் நன்றாக வரையத் தெரியும் என்றும் கூறிவிட்டார். உடனே அம்மாவை வரைந்து தரச் சொல்லி நச்சரித்தாள் நீபா. வேலை அதிகம் இருப்பதால், காலையில் நிச்சயம் வரைந்து தருகிறேன் என்றார் நீபாவின் அம்மா. நிம்மதியாக உறங்கச் சென்றாள் நீபா.

பறவைகளின் ஒலி இசைக்க, அடர்ந்த மரத்தடியில் வெள்ளைத் தாளை வைத்துக்கொண்டு நின்றாள் நீபா. அவளைச் சுற்றிலும் வண்ணப் பென்சில்கள் கிடந்தன. வாத்து வடிவ பென்சில் துருவியும் யானை வடிவ மிகச் சிறிய அழிப்பானும் இருந்தன. ஆனால், என்ன வரைவது என்றே நீபாவுக்குத் தெரியவில்லை. கண்மூடி சிந்தித்தாள். கண்விழித்த நீபாவுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அவளுடைய தாளில் அழகிய பட்டாம்பூச்சி ஒன்று அமர்ந்து இருந்தது. நீபாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அப்படியே பட்டாம்பூச்சியை அச்சு எடுத்து, பிறகு வண்ணம் தீட்டிவிடலாம் என எண்ணினாள். அதற்காகச் சிறிது நேரம் அப்படியே அமர்ந்து இருக்க முடியுமா என்று பட்டாம்பூச்சியிடம் அனுமதி கேட்டாள். ஆனால், பட்டாம்பூச்சி முடியாது என்று மறுத்துவிட்டது. நீபாவின் முகம் வாடிவிட்டது.

"இது என்ன மாதிரியான பழக்கம் நீபா? வீட்டில் உள்ளவர்களை வரைந்து தரச் சொல்லிக் கெஞ்சினாய். இப்போதோ என்னை உட்கார வைத்து அச்சு எடுக்க ஆசைப்படுகிறாய். சொந்தமாக ஒரு காட்சியைப் பார்த்தோ அல்லது கற்பனை செய்தோ வரைய மட்டும் முயற்சி எடுக்க மாட்டேங்கிற” என்றது பட்டாம்பூச்சி.

நீபா அமைதியாக இருந்தாள்.

"இது உனக்கான ஓவியப் போட்டிதானே? நீதானே முயற்சி எடுத்து வரைய வேண்டும்? முதல் முயற்சியிலேயா வெற்றி கிடைத்துவிடும்? தொடர்ந்த முயற்சிதானே நிரந்தர வெற்றியைத் தரும். உனக்காக அந்தப் பூ மீது அமர்கிறேன். நீ என்னைப் பார்த்து வரை” என்ற பட்டாம்பூச்சி பறந்து சென்று பக்கத்தில் பூத்திருந்த பூவின் மீது அமர்ந்தது.

நீபா வேகமாக அந்தக் காட்சியை வரைந்து முடித்தாள்.

"இப்படித்தான் ஒரு காட்சியை நினைத்து ஓவியமாக வரைய வேண்டும்” என்று பாராட்டிவிட்டு, பறந்து சென்றது பட்டாம்பூச்சி.
நீபா மகிழ்ச்சியோடு கண் விழித்தாள். தான் வரைந்த ஓவியத்தைத் தேடினாள். ஆனால், அது இல்லை. பிறகுதான் கனவு என்பதைப் புரிந்துகொண்டாள். வாசலுக்கு வந்தாள் நீபா. அப்பாவின் 'பைக்' கண்ணாடியில் குருவி ஒன்று முகம் பார்த்து, கொத்திக்கொண்டிருந்தது. நீண்ட நேரம் அந்தக் காட்சியைக் கண்ட நீபா, அப்படியே அதனை உள்வாங்கிக்கொண்டாள். வரைந்து தரட்டுமா என்று கேட்ட அம்மாவிடம் வேண்டாம் என்று மறுத்துவிட்டாள்.

பள்ளிக்குக் கிளம்பினாள் நீபா. வழியில் குருவி ஒன்று தண்ணீர்க் குழாயில் சொட்டும் நீரைக் குடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தது. இந்தக் காட்சியும் நீபாவின் நெஞ்சில் பதிந்தது. பள்ளி சென்ற நீபா, தான் பார்த்த இரண்டு குருவிகளின் காட்சிகளையும் ஓவியமாகத் தீட்டினாள்.

பரிசுகளுக்காகத் தேர்வு செய்யப்பட்ட ஓவியங்களில் ஓர் ஓவியத்தை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தார் ஆசிரியர். அது நீபா வரைந்த ஓவியம்தான்!

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x