கதை: பூனையின் விருந்துக்குச் சென்ற நரி

கதை: பூனையின் விருந்துக்குச் சென்ற நரி
Updated on
2 min read

மகேந்திரபுரி எல்லையில் அடர்ந்த காடு இருந்தது. அந்தக் காட்டில் விலங்குகள் சுதந்திரமாக உலா வருவதுண்டு. அதற்குக் காரணம் மகேந்திரபுரி அரசன், ‘எந்த விலங்குக்கும் தொந்தரவு செய்யக் கூடாது, அப்படிச் செய்பவரைக் கண்டால் தண்டனை’ என்று தண்டோரா போட்டிருந்தார்.

காட்டில் திடகாத்திரமான நரி ஒன்று வசித்துவந்தது. ஒரு நாள் காட்டைச் சுற்றி வரும்போது, திசை தெரியாமல் வேறு திசைக்குச் சென்றுவிட்டது.

‘என்னடா இது! இரை தேடிவிட்டு வருவதற்குள் காடு மாறிவிட்டதா! பழகிய இடமாகவே தெரியவில்லை. ஐயோ… மனிதர்களின் குரல்கள் வேறு கேட்கின்றன…’ என்று யோசித்தபடியே வந்துகொண்டிருந்தது நரி.

சில நிமிடங்களில் தான் நகரத்துக்கு வந்துவிட்டதைப் புரிந்துகொண்டது. என்ன செய்யலாம், யாரிடம் காட்டுக்கு வழி கேட்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, பூனையின் ‘மியாவ்’ குரல் கேட்டது. நரி ஆவலுடன் திரும்பிப் பார்த்தது.

ஒரு புதரிலிருந்து வெளிவந்த பூனை, “என்ன, இந்தப் பக்கம்? ஆச்சரியமா இருக்கே! யாரும் பார்த்துடப் போறாங்க. இப்படிப் புதர்ப் பக்கமா வா” என்று நரியை அழைத்தது.

“ஏதோ யோசனையில் வழி தவறி இந்தப் பக்கம் வந்துவிட்டேன். இப்ப எப்படிக் காட்டுக்குப் போறதுன்னு தெரியல. நீ கொஞ்சம் உதவி செய்தால், சென்றுவிடுவேன்” என்றது நரி.

“இதெல்லாம் ஒரு உதவியா? என் குட்டிகளுக்குப் பால் கொடுத்துட்டு வந்துடறேன். அதுவரை கொஞ்சம் இளைப்பாறு” என்று சொல்லிவிட்டு, மறைவிடத்துக்குச் சென்றது பூனை.

நரி கொஞ்ச நேரம் தூங்கியது. சற்று நேரத்தில் திரும்பி வந்த பூனை, நரியை எழுப்பியது. இரண்டும் பேசிக்கொண்டே நடந்ததில் அலுப்பே தெரியவில்லை.

“காடு வந்துவிட்டது. நான் கிளம்பட்டுமா?”

“இவ்வளவு தூரம் வந்து, உதவி செய்த உனக்கு நான் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. பக்கத்தில்தான் வீடு. உன் குட்டிகளுக்குச் சாப்பிட ஏதாவது தருகிறேன். நீயும் சாப்பிட்டுவிட்டுத்தான் போகணும்” என்று அன்புடன் சொன்னது நரி.

பூனையால் நரியின் அன்பை மறுக்க முடியவில்லை. நரி சட்டென்று ஒரு விருந்து வைத்து அசத்திவிட்டது. பூனைக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உரக்கப் பாட ஆரம்பித்தது. நரியின் குழந்தைகள் பாடலுக்கு ஏற்ப நடனமாடின.

“ஐயோ… நேரமாகிவிட்டது. அடுத்த வாரம் நீ என் வீட்டுக்குக் கட்டாயம் வரவேண்டும். என் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் விழா” என்றது பூனை.

நரியும் வருவதாக ஒப்புக்கொண்டது.

ஒரு வாரத்துக்குப் பிறகு பூனையின் வீட்டு விசேஷத்துக்காக நரி மீண்டும் நகரத்துக்குச் சென்றது.

நரியைக் கண்டதும் பூனைக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. “குட்டிகளை அழைத்து வரவில்லையா?” என்று கேட்டது.

“இது என்ன காடா, குட்டிகளை அழைத்து வருவதற்கு? ரொம்ப ஆபத்தான இடம். உனக்காகத்தான் வந்தேன்” என்றது நரி.

நரிக்குச் சுவையான உணவு கொடுத்து உபசரித்தது பூனை. மகிழ்ச்சியில் இருந்த நரிக்கு, பூனை அன்று பாடியது நினைவுக்கு வந்தது. தானும் ஒரு பாடலைப் பாட ஆரம்பித்தது. விழா களைகட்டியது. திடீரென்று தன்னை மறந்து ஊளையிட ஆரம்பித்தது நரி.

“என்ன காரியம் செய்கிறாய்? இது காடு அல்ல, நாடு. மனிதர்கள் வந்துவிடப் போகிறார்கள்” என்று எச்சரித்தது பூனை.

தன் தவறை உணர்ந்த நரி, திருதிருவென்று விழித்தது.

“ஐயோ… அங்கே பாரு… மனிதர்கள் தடியோடு வருகிறார்கள். உன்னை என் வீட்டு விசேஷத்துக்கு அழைத்து, ஆபத்தைத் தேடித் தந்துவிட்டேன். இந்தப் பக்கமாகக் காட்டுக்கு ஓடிவிடு” என்றது பூனை.

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிவந்த நரியைப் பார்த்த காட்டு விலங்குகள், காரணத்தைக் கேட்டன. நடந்தவற்றைச் சொன்னது நரி.

“நம் எல்லை எதுவரை என்பது எங்களுக்கு எல்லாம் தெரியும். அதனால் நாங்கள் மற்றவர்கள் என்ன சொன்னாலும் மதி மயங்க மாட்டோம். பூனை நல்ல எண்ணத்தில்தான் உன்னை அழைத்தது. ஆனால், அங்கு செல்வது உன் உயிருக்கே ஆபத்தானது என்று தெரிந்தும் நீ சென்றதுதான் தவறு” என்றது மற்றொரு நரி.

“அன்பில் ஆபத்தை மறந்துவிட்டேன். இனி கவனமாக இருப்பேன்” என்றது நரி.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in