ஆழ்கடல் அதிசயங்கள் 17: கடலுக்கு அடியில் வெந்நீர் ஊற்று!

வெந்நீர் ஊற்று
வெந்நீர் ஊற்று
Updated on
3 min read

தென் அமெரிக்காவில் உள்ள ஆழ்கடல் பகுதிக்கு வந்து, மெல்ல கடல் தரையை நோக்கிச் சென்றது நாட்டிலஸ் நீர்மூழ்கி. ஏதோ ஒரு வடிவம் தொலைவில் தெரிந்ததும், நீர்மூழ்கியிலிருந்து அதிக ஆற்றல் கொண்ட கேமரா ரோபாட்டை அனுப்பினார் அருணா.

“இந்த வாழிடத்துக்குப் பக்கத்துல நாம் போக முடியாது, தொலைவில் இருந்துதான் பார்க்கணும்” என்றார் அருணா.

கேமரா அனுப்பும் காட்சிகளை நீர்மூழ்கிக்குள் இருந்தபடியே நேரலையில் அனைவரும் பார்த்தனர்.

உயரமான கூம்பு வடிவிலான சிறு மலையின் உச்சியிலிருந்து புகை போல ஏதோ கறுப்பாக வந்துகொண்டிருந்தது.

“அட! கடலுக்கடியில் எரிமலைகூட இருக்கு போல!” என்றாள் ரக்‌ஷா.

“பார்க்க இது எரிமலை மாதிரி தெரிஞ்சாலும் இதில் வருவது நெருப்புக் குழம்பும் இல்ல, புகையும் இல்ல” என்றார் அருணா.

கேமரா பக்கத்தில் போனது. கறுப்புத் துகள்கள் நிறைந்த நீர், அதிவேகத்துடன் மலைக்குள்ளிருந்து வந்துகொண்டிருந்தது. மூவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.

“இது கடலுக்கடியில் உள்ள வெந்நீர் ஊற்று (Hydrothermal vent). ஐஸ்லாந்து மாதிரியான பகுதிகளில் பூமிக்கு அடியில் இருந்து வெந்நீர் பீய்ச்சி அடிக்கும்னு படிச்சிருக்கோமே, அதேமாதிரி இது கடலுக்கடியில் உள்ள ஊற்று. சில நிலவியல் அமைப்புகளால பூமித்தகட்டில் விரிசல் ஏற்படும். அந்த விரிசல்களுக்குள் கடல்நீர் போய்விடும்.

அந்தக் கடல்நீர், பூமிக்கடியில் உள்ள எரிமலைக்குழம்பு பட்டு சூடாகி, அங்கிருக்கும் உலோகங்களையும் கரைத்துக்கொண்டு, வெந்நீராக வெளியில் வரும். அந்த உலோகங்கள் எல்லாம் பூமிக்கு மேலே வந்ததும் இறுகி கூம்பு மாதிரி ஆகிடும். இதில் வெளிவரும் வேதிப்பொருள்களைப் பொறுத்துப் புகையின் நிறம் இருக்கும்.

கால்சியம் அதிகமா இருக்கும்போது வெள்ளை நிறத்தில் நீர் வரும், சல்பைடுகள் கொண்ட நீர் கறுப்பு நிறத்தில் இருக்கும்” என்று விளக்கினார் அருணா.

“சாதா வெந்நீருக்கு தூரத்துலயே வண்டியை நிறுத்திட்டு இப்படி கேமராவில் எல்லாத்தையும் பார்க்கணுமாக்கும்” என்று கேட்டாள் ரக்‌ஷா.

“வெந்நீர்னா சும்மா இல்லை, இதோட சராசரி வெப்பநிலை 400 டிகிரி செல்சியஸ் இருக்கும், அதாவது நீரின் கொதிநிலையைப் போல நாலு மடங்கு!” என்றார் அருணா.

“இது எப்படித் திரவமா இருக்கு? நூறு டிகிரி வந்தாலே தண்ணீர் ஆவியாகிடுமே” என்றான் செந்தில்.

செதில்கால் நத்தை
செதில்கால் நத்தை

“கடலுக்கடியில் போகப் போக அழுத்தம் அதிகரிக்கும். இங்கே இருக்கும் அழுத்தம் கடல்மட்டத்தின் அழுத்தத்தைப் போல 200 மடங்கு இருக்கும். அதனால உலோகத்தையே உருக்கும் அளவுக்கு வெப்பநிலை அதிகமா இருந்தாலும் நீர் திரவமாகவே இருக்கு” என்றார் அருணா.

“அதீத அழுத்தம், தாங்க முடியாத வெப்பம், இதில் உலோகக் கலவை வேற. நம்ம ரக்‌ஷா மட்டுமில்ல, எதுவுமே இந்த வெந்நீர் ஊற்றுக்குள்ள நீந்திப் போக முடியாதுபோல” என்றான் செந்தில். அருணா புன்னகையுடன் கேமரா காட்சிகளைக் காட்டினார். அங்கே புழுக்களும் நண்டுகளும் போட்டி போட்டுக்கொண்டு ஊர்ந்துகொண்டிருந்தன!

பாம்பேய் புழு
பாம்பேய் புழு

“ஆ... இது எப்படிச் சாத்தியம்?” என்று கத்திவிட்டாள் ரோசி.

“இது போன்ற விலங்குகளை Extremophilesனு சொல்வோம். அதீதமான சூழலிலும் இவை நல்லா வாழும். லிப்ஸ்டிக் புழு (Lipstick worm), செதில்கால் நத்தை (Scaly foot gastropod), பாம்பேய் புழு (Pompeii worm), வெண்ணிற நண்டுகள், இறால்கள்னு இங்க ஒரு முழுச் சூழல் வலைப்பின்னலே இருக்கு” என்றார் அருணா.

“வெப்பத்தையும் அழுத்தத்தையும் தாங்கிட்டு வாழ்ந்திடலாம், சாப்பாடு இல்லாம வாழ முடியுமா? இங்க ஒண்ணும் இரை கிடைப்பதுபோலத் தெரியலையே. சூரிய வெளிச்சமும் இல்லாம தாவரங்களும் வளராது...” என்றாள் ரோசி.

“ஒளியைப் பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை செய்யும் தாவரங்கள் போலவே, இங்கிருக்கும் வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி வேதிச் சேர்க்கை (Chemosynthesis) செய்து உணவு தயாரிக்கும் பாக்டீரியாக்கள் உண்டு. அவை தயாரிக்கும் உணவைத்தான் இந்த விலங்குகள் சாப்பிடும்.”

லிப்ஸ்டிக் புழு
லிப்ஸ்டிக் புழு

“இது உண்மையிலேயே சூப்பர் வாழிடம்தான்” என்றாள் ரக்‌ஷா.

“இதுபோன்ற வெந்நீர் ஊற்றுகளில்தான் முதல் உயிரி செல்கள் உருவானதா ஒரு கருதுகோள் இருக்கு. எதிர்காலத்தில் பூமியில் உள்ள உயிர்கள் அழிந்துவிட்டால் மறுபடி உயிர் உருவாக இந்த வாழிடம் உதவலாம்னுகூடச் சில விஞ்ஞானிகள் சொல்றாங்க” என்றார் அருணா.

“பாக்டீரியா மாதிரி யாராவது சாப்பாடு செஞ்சு கொடுத்தா நல்லாதான் இருக்கும். முன்னொரு காலத்தில் இந்த வெந்நீர் ஊற்றில் ஒரு விலங்கா இருந்திருப்பேனோ?” என்று செந்தில் சொல்ல, யாரை எந்த உயிரியோடு ஒப்பிடலாம் என்று மூவரும் விவாதிக்கத் தொடங்கினர்.

உயிர்களின் தொட்டிலான அந்த வாழிடத்தில் தொடர்ந்து வெந்நீர் கொப்பளித்துக்கொண்டிருந்தது. கேமரா ரோபாட் திரும்பி வந்ததும் புழுதி கிளப்பாமல் அமைதியாகப் புறப்பட்டது.

(அதிசயங்களைக் காண்போம்)

கட்டுரையாளர், கடல்சார் ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: nans.mythila@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in