டிங்குவிடம் கேளுங்கள்: அணில் கடித்த கொய்யாப்பழம் இனிப்பது ஏன்?

டிங்குவிடம் கேளுங்கள்: அணில் கடித்த கொய்யாப்பழம் இனிப்பது ஏன்?
Updated on
2 min read

அணில் கடித்த கொய்யாப்பழம் இனிப்பது ஏன், டிங்கு?

- அ. ஷமீதா, 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

கொறிப்பன வகையைச் சேர்ந்த அணிலுக்குப் பற்கள் வளர்ந்துகொண்டே இருக்கும். அளவுக்கு அதிகமாகப் பற்கள் வளர்ந்தால், சாப்பிட முடியாது. அதனால் எதையாவது கொறித்து, பற்களின் நீளத்தைக் குறைக்க வேண்டிய தேவை அணிலுக்கு இருக்கிறது.

பசி இல்லை என்றாலும் கனிந்த பழங்களை அரைகுறையாகக் கொறித்துவிட்டுச் சென்றுவிடுகிறது. அணில் கடித்ததால் அந்தப் பழம் இனிப்பதில்லை, இனிப்பான பழத்தை அணில் கடித்திருக்கிறது, அவ்வளவுதான்.

அணில் மூலம் ஏதாவது நோய் நமக்குத் தொற்றிவிடும் சாத்தியம் இருப்பதால், அணில் கடித்த பழங்களைத் தவிர்ப்பது நல்லது. அல்லது, கடித்த இடத்தை வெட்டி வீசிவிட்டு, பழத்தை நன்றாகத் தண்ணீரில் கழுவிவிட்டுச் சாப்பிடலாம், ஷமீதா.

இரவு தூங்கும்போது குளிர் அதிகமாவது ஏன், டிங்கு?

- ஹெனன் ஜொனிலா, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பள்ளி, திருச்சி.

இரவில் சூரிய ஒளி கிடையாது. அதனால், பகலைவிட இரவில் வெப்பம் குறைவாகவே இருக்கும். பகலில் வேலை செய்யும்போது உடல் அதிக ஆற்றலைச் செலவு செய்கிறது. அதனால், உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது. இரவில் தூங்கும்போது உடல் உறுப்புகள் வேலை செய்தாலும் குறைவான ஆற்றலே செலவாகிறது என்பதால் உடல் வெப்பநிலையும் ஒன்று, இரண்டு டிகிரிகள் குறைவாக இருக்கும். அதனால், பகலைவிட இரவில் குளிர்ச்சியை அதிகமாக உணர முடிகிறது, ஹெனன் ஜொனிலா.

தவறாகப் பதில் சொன்னால் ஆசிரியர் ஏன் என் கையால் என் தலையில் குட்டச் சொல்கிறார், டிங்கு?

- வி. சிவானி, 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கக் கூடாது என்பதால், தவறான பதிலைச் சொல்லும்போது, உங்களை நீங்களே குட்டிக்கொள்ளும்படிச் சொல்கிறார் என்று நினைக்கிறேன். இப்படிக் குட்டுவதால் மீண்டும் அந்தத் தவறைச் செய்ய மாட்டீர்கள், அடுத்த முறை இதை நினைவில் வைத்து, சரியான பதிலைச் சொல்வீர்கள் என்று நினைத்திருக்கலாம், சிவானி.

உப்பைச் சுற்றிப் போட்டால் திருஷ்டி போகும் என்பதில் உனக்கு நம்பிக்கை உண்டா, டிங்கு?

- மெல்வின், 9-ம் வகுப்பு, ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா, திருச்சி.

பிறரின் பொறாமையான பார்வை நமக்கு ஏதாவது தீங்கு செய்துவிடும் என்று நம்புகிறவர்கள், உப்பு, தேங்காய், பூசணி போன்றவற்றைச் சுற்றிப் போட்டால் திருஷ்டி கழிந்துவிடும் என்றும் நம்புகிறார்கள். இது வெறும் நம்பிக்கைதான். இந்த நம்பிக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை, மெல்வின்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in