மாய உலகம்! - சொர்க்கமும் நரகமும்

மாய உலகம்! - சொர்க்கமும் நரகமும்
Updated on
3 min read

சொர்க்கத்தை எனக்கு யார் முதல் முதலில் அறிமுகப்படுத்தி வைத்தார்கள் என்று நினைவில்லை. எப்போது என்பதும் மறந்துபோய்விட்டது. அநேகமாக யாரோ சொன்ன ஏதோ ஒரு கதையின் வழியாகத்தான் அந்த இடத்தை நான் தெரிந்துகொண்டிருக்க வேண்டும்.

ஒரு கதை, இன்னொரு கதை, மற்றொன்று என்று நான் விரும்பிக் கேட்ட பல கதைகளில் மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டே இருந்தது சொர்க்கம். நான் வளர, வளர சொர்க்கம் பற்றிய கனவும் எனக்குள் வளர ஆரம்பித்துவிட்டது.

ஏக்கமும்தான். இவ்வளவு அழகான, இவ்வளவு அமைதியான, இவ்வளவு மகிழ்ச்சி அளிக்கும் ஓரிடம். அப்படி எங்கேதான் ஒளிந்துகொண்டிருக்கிறது? அந்த இடத்துக்கு எப்படிப் போகவேண்டும்?

எங்கே இருக்கிறது என்றுதான் தெரியாதே தவிர, சொர்க்கம் எப்படி இருக்கும் என்று கேட்டால் ஏதோ அங்கேயே வாழ்ந்துவிட்டு வந்ததுபோல் சொல்வேன். கீச்சுக் கீச்சு என்றுதானே கிளி இங்கெல்லாம் கத்தும்? சொர்க்கத்தின் கிளி, ‘என்ன உமர் கய்யாம், சாப்பிட்டாயா?’ என்று தோளில் வந்து அமரும்.

குளத்தில் இறங்கினால் மீன்கள் தாவி வந்து கால்களை முத்தமிடும். ஒரு சிறிய குன்றின் மீது ஏறி நின்றுகொண்டு மான் கதை சொல்லும். சிறுத்தை அடக்கமாக அமர்ந்து கேட்கும். சீக்கிரம் முடித்துவிட்டது. இன்னொரு கதை சொல்லு என்று புலி கோபித்துக்கொள்ளும்.

இங்கிருந்து பார்க்கும்போது பொட்டுபோல் இருக்கும் நட்சத்திரம், சொர்க்கத்தில் உங்களுக்கு அருகில் வந்து நின்று மின்னும். நீங்கள் தொட்டுப் பார்க்கலாம். அள்ளி அணைக்கலாம். பஞ்சுபோல் மிதந்து, மிதந்து வரும் மேகத்தைக் கைகாட்டி நிறுத்தி, மேலே ஏறி அமர்ந்துகொண்டு உலா வரலாம்.

மணம் தரும் எல்லா மலர்களையும் சுவை தரும் எல்லாக் கனிகளையும் சொர்க்கத்தில் காணலாம். அருவியில் குளிக்கலாம். மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சத்தில் புத்தகம் படிக்கலாம். புறாவோடு புறாவாக இறக்கை முளைத்துப் பறக்கலாம். சிங்கக்குட்டிகளைக் கட்டிப்பிடித்து, உருண்டும் புரண்டும் விளையாடலாம். கரடியோடு சேர்ந்து தேன் சுவைக்கலாம். யானையின் தும்பிக்கையில் சாய்ந்து படுத்துத் தூங்கலாம்.

நரகமும் இதேபோல் ஒரு கதையில்தான் அறிமுகமானது. அப்பப்பா, கேட்கவே கேட்காதீர்கள். பயங்கரம் என்றால் அப்படி ஒரு பயங்கரம். அதைப் பற்றி மூச்சுகூட விடாமல் இருப்பதே நல்லது. நரகம் எங்கே இருந்தால் என்ன, எப்படியும் அதை நான் எட்டிக்கூடப் பார்க்கப்போவதில்லை. என் கனவு, சொர்க்கத்தில் கால் பதிப்பது மட்டுமே.

சாமர்கண்டில் இருக்கும் எல்லாரிடமும் கேட்டுப் பார்த்துவிட்டேன். ஒருவர் பாக்கி இல்லாமல் எல்லாரும் கையை வானத்தை நோக்கி உயர்த்தி, அதோ அங்கேதான் இருக்கிறது சொர்க்கம் என்றார்கள். நரகமும்கூட மேலேதான் இருக்கிறதாம்.

நானும் ஒட்டகச்சிவிங்கி போல் கழுத்தைத் திருப்பியும் நீட்டியும் மடக்கியும் தேடிவிட்டேன். சொர்க்கம் தென்படவில்லை. ஒருவேளை அறிஞர்களுக்குத் தெரிந்திருக்குமோ, அவர்கள் எழுதி வைத்திருப்பார்களோ என்று சந்தேகப்பட்டு எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டேன். அச்சிலுள்ள எல்லாப் புத்தகங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு தேடினேன்.

வானவியல் தெரிந்தால் சொர்க்கத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்று எங்கோ எழுதியிருந்ததைப் படித்துவிட்டு, ஆண்டுக் கணக்கில் இரவும் பகலுமாக வானத்தை ஆராய்ந்தேன். கணிதம் கற்காமல் வானவியலில் தேர்ச்சிபெற முடியாது என்பதை உணர்ந்து கணிதம் பயின்றேன்.

ஒரு வரலாற்று நூல் தற்செயலாகக் கண்ணில் பட, அதை எடுத்துக்கொண்டு வாசிக்க ஆரம்பித்து, அதன்பின் வரலாற்றைப் பின்தொடர ஆரம்பித்துவிட்டேன். வரலாறு என் கையைப் பிடித்துத் தத்துவத்திடம் கொண்டு சென்று சேர்த்தது. தத்துவம் படிக்க ஆரம்பித்தேன்.

தத்துவம் படித்த பிறகு வானத்தைப் பார்த்தபோது வேறு வானம் தெரிந்தது. வரலாறு கற்ற பிறகு மனிதர்களைப் பார்த்தபோது அவர்கள் புதிய மனிதர்களாக மாறியிருந்தார்கள். மனிதர்களைப் பார்த்துவிட்டு, கதைகளைப் படித்தபோது கற்பனை மேலும் விரிந்தது.

அவ்வாறு விரிந்த கற்பனையைக் கொண்டு வானத்தை மீண்டும் பார்த்தேன். புரிந்துவிட்டது. இவ்வளவு காலமும் நான் தவறான இடத்தில் தேடிக்கொண்டு இருந்திருக்கிறேன். சொர்க்கம் வானில் இல்லை.

கதைகள் கேட்க நான் ஆர்வத்தோடு அமர்ந்தபோது சொர்க்கமும் என்னோடு அமர்ந்தது. நான் கண்களை மூடிக்கொண்டு கனவு கண்டபோது சொர்க்கம் அந்தக் கனவில் விரிந்தது.

நான் எழுதவும் படிக்கவும் கற்றபோது சொர்க்கம் என்னைத் தட்டிக்கொடுத்தது. நான் கணக்கு போட்டபோது அட என்று சொர்க்கம் என்னைப் பார்த்து வியந்தது. நான் வரலாறு கற்றபோது, தத்துவம் பயின்றபோது, நட்சத்திரங்களையும் நிலவையும் ஆழமாக அறிந்துகொண்டபோது என் அறிவு விரிவடைந்தது அல்லவா? அதுதான் சொர்க்கம்.

வானின் அற்புதங்களைக் காணாமல் கண்களை மூடிக்கொள்ளும்போது, கற்க மாட்டேன் என்று புத்தகங்களை ஒதுக்கி வைக்கும்போது, சக மனிதர்களை நான் புரிந்துகொள்ள மறுக்கும்போது எனக்குள் இருள் தோன்றுகிறது. அந்த இருளில் நரகம் விழித்துக்கொள்கிறது.

அறிவு என்பது சொர்க்கம் என்றால் அறியாமை நரகம். கற்பனை என்பது சொர்க்கம் என்றால் வறண்டு போன மனம் நரகம். தேடல் சொர்க்கம் என்றால் முடங்கிப்போவது நரகம். எனக்குச் சொர்க்கம் வேண்டுமா, நரகம் வேண்டுமா என்பதை நான்தான் முடிவு செய்கிறேன். நான் சொர்க்கத்தில் வாழவேண்டுமா அல்லது நரகத்திலா என்பது என்னிடம்தான் இருக்கிறது.

என்னிடம் புத்தகங்கள் இருக்கின்றன. என் வானில் நட்சத்திரங்கள் நிறைந்திருக்கின்றன. என் மக்கள் அன்பானவர்களாக இருக்கிறார்கள். என் கதைகள் முடிவில்லாமல் நீண்டுகொண்டே போகின்றன. என் மனம் குளிர்ந்து இருக்கிறது. எனவே நான் சொர்க்கத்தில் வாழ்கிறேன்.

(உமர் கய்யாம் - பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர், கணிதவியலாளர், வானவியலாளர், தத்துவஞானி).

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in