சென்னை செஸ் ஒலிம்பியாட் 2022: இந்தியாவின் பெருமிதம்!

சென்னை செஸ் ஒலிம்பியாட் 2022: இந்தியாவின் பெருமிதம்!
Updated on
2 min read

வேட்டி, சட்டை அணிந்த ‘தம்பி’ என்கிற குதிரை சின்னம் சென்னை முழுவதும் காணப்படுகிறது. நேப்பியர் பாலம் கறுப்பு - வெள்ளைக் கட்டங்களால் வசீகரிக்கிறது.

சென்னை மட்டுமல்லாமல் இந்தியாவே விழாக்கோலம் பூண்டிருப்பதற்குக் காரணம், 44ஆவது செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நாளை தொடங்குகிறது. ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறவிருக்கும் இந்தப் போட்டிகளில் 187 நாடுகளைச் சேர்ந்த, 343 அணிகள் பங்கேற்கின்றன.

வரலாறு

1924ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் செஸ் விளையாட்டைச் சேர்த்துக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால், ஒலிம்பிக் போட்டியின் இறுதி நாளன்று உலக செஸ் கூட்டமைப்பு (FIDE) அதிகாரப்பூர்வமற்ற முறையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தியது. 1927ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ செஸ் ஒலிம்பியாட் போட்டி லண்டனில் நடைபெற்றது.

குறிப்பிட்ட கால இடைவெளி என்று இல்லாமல் அவ்வப்போது போட்டிகள் நடைபெற்று வந்தன. உலகையே பாதித்த இரண்டாம் உலகப் போர், செஸ் ஒலிம்பியாட்டையும் விட்டுவைக்கவில்லை. 1939 முதல் 1950 வரை செஸ் ஒலிம்பியாட் நடைபெறவில்லை.

1950 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. 1957ஆம் ஆண்டு நெதர்லாந்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் பெண்கள் முதன் முறையாகக் கலந்துகொண்டனர். 1972ஆம் ஆண்டு மாசிடோனியாவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே நேரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்பட்டன.

2022ஆம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் ரஷ்யாவில் நடைபெறவிருந்தது. உக்ரைனுடன் ரஷ்யா போரிடுவதால் அங்கே போட்டிகளை நடத்தும் முடிவைத் திரும்பப் பெற்றுக்கொண்டது சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE).

பதக்கப் பட்டியல்

இதுவரை 43 செஸ் ஒலிம்பியாட்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 18 தங்கம் 1 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று சோவியத் ஒன்றியம் முதல் இடத்தில் இருக்கிறது. சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த ரஷ்யா, 8 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 6 தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கங்களை வென்ற அமெரிக்கா மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

கோவிட் காலத்தில் ஆன்லைனில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்திய அணி தங்கம் (2020), வெண்கலம் (2021) வென்றது. ஆனாலும், ஆன்லைன் போட்டிகள் அதிகாரபூர்வமான செஸ் ஒலிம்பியாட்டில் சேர்க்கப்படவில்லை. அதனால் 2014இல் ஒரு வெண்கலம் வென்ற இந்தியா 11வது இடத்தில் இருக்கிறது.

சென்னை

விஸ்வநாதன் ஆனந்த் மூலம் 1988ஆம் ஆண்டில்தான் செஸ் விளையாட்டில் முதல் கிராண்ட் மாஸ்டர் பட்டம் இந்தியாவுக்குக் கிடைத்தது. அதற்குப் பிறகு 74 கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகிவிட்டனர்! இவர்களில் 24 கிராண்ட் மாஸ்டர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இப்படி இந்தியர்கள் செஸ் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்திவருவதால், 44ஆவது செஸ் ஒலிம்பியாட் நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது. அதிலும் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த மண்ணில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது கூடுதல் சிறப்பு!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in