

ஆப்பிரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் நடுவில் உள்ள செங்கடலின் அழகான பவளத்திட்டுகளில் வந்து நின்றது நாட்டிலஸ் நீர்மூழ்கி.
“நீங்க கவனிக்க வேண்டியது அந்த மீனைத்தான்” என்று சுட்டிக்காட்டினார் அருணா.
அங்கே சிவப்பு மீன் ஒன்று சிறிய மீன்களைத் துரத்திக்கொண்டிருந்தது.
“இது களவா மீன் (Grouper). இது ஒரு வகை ஊன் ஊனுண்ணி” என்று அருணா சொல்லிக்கொண்டிருந்தபோதே களவா மீனிடமிருந்து தப்பிய சிறு மீன்கள், பவளத்திட்டின் இடுக்கில் போய் ஒளிந்துகொண்டன. அளவில் பெரிய களவா மீன், இடுக்கையே உற்றுப் பார்த்தபடி அசையாமல் இருந்தது.
“வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்தானே... இது ஏன் இவ்வளவு யோசிக்குது?” என்றான் செந்தில்.
மெல்ல அந்தக் களவா மீன் வேறு ஒரு பவளத்திட்டை நோக்கி நீந்தியது. அங்கே இருந்த ஒரு பொந்தின் வாசலில் நின்றுகொண்டு தலையை விநோதமாகவும் வேகமாகவும் ஆட்டியது.
அடுத்த சில நொடிகளில் உள்ளிருந்து அஞ்சாலை (Giant Moray Eel) ஒன்று வெளியில் வந்தது.
“இதுவும் திறமையான வேட்டை யாடிதான்” என்றார் அருணா.
அஞ்சாலை வெளியில் வந்த உடனே வேகமாக நீந்தி முன்னேறிய களவா மீன், சிறு மீன்கள் ஒளிந்துகொண்டிருக்கும் இடுக்குப் பகுதியைப் பார்த்தபடி மூக்கை நீட்டி உடலை வளைத்தது. தலையை விநோதமாவும் வேகமாகவும் அசைத்தது.
“இடுக்கில் மீன்கள் இருக்குன்னு சொல்லுதோ?” என்று கேட்டாள் ரக்ஷா.
களவா மீன் மூக்கை நீட்டிய இடுக்குக்குள் தனது பாம்பு போன்ற உடலுடன் எளிதாக நுழைந்த அஞ்சாலை, அடுத்த சில நொடிகளில் அங்குமிங்கும் மீன்களைத் துரத்தியிருக்க வேண்டும்.
இடுக்கிலிருந்து சிறு மீன்கள் வெளியில் வந்தன! வாயை அகலமாகத் திறந்த களவா மீன், ஒரு மீனை விழுங்கியது. துரத்தி வந்த ஒரு மீனை வாயில் கவ்வியபடி அந்த இடத்தைவிட்டு நகர்ந்து, மீண்டும் தனது பொந்துக்குள் புகுந்தது அஞ்சாலை.
“சூப்பர்! ஒருங்கிணைந்த வேட்டை யாடுதல் முறை. அட்டகாசம்! இரண்டு விலங்குகளுக்கும் லாபம்தான்” என்றாள் ரக்ஷா.
“ஆமாம். இந்தக் களவா மீன் வேட்டையாடுவதில் திறமைசாலி. அஞ்சாலையின் உடல்வாகு இடுக்கில் உள்ள இரையைப் பிடிக்க வசதியா இருக்கு. இரண்டு வேட்டையாடிகளும் சேர்ந்ததால் உணவு கிடைச்சிடுச்சு” என்றான் செந்தில்.
“எப்போதும் இரண்டு விலங்குகளுக்குமே இரை கிடைப்பதில்லை. வாய்க்கு அருகில் இரை வந்தால், அருகில் இருப்பவருக்குப் பங்கு கொடுக்காமல் இரண்டு மீன்களும் கிடைப்பதை விழுங்கிடும்” என்றார் அருணா.
“அப்படியா! இரண்டு மீன்களுக்கும் சண்டை வராதா?” என்றாள் ரக்ஷா.
“அதுதான் இல்ல. அஞ்சாலைகள் இரவுநேர வேட்டையாடிகள். பகல்ல இது மாதிரி களவா மீன்கள் சொல்லும் இடங்களில் மட்டும் கொஞ்ச நேரம் துரத்தினாலே சுலபமா மீன்கள் கிடைச்சிடும். களவா மீன்களுக்கு இடுக்கில் போன மீன்கள் பொதுவா கிடைக்காது.
ஆனால், அஞ்சாலைகளோட இணைந்து செயல்படும்போது ஒளிந்து கொண்ட இரையும் கிடைக்கும். ஆக, எப்படிப் பார்த்தாலும் இரண்டு மீன்களுக்கும் லாபம்தான். ஆகவே பங்கிடுதல் இல்லைன்னாலும் பிரச்சினை வர்றதில்லை” என்றார் அருணா.
“கிடைச்ச வரை லாபம்னு இரண்டு மீன்களும் செயல்படுது. கூட்டு வேட்டை யாடுதல் முறையில் ஆற்றல் குறைவு, வெற்றி விகிதம் அதிகம்” என்றாள் ரோசி.
“இதே செங்கடல் பகுதியில் ரெடுவான் ஷாரி என்கிற விஞ்ஞானி 2006இல் இந்த வேட்டை முறையை முதன்முதலில் கண்டறிந்தார். இதில் பெரிய ஆச்சரியம் என்னன்னா, ‘பொந்தை விட்டு வெளியில் வா’ என்று சொல்லவும் ‘இங்கதான் இரை இருக்கு’ன்னு சொல்லவும் களவா மீன்கள் ஒரே மாதிரிதான் தலையாட்டும். ஆனா, அதை அஞ்சாலைகள் தெளிவா புரிந்துகொண்டு வேட்டைக்கு உதவுகின்றன. இப்படி சைகை செய்வதை referential gestureனு சொல்வோம்” என்று விளக்கினார் அருணா.
“அட ஆமாம்! இரண்டும் வெவ்வேறு இனம். ஒரு மீனோட உடல் மொழி இன்னொரு மீனுக்குத் தெரியாது. எப்படி இந்தத் தகவல் பரிமாற்றம் சாத்தியமாச்சு?” என்றாள் ரோசி.
“அதைப் பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செஞ்சிட்டு இருக்காங்க. இது மட்டுமில்ல, பொதுவா கூட்டு வேட்டையாடுதல் முறை என்பது ஒரு நுணுக்கமான செயல்பாடு. ஒரே இனத்துக்குள்ள இணைந்து வேட்டையாடணும்னாலே புரிந்துணர்வு, விட்டுக்கொடுக்கும் தன்மை, எளிமையான தகவல் பரிமாற்றம், அறிவாற்றல் எல்லாம் வேணும்.
இதுல வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த வேட்டையாடிகள் இணைந்து செயல்படும்போது இன்னும் கூடுதலான அறிவாற்றல் தேவை. ஆகவே இதெல்லாம் பாலூட்டிகள், பறவைகள் போல பரிணாமரீதியா வளர்ந்த இனங்கள்ல மட்டும்தான் இருக்கும் என்று ஒரு நம்பிக்கை இருந்தது.
இந்தக் கண்டுபிடிப்பு அதையும் மாற்றியிருக்கு. அது மட்டுமில்லாம இந்தக் கூட்டுறவில், களவா மீன்களோ அஞ்சாலை மீன்களோ தங்களுடைய வேட்டையாடும் முறையை மாத்திக்கத் தேவையில்ல, புதுசா எதையும் கத்துக்கணுங்கிற அவசியமும் இல்ல என்பதால் இந்தக் கூட்டு வேட்டையாடுதல் முறை ரொம்பச் சிறப்பானதுன்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க.
பரிணாம வளர்ச்சியில் இது எப்படி வந்தது, மற்ற மீன் இனங்களில் இந்தப் பண்புகள் இருக்கா என்றெல்லாம் பல ஆராய்ச்சிகள் நடந்துக்கிட்டிருக்கு” என்று நிறுத்தினார் அருணா.
களவா மீன் இன்னொரு சிறு மீன் கூட்டத்தைத் துரத்த ஆரம்பித்தது. நீர்மூழ்கி வேகமாக அங்கிருந்து புறப்பட்டது.
(அதிசயங்களைக் காண்போம்)
கட்டுரையாளர், கடல்சார் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: nans.mythila@gmail.com