Published : 26 Jul 2022 02:18 PM
Last Updated : 26 Jul 2022 02:18 PM

கனிமொழியும் காகங்களும் - கதை - சாமி கிரிஷ்

"கனி, இன்னைக்கு மதியச் சாப்பாடுக்கு எலுமிச்சை சாதமும் உருளைக்கிழங்கு வறுவலும் வச்சிருக்கேன்” என்ற அம்மாவின் குரலுக்கு, தண்ணீர் பாட்டிலில் நீர் நிரப்பியவாறே 'சரி’ என்று தலையாட்டினாள் கனிமொழி.

பள்ளி வளாகம். மதிய உணவு இடைவேளை. நண்பர்களுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் கனிமொழி. காகங்களும் குருவிகளும் அவர்கள் வட்டமாக அமர்ந்து சாப்பிடுவதை, தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தன. அதைப் பார்த்த கனிமொழி, ஒரு கை உணவை எடுத்து, பறவைகளை நோக்கி வீசினாள்.

உடனே கனிமொழியின் நண்பன் சலீம், "ஏன் கனி… சாப்பாட்ட அள்ளிப் பறவைகளுக்கு வீசுறே?” என்று கேட்டான்.

"அதுங்களுக்கும் பசிக்கும்தானே… அதனாலதானே அந்தப் பறவைகளும் தினமும் நாம சாப்புடுற நேரத்துக்கு வருதுங்க… பாவமா பார்த்துட்டு நிக்குதுங்க… நாம குடுக்கலைனா ஏமாற்றமா இருக்கும்ல…’’ என்று கனிவாகக் கூறினாள் கனிமொழி.

"ஆமா, கனி சொல்றதும் சரிதான். ஆனா...” என்று இழுத்தாள் பூமிகா

"என்ன பூமிகா யோசிக்கிற?”

"ஸ்கூல் நாள்ல பிரச்சினையில்ல. நாம சாப்பாடு கொடுத்துருவோம். ஆனா, லீவு நாள்களில் என்ன பண்றது? அதுவும் பத்து நாள்கள் லீவ் வருது. அதான் யோசிக்கிறேன்” என்றாள் பூமிகா.

"ஆமா, பூமிகா சொல்றதும் சரிதான். அப்ப என்ன பண்றது” என்று கவலையுடன் கேட்டாள் கனிமொழி.

"நாம பத்துப் பேரு இருக்கோம். அதனால லீவுல ஆளுக்கொரு நாள் ஸ்கூலுக்கு வந்து, இதே நேரத்துல இந்தப் பறவைங்களுக்குத் தானியம் போடுவோம்” என்றான் மதன்.


இந்த யோசனை எல்லாருக்கும் பிடித்துவிட்டது. நிலா ஆசிரியரிடம் சென்று தங்கள் யோசனையைச் சொன்னார்கள்.

“பறவைகள் எல்லாம் நாம உணவு கொடுக்கறதுக்காகக் காத்திருப்பதில்லை. நாம உணவு கொடுக்கலைனா பட்டினியாகக் கிடப்பதும் இல்ல. ஆனாலும் உங்களுக்குப் பறவைகள் மேல இருக்கும் அன்பைப் பாராட்டறேன். லீவில் பள்ளிக்கெல்லாம் வர வேணாம். ஆளுக்குக் கொஞ்சம் தானியங்களைக் கொடுத்துட்டுப் போங்க. நம்ம வாட்ச்மேன் கிட்ட சொல்லி, தினமும் கொஞ்சம் போடச் சொல்றேன்” என்றார் நிலா.

இந்த யோசனை எல்லாருக்கும் திருப்தியாக இருந்தது. ஒவ்வொருவரும் சிறு டப்பாக்களில் தானியங்களைக் கொண்டுவந்து கொடுத்தனர். விடுமுறையிலும் பறவைகளுக்கு உணவு கிடைத்தது.

மீண்டும் திறந்தது பள்ளி. வழக்கம்போல் தங்கள் உணவிலிருந்து கொஞ்சம் பறவைகளுக்குப் போட்டனர்.

அன்று விளையாட்டுப் பாடவேளையில் மைதானத்தில் நின்றுகொண்டிருந்த கனிமொழி திடீரென்று மயங்கி விழுந்தாள். நண்பர்கள் ஒருவரும் கவனிக்கவில்லை. எங்கிருந்தோ வந்த காகங்கள், கனிமொழியைச் சுற்றி நின்று குரல் கொடுத்தன. சத்தம் கேட்டுத் திரும்பிய நண்பர்கள், அவளுக்குத் தண்ணீர் கொடுத்து மயக்கத்தைத் தெளிவித்தனர்.

பள்ளியிலும் வீட்டிலும் கனிமொழிக்கு உதவிய காகங்களைப் பற்றியே எல்லாரும் பேசிக்கொண்டிருந்தனர்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x