Published : 21 Jul 2022 02:39 PM
Last Updated : 21 Jul 2022 02:39 PM

பூ ஒன்று புயலானது! - காம்கேர் கே. புவனேஸ்வரி

என் அப்பா, அம்மா இருவருக்கும் தொலைபேசித் துறையில் பணி. காலை, மாலை என ஷிஃப்ட் மாறிக்கொண்டே இருக்கும். யாரேனும் ஒருவர் வீட்டில் இருப்பார்கள். ஆனாலும் சில நாள்களில் இருவருக்கும் ஒரே நேரத்தில் வேலை இருக்கும். அப்போது எங்களுக்குள் மனஸ்தாபம் வந்தால் அதை அவரவர் நோட்டில் எழுதிவைத்துவிட வேண்டும். அப்பா, அம்மா வீட்டுக்கு வந்ததும் பஞ்சாயத்து ஆரம்பமாகும். திட்ட மாட்டார்கள், அடிக்க மாட்டார்கள். யார் மீது தவறு அதிகம் இருக்கிறதோ அவர்களிடம், ‘இனிமேல் இப்படிச் செய்யக் கூடாது’ என்று சொல்வார்கள். அவ்வளவுதான்!

சிறுமி புவனேஸ்வரி

வீட்டிலேயே லாக் புக்

எங்கள் வீட்டில் ஆளுக்கொரு Log Book உண்டு. அப்பா, அம்மா வீட்டில் இல்லாதபோது வீட்டுக்கு யாரேனும் வந்தாலோ அல்லது ஏதேனும் அவர்களிடம் சொல்ல வேண்டிய நிகழ்வுகள் நடந்தாலோ எழுதி வைப்போம். இத்தனை மணிக்கு ஆண் பிச்சைக்காரர் ஒருவர் வந்தார், இத்தனை மணிக்கு ஒரு பாட்டி பிச்சை கேட்டு வந்தார் என்றெல்லாம்கூட எழுதி வைப்போம்!

ஒரு முறை ஒரு பிச்சைக்காரர் குடும்பம் சகிதமாக வந்தார். நாங்கள் மூவரும்தான் வீட்டில் இருந்தோம். அவர்களுக்கு நாங்கள் தனியாக இருக்கிறோம் என்று தெரியாமல் இருப்பதற்காக, நானும் தம்பியும் வீட்டுக்குள் சென்று, ‘அப்பா, யாரோ பிச்சை கேட்டு வந்திருக்காங்க, என்ன செய்யறது...’ என்று சத்தமாகக் கேட்டேன். என் தம்பி அடிக்குரலில் (அப்பா பேசுவது போல்), ‘எதுவும் போடுவதற்கு இல்லை...’ என்றான். நான் வெளியே வந்து, ‘சாப்பாடு எதுவும் இல்லையாம்... நாளைக்கு வாங்க...’ என்று பதில் சொல்லி அனுப்பினேன். இவை எல்லாம் நாங்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு எங்கள் பெற்றோர் சொல்லிக்கொடுத்த சூட்சுமங்கள்.

கதைபோல நாட்டு நடப்புகள்

நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் செய்திகளாக அல்லாமல் கதைகளாகச் சொல்வார்கள் எங்கள் பெற்றோர். ஒருமுறை எங்கள் அம்மாவுடன் பணிபுரிந்தவரின் வீட்டில், ஓர் இளம் பெண் எங்கோ சென்றுவிட்டார். கதை மூலம் நிகழ்வைச் சொல்லி, வீட்டை விட்டுச் சென்றால் எப்படி எல்லாம் கஷ்டப்பட வேண்டும், என்னவெல்லாம் நடக்கும் என்பதை எல்லாம் அறிவுரையாக அல்லாமல் கதையாகச் சொன்னார். அது இன்றுவரை மறக்கவே இல்லை.

லேசா, லேசா...

அம்மாவுக்கு மதிய ஷிஃப்ட் என்றால், அப்பா இரவுக்கு டிபன் செய்து வைத்துவிட்டு, எங்களை சைக்கிளில் வைத்து கோயிலுக்கு அழைத்துச் செல்வார். அப்போது சைக்கிள் ஓட்டும் அப்பாவைப் பார்த்தால் பாவமாக இருக்கும். அதனால் தங்கை, தம்பியிடம் ‘லேசா ஒக்காந்துக்கோங்கோ... அப்பா சைக்கிள் மிதிக்க கஷ்டப்படறாங்க...’ என்று சொல்வேன். அதைச் சொல்லிச் சொல்லி சிரிப்பார் அப்பா.
அட்டை போட்டு அதிரடி!

பெற்றோர் எங்களுக்கு வாசிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். பாலமித்ரா, ரத்னபாலா, அம்புலிமாமா, கோகுலம் போன்ற பத்திரிகைகளை வாங்கித் தருவார்கள். ஒரு முறை என் அம்மா, புத்தகங்களுக்கு அட்டைபோடச் சொன்னார். பிரவுன் பேப்பரை எடுத்து அட்டை போட்டு முடித்தேன். மாலையில் அம்மாவிடம் பாராட்டுக் கிடைக்கும் என்று காத்திருந்தேன். ஆனால், அம்மாவோ, ‘குமுதம், விகடனுக்கு எல்லாமா அட்டை போடச் சொன்னேன்? பாடப் புத்தகங்களுக்குதானே சொன்னேன்’ என்றாரே பார்க்கலாம்!

சைக்கிள்

பத்து வயதில் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்தார் அப்பா. ஒவ்வொரு நாளும் அப்பாவுக்குத்தான் உடம்பில் ரத்தக் காயம் உண்டாகும். கற்றுக்கொண்ட எனக்கு ஒரு சிறு சிராய்ப்புகூட இருக்காது. 18 வயதில் கியர் வைத்த பைக் ஓட்டக் கற்றுக்கொடுத்தபோது, ஒருமுறை ஆக்ஸிலேட்டர் அதிகமாகி தந்திக் கம்பத்தில் மோதியபோதும் பைக்குக்குதான் சேதாரம். எனக்குச் சிறு அடி கிடையாது!

புத்தக அலமாரி

என் அம்மாவின் புத்தகங்களைச் சேகரிப்பதற்காக, சுவர் உயர மர பீரோ ஒன்றைச் செய்து கொடுத்தார் அப்பா. கோகுலம், ரத்னபாலா, அம்புலிமாமா, பாலமித்ரா போன்றவை எங்களை வளர்த்த புத்தகங்கள். இன்றும் அம்மா சேகரித்து, எங்கள் கைகளால் பைண்டிங் செய்த சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், அலை ஓசை போன்றவை இருக்கின்றன.

புத்தகங்களுடனேயே வளர்ந்ததால் எங்களுக்குள் இருந்த படைப்பாற்றலும் வளர்ந்தது. எழுத்து, கார்ட்டூன், ஓவியம் என ஆளுக்கொரு துறையில் சிறப்புடன் இருக்கிறோம்.

முதல் கதை

‘என் திறமை எழுத்து’ என்பதை 10 வயதில் கோகுலத்தில் வெளியான ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்கிற கதை நிரூபித்தது. அதன் பின்னர் அந்தத் திறமையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, மேலும் திறமையை வளர்த்தேன்.

கல்லூரி முடிப்பதற்குள் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி, அவை சாவி, கல்கி, கலைமகள், சுபமங்களா, விஜயபாரதம் போன்ற முன்னணிப் பத்திரிகைகளில் வெளியானதுடன் விருதுகளையும் பெற்றுத் தந்தன.

நினைவு தெரிந்த நாளில் இருந்து தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து 5 மணிவரை எழுதுவேன். பின்னர் ஒரு மணிநேரம் தூங்கி எழுந்து படிப்புக்கு நேரம் ஒதுக்குவேன். பள்ளிக் காலத்தில் ஆரம்பித்த இந்தப் பழக்கம், கல்லூரி முடிக்கும்வரை என் தினசரி வழக்கமாகிப் போனது.

கோபமும் வரும்!
நான் ஆறாவது படித்துக் கொண்டிருந்தபோது, என் தங்கை தம்பியுடன் நடந்துகொண்டிருந்தேன். இரண்டு மூன்று நாட்களாக ஒரு சிறுவன், என் தம்பியுடன் படிப்பவன், தெரு முனையில் நின்றுகொண்டு தம்பியை வம்பிழுத்துக்கொண்டே இருந்தான். அந்தச் சிறுவனின் கைகளை இழுத்து முதுகில் நான்கு அடி கொடுத்தேன். ஓடிவிட்டான். இப்போது அந்தச் சிறுவன் என் தம்பியின் நண்பன்.

அழகான கையெழுத்து

சிறு வயதில் இருந்தே என் கையெழுத்து மிக அழகாக இருக்கும். அதனால், என் அப்பா தன் அலுவலகத்துக்குத் தேவையான கடிதங்களை, ஆவணங்களை ஆங்கிலத்தில் சொல்லச் சொல்ல நான் எழுதித் தருவேன். அப்பாவின் ஆங்கிலப் புலமை எனக்குள்ளும் இறங்கியது இப்படித்தான். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலத்தில் வாக்கியங்கள் அமைப்பது எனக்குக் கைவந்த கலையானது.

காம்கேர் நிறுவனர் புவனேஸ்வரி

பூ ஒன்று புயலானது!

நான் ஏழாம் வகுப்பு படித்த போதில் இருந்தே பிரைவேட்டாக இந்தி கற்றுக்கொண்டிருந்தேன். ஒருநாள் இந்தி மாஸ்டர், வேலைக்குச் செல்லும் பெண்களைப் பற்றி தரக்குறைவாகப் பேச மாணவர்கள் சிரித்தனர்.

வங்கியில் பணத்தை எண்ணும் ஆண் கேஷியர் லாகவமாக எண்ணுவதையும் பெண்கள் மெதுவாக எண்ணுவதையும் கிண்டல் செய்தார். மேலும், பெண்கள் வேலைக்குச் செல்வதே மாதம் ஒரு புடவை வாங்கவும் வருடம் புது நகை வாங்கவும்தான் என்றும் சொல்லிக்கொண்டே போனார்.
‘பெண்கள் புடவை, நகைக்காக ஒன்றும் வேலைக்குச் செல்லவில்லை... அவர்களுக்கும் லட்சியம் இருக்கிறது...’ என்று சொல்லிவிட்டேன். படபடப்பாக இருந்தது. நான் இப்படிச் சொன்னதால் என்னை ஆசிரியருக்குப் பிடிக்காமல் போய்விடுமோ என்று பயந்தேன். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

கட்டுரையாளர், சாஃப்ட்வேர் நிறுவனத் தலைவர், தொழில்நுட்ப வல்லுநர், கிரியேட்டிவ் டைரக்டர், ஆவணப்பட இயக்குநர், அனிமேட்டர், யூடியூபர், பதிப்பாளர், பத்திரிகையாளர், எழுத்தாளர்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x