

மே 8 - சர்வதேச செஞ்சிலுவை நாள்
விபத்தில் காயம் அடைந்தவரைப் பார்த்தால் என்ன தோன்றும்? முதலில் அவர் மீது இரக்கம் ஏற்படும். முடிந்தால் அவருக்கு முதலுதவி அளிக்க நினைப்போம் அல்லவா? அடிபட்டுத் துடிக்கும் தனி ஒருவரைப் பார்த்தாலே மனம் பதறுகிறதே. போரில் ஆயிரக்கணக்கான வீரர்கள் ரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடுவதைப் பார்த்தால் எப்படித் துடித்துப் போவோம்? 1859-ல் இத்தாலி நாட்டில் உள்ள சால்ஃபரீனோ என்ற இடத்தில் நடந்த போரைப் பார்த்தபோது அப்படித்தான் துடித்தார் ஜான் ஹென்றி டுனண்ட்.
வீரர்களுக்கு முதலுதவி
ஒரு நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றிய ஹென்றி டுனண்ட், வேலை காரணமாக சால்ஃபரீனோ நகருக்குச் சென்றார். அப்போதுதான் போர் நடந்து முடிந்திருந்தது. போரின் விளைவாகக் கிட்டத்தட்ட நாற்பதாயிரம் பேருக்கும் மேல் மிக மோசமான காயங்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். காயங்களுக்கு மருந்திடவோ, உணவு தரவோ யாருமில்லாமல் அவதிப்பட்ட அந்த வீரர்களைப் பார்த்து மனம் வருந்தினார் ஹென்றி. அந்தப் பகுதியில் வசித்த மக்களைத் திரட்டி, காயம்பட்டவர்களுக்கு முதலுதவி செய்தார். மூன்று நாட்களாகச் சோர்வின்றி அவர்களுக்கு உதவினார்.
தன் சொந்த ஊரான ஜெனீவாவுக்குத் திரும்பிய பிறகும்கூட, போரும் அதற்குப் பிந்தைய மரண ஓலமும் ஹென்றியின் மனதை விட்டு நீங்கவில்லை. அதன் பாதிப்பில், சால்ஃபரீனோ நினைவுகள் என்ற புத்தகத்தை எழுதினார். ‘போரில் காயப்படுகிறவர்களுக்கு உதவுவதற்காக எந்தச் சார்பும் இல்லாத ஒரு சர்வதேச அமைப்பை உருவாக்க வேண்டும்’ என்று தன் கருத்தைத் தெரிவித்திருந்தார்.
மனிதநேயத்தின் அடையளம்
புத்தகம் வெளியாகி ஓராண்டுக்குப் பிறகு ஹென்றியின் எண்ணம் நிறைவேறியது. ஜெனீவா மக்கள் நல அமைப்பின் தலைவராக இருந்த குஸ்தவ் மாய்னீர் என்பவருக்கு ஹென்றியின் கருத்துப் பிடித்துப்போனது. போரில் காயப்படுகிறவர்களுக்கு உதவும் நோக்கில் பல்வேறு பரிந்துரைகளை அவர் முன்வைத்தார். அது 16 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி உருவானதுதான் செஞ்சிலுவைச் சங்கம். 1864-ம் ஆண்டு ஸ்விஸ் நாட்டு நாடாளுமன்ற ஏற்பாட்டில் நடைபெற்ற ஜெனீவா மாநாட்டில் இந்த அமைப்பை உருவாக்க அதிகாரபூர்வமாக 12 நாடுகள் ஒப்புக்கொண்டன. அடுத்தடுத்து பல்வேறு நாடுகள் இந்தச் சங்கத்தில் இணைந்தன.
அமைதி ஒன்றே ஆக்கும் சக்தி
முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின்போது செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களின் சேவை மகத்தானது. அணு ஆயுதம் போன்ற மோசமான தாக்குதல்களில்கூட சவாலான வேலையையும் அவர்கள் செய்திருக்கிறார்கள். போர் நடக்கும் இடங்களுக்கு அருகில், பாதுகாப்பான இடங்களில் தற்காலிக மருத்துவமனைகளை அமைத்து அவர்கள் ஆற்றிய சேவைக்கு ஈடு இணையே இல்லை.
செஞ்சிலுவைச் சங்கம் மூன்று முறை அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கிறது. செஞ்சிலுவைச் சங்கம் உருவாகக் காரணமாக இருந்த ஜான் ஹென்றி டுனண்ட், நோபல் பரிசு வழங்கப்பட ஆரம்பித்த 1901-லேயே அமைதிக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றார். ஹென்றியின் பிறந்தநாளான மே 8, ஒவ்வொரு ஆண்டும் செஞ்சிலுவை நாளாக அனுசரிக்கப்படுகிறது.