உலகின் இளமையான தேசிய கீதம்!

உலகின் இளமையான தேசிய கீதம்!
Updated on
2 min read

தேசிய கீதம் என்றால் இப்படித்தான் இருக்கும்' என்று எல்லோருக்கும் ஒரு பொதுவான எண்ணம் உள்ளது. நீங்கள் அப்படி நினைப்பவரா? அப்படியானால், நீங்கள் கண்டிப்பாக ஒரு முறையாவது நேபாள நாட்டின் தேசிய கீதத்தைக் கேட்க வேண்டும்.

இனிமையோ இனிமை!

நேபாளத்தின் தேசிய கீதம் அவ்வளவு இனிமையாக இருக்கும். வாய்ப்புக் கிடைத்தால் இணையத்துக்குச் சென்று, நேபாள தேசிய கீதத்தைக் கேட்டுப் பாருங்கள். நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும். (‘Korean students singing Nepali songs' என்று தேடிப் பாருங்கள். கிடைக்கும்) இந்தக் கீதத்தில், நமக்குப் பழக்கப்பட்ட பல சொற்கள், அதே உச்சரிப்புடன் அதே பொருளில் அமைந்து இருக்கின்றன என்பது சுவாரஸ்யமான செய்தி.

பக்கத்து நாடு

நமது அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். இந்தியாவுக்கு வட கிழக்கே, சீனாவையொட்டி அமைந்துள்ள நாடு.

உலகின் மிக உயர்ந்த மலைகள் இங்கு உள்ளன. மிக உயரமான சிகரம் எவரெஸ்ட் நேபாளத்தில்தான் உள்ளது.

குடியரசு

நேபாளத்தின் மக்கள்தொகை மூன்று கோடிக்கும் குறைவு.

உலகிலேயே மிக அதிகமாக, 80 சதவீதத்துக்கும் மேலாக இந்து மக்களைக் கொண்ட இந்நாட்டின் தலைநகரம்,

காத்மாண்டு. சில ஆண்டுகளுக்கு முன்புவரை, மன்னரால் ஆளப்பட்டு வந்த நேபாளத்தில் இப்போது, கூட்டு ஜனநாயகக் குடியரசு ஆட்சி நடைபெறுகிறது.

வேறு ஒரு தேசிய கீதம்தான் முதலில் நேபாளத்தில் இருந்தது. அதை நீக்குவதாக, 2006 மே 16 அன்று ஒருமனதாக அந்த நாட்டு மக்களவை (பிரதிநிதி சபா) தீர்மானித்தது.

மக்கள் பாட்டு

பாகிஸ்தானைப் போலவே, நேபாளமும் தேசிய கீதம் எழுதி அனுப்புமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தது.

தேசிய கீத தேர்வுப்பணிக் குழு அமைக்கப்பட்டது. பொதுமக்களிடமிருந்து 1200-க்கும் மேலான பாடல்கள் வந்து குவிந்தன.

ஒரு பாடல் எல்லோருக்கும் பிடித்தது. ஆனால், அந்தப் பாடலின் ஆசிரியர் ‘மன்னருடைய ஆள்’ என்று சந்தேகம் ஏற்பட்டது. அவரை அழைத்து விசாரித்து, முடிவில் சந்தேகம் தீர்ந்த்து. 2006 நவம்பர் 30 அன்று, இப்பாடலைத் தேர்ந்தெடுத்தது தேர்வுக்குழு.

நம்ம தர்பார்!

அந்த நாட்டு திட்டக் குழுவின் தலைமையகத்தில் ஓர் அரங்கம் உள்ளது. அதன் பெயர் - ‘சிங்க தர்பார்'!

இந்த அரங்கத்தில்தான், 2007 ஆகஸ்ட் 3-ம் நாள், நேபாளத்தின் தேசிய கீதம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இளமை - இனிமை!

நேபாளத்தின் கீதம் தோன்றி, இன்னும் பத்து ஆண்டுகள்கூட ஆகவில்லை! உலகிலுள்ள தேசிய கீதங்களில், இது மிக இளமையான கீதம்.

யாரால்.., எப்படி..?

இப்பாடலை இயற்றியவர் - ‘பையா மைலா' என அழைக்கப்படும் பிரதீப் குமார் ராய்.

இசை அமைத்தவர் - ஆம்பர் குருங். ‘குருங்' என்பது, நேபாள மொழிகளில் ஒன்று. அதையே பெயரில் கொண்டுள்ளார் இவர். நம் ஊரில் ‘செந்தமிழ்' என்று பெயர் வைத்துக் கொள்கிறோம் அல்லவா? அது போல.

இப்பாடலை இசைக்க ஆகும் நேரம்

- ஏறத்தாழ ஒரு நிமிடம்.

இந்தப் பாடல் இப்படி ஒலிக்கும்:

சாய துங்க பூ கஹாமி யூட்டை மாலா நேபாளி

சர்வ பவும்பை ஃபைலி லேகா மேச்சி மஹாகாளி

ப்ரக்ரிதி கா கோடி கோடி சம்ப தாகோ ஆசலா

பீர்ஹ ரூகா ராகதா லே ஸ்வதந்த்ர ரா ஆடலா

ஞானபூமி ஷாந்திபூமி தாராய் பாஹாட் ஹீமலா

அகண்ட யோ ப்யாரோ ஹம்ரோ மாத்ரிபூமி நேபாளா

பஹூல் ஜாதி, பாஷா, தர்மா, சஸ்க்ரிதி சான்பி பிஷாலா

ஆக்ரகாமி ராஷ்ட்ர ஹம்ரோ ஜெய ஜெய நேபாளா.

சரி..

என்ன சொல்கிறது இப்பாடல்...?

தமிழாக்கம்

பல நூற்றுக்கணக்கான பூக்களால்

தொடுக்கப்பட்ட ஒரே மாலை நேபாளம்;

மேச்சி முதல் மஹாகாளி வரை

வியாபித்து நிற்கும் இறையாண்மை நேபாளம்.

முடிவில்லாத இயற்கையின் வளமை,

ஆற்றல் மறவர்களின் குருதி போர்த்திய

சுதந்திரமான அசைந்து கொடுக்காத தேசம்;

ஞானபூமி; சாந்த பூமி, சமவெளிகள், குன்றுகள்,

நெடிதுயர் மலைகள் அமைந்த பூமி;

அகண்ட, பிரிக்கப்பட முடியாத,

நேசத்துக்குரிய அன்னை நிலம் நேபாளம்.

பல இனங்கள், மொழிகள், மதங்கள்,

பண்பாடுகளின் ஊடே

நம்பிக்கைகளுக்கு மேலாய், முன்னேறும் தேசம் -

எல்லாரும் போற்றும் எங்கள் நேபாளம்!

(கீதங்கள் ஒலிக்கும்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in