

1380 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்த போது இந்தப் பிரபஞ்சம் உருவானது. பிரபஞ்சத்தின் குழந்தைப் பருவத்தில் முதல் விண்மீன்கள் உருவாயின. அந்த இளம் பிரபஞ்சத்தை நம்மால் காண முடியுமா?
பெருவெடிப்புக்குப் பிறகு சுமார் நூறு கோடி ஆண்டுகள் கழித்து இருந்த இளம் பிரபஞ்சக் காட்சியை நம் கண்முன்னே நிறுத்துகிறது கீழே உள்ள படம். காலப் பயணத்தில் (Time Travel) அந்தக் காலத்துக்குச் சென்று, அன்று இருந்த நிலையைக் காண்பதுபோல வளரிளம் விண்மீன் கூட்டத்தைப் படம்பிடித்துள்ளது.
காலப் பயணம்
இரவு வானில் நிலா தெரிகிறது என்றால் அது இப்போது உள்ள நிலா அல்ல. சுமார் 1.28 நொடிக்கு முன்னே இருந்த நிலா.
ஏன் தெரியுமா? நொடிக்கு சுமார் 3,00,000 கி.மீ. வேகத்தில் ஒளி செல்லும். நிலாவுக்கும் பூமிக்கும் இடையே சராசரி தொலைவு 3,84,000 கி.மீ. எனவே நிலவின் ஒளி நமது கண்களை அடைய சுமார் 1.28 நொடி ஆகும். அதனால் நாம் பார்க்கும் நிலா, சுமார் 1.28 நொடிக்கு முந்தைய நிலா.
15.2 கோடி கி.மீ. தொலைவில் உள்ள சூரிய ஒளி நம்மை வந்தடைய சுமார் எட்டு நிமிடங்கள் ஆகும். அதாவது இப்போது நம் கண்ணில் படும் சூரியன் எட்டு நிமிடங்களுக்கு முன்னால் இருந்த சூரியன்.
இரவில் நாம் பார்க்கும் திருவாதிரை நட்சத்திரத்தின் ஒளி முதல் பானிப்பட் போர் நடந்த காலத்தில், அதாவது ஐநூறு வருடங்களுக்கு முன்பு புறப்பட்ட ஒளி!
அதே போல், பிரபஞ்சத்தில் தொலைவில் உள்ள பொருளைக் காணும்போது, பிரபஞ்சத்தின் முற்காலத்தைக் காண்கிறோம்.
சக்தி வாய்ந்த தொலைநோக்கி
பெருவெடிப்பில் பிரபஞ்சம் உருவாகி, முதல் விண்மீன்கள் உருவான காலகட்டத்தைக் காண வேண்டும் என்றால் நாம் சுமார் 1,350 கோடி ஒளி ஆண்டு (ஒளி ஆண்டு - ஒளி ஓர் ஆண்டில் செல்லும் தூரம்) தொலைவில் உள்ள பிரபஞ்சத்தைக் காண வேண்டும்.
பக்கத்தில் உள்ள விளக்கு பிரகாசமாக ஒளிரும். அதே விளக்கு தொலைவில் உள்ளபோது பிரகாசம் குறைந்துவிடும். எனவே, வெகு தொலைவில் உள்ள பிரபஞ்சத்தைக் காண வேண்டும் என்றால் மங்கிய ஒளியையும் காணும் திறன்கொண்ட தொலைநோக்கி வேண்டும். வெறும் கண்களுக்குத் தென்படக்கூடிய மிக மங்கலான விண்மீனைவிட, ஆயிரம் கோடி மடங்கு மங்கிய விண்மீனைக் காணும் திறன் இருந்தால்தான் இவ்வளவு தொலைவில் உள்ள வான் பொருளைக் காணமுடியும்.
ஒளி என்றதுமே நம் கண்களால் காணக்கூடிய கண்ணுறு ஒளியைத்தான் நினைவில்கொள்வோம். ஆனால், நம் கண்களுக்குத் தென்படாத அகச்சிவப்புக் கதிர்கள், புறஊதாக் கதிர்கள், ரேடியோ அலைகள், எக்ஸ் கதிர்கள் போன்ற மின்காந்த அலைகளும் உண்டு.
அகச்சிவப்பு ஒளி
பெருவெடிப்பு நிகழ்வுக்குப் பிறகு பிரபஞ்சம் விரிந்துகொண்டே செல்வதால், வெகு தொலைவிலிருந்து புறப்படும் ஒளி அலைகள் நம்மை வந்தடைவதற்குள் அலைநீளம் கூடிவிடும். அதாவது அவை அகக்சிவப்புக் கதிராக மாறிவிடும். அதனால் மிகக் கூரிய நோக்கும்திறன்கொண்ட, அகச்சிவப்பு அலைநீளங்களைக் காணும் ஆற்றல் படைத்த தொலைநோக்கி வேண்டும். அதுதான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.
விண்வெளி தொலைநோக்கி
சுவரைத் துளைத்துக்கொண்டு கண்ணுறு ஒளி செல்லாது. ஆனால், ரேடியோ அலைகள் செல்லும். அதனால்தான் வீட்டுக்குள் இருந்துகொண்டே நம்மால் திறன்பேசியை இயக்க முடிகிறது. அகச்சிவப்புக் கதிர்களை பூமியின் வளிமண்டலம் தடுத்துவிடும். எனவே பிரபஞ்சத்தின் தொலைவைக் காண விண்வெளியில் தொலைநோக்கியை நிறுவ வேண்டும். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
படம்பிடித்தது!
2021, டிசம்பர் 25ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட இந்தத் தொலைநோக்கி, 2022, ஜனவரி 25 ஆம் தேதி குறிப்பிட்ட இலக்கை அடைந்தது. கருவிகள் இயக்கம் சரி பார்க்கப்பட்டு, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த முதல் ஐந்து படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் ஒன்று SMACS 0723 எனும் விண்மீன் கூட்டம். சூரியனும் பூமியும் சுமார் 460 கோடி வருடங்களுக்கு முன்னால் உருவாகின. அந்த நேரத்தில் இருந்த நிலையை இந்தப் படம் காட்டுகிறது. பெருவெடிப்பு நிகழ்வுக்கு நூறு கோடி ஆண்டுகளுக்குப் பிறகு இருந்த வளரிளம் விண்மீன் கூட்டங்களை இந்தப் படத்தில் நாம் காண்கிறோம்.
செல்ஃபி எடுக்கும்போது தற்செயலாகப் பின்னால் யாராவது வந்தால், அவர்களின் முகம் படத்தில் வந்துவிடும். அதுபோல SMACS 0723 விண்மீன் கூட்டத்தைப் படம்பிடிக்கும்போது அதன் பின்னணியில் 1,300 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பிரபஞ்சத்தின் சில வான்பொருள்களும் பதிவாகியுள்ளன. இதுவரை எந்தத் தொலைநோக்கியும் காணாத தொலைவு இது. பிரபஞ்சம் உருவான காலகட்ட நிலையை நம் கண்முன் இந்தப் படம் காட்டுகிறது.
குழந்தை விண்மீன்களும் மடியும் விண்மீன்களும்
NGC 3324 கரீனா நெபுலா எனும் தூசியும் வாயுக்களும் அடங்கிய விண்முகிலில் நூற்றுக்கணக்கான புதிய விண்மீன்கள் பிறக்கும் காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளது.
மறுபுறத்தில் எய்ட் பர்ஸ்ட் நெபுலா எனப்படும் ஒரு விண்மீன் மடியும் நிகழ்வும் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
கோடி கோடி விண்மீன்களைக் கொண்ட ஐந்து விண்மீன் கூட்டங்கள் ஒன்றை இன்னொன்று சுற்றிச் சுற்றி ஸ்டீபன்ஸ் குவின்டெட் எனும் இடத்தில் நடனமாடுகின்றன. இதில் இரண்டு விண்மீன் கூட்டங்கள் மோதும் நிகழ்வையும் இந்தத் தொலைநோக்கி இனம் கண்டுள்ளது.
சூரியனைச் சுற்றி கோள்கள் உள்ளது போலவே,வேறு விண்மீன்களைச் சுற்றியும் கோள்கள் உண்டு. அவற்றைப் புறக்கோள்கள் என்பார்கள். WASP-96b எனும் புறக்கோளின் வளிமண்டலத்தில் நீராவி உள்ளதை இந்தத் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. எதிர்காலத்தில் வேறு கோள்களில் உயிரினங்கள் உள்ளனவா என்கிற ஆய்வும் மேற்கொள்ளப்படும்.
கட்டுரையாளர், விஞ்ஞானி.
தொடர்புக்கு: tvv123@gmail.com