ஆழ்கடல் அதிசயங்கள் 15: இருளில் ஒளிரும் மீன்!

ஆழ்கடல் அதிசயங்கள் 15: இருளில் ஒளிரும் மீன்!
Updated on
2 min read

அமெரிக்காவின் கேப் கடல்முனைக்கு அருகில் உள்ள கடலில், சுமார் 2,500 மீட்டர் ஆழத்தில் வந்துநின்றது நாட்டிலஸ் நீர்மூழ்கி.

“சுத்தி ஒரே இருட்டு. நீர்மூழ்கியோட விளக்கைப் போடலாமே” என்று கண்ணைக் கசக்கியபடி ரோசி கேட்கும்போதே, “அங்க பாருங்க எல்லாரும்” என்று பரபரப்பாகச் சொன்னான் செந்தில்.

தொலைவில் வெளிர் நீலத்தில் ஒளி வந்துவந்து போய்க்கொண்டிருந்தது.

“பல்பு விட்டுவிட்டு மினுக்கிற மாதிரியே இருக்கு” என்றாள் ரக்‌ஷா.

“அழகா இருக்கு” என்றான் செந்தில்.

“இந்த விலங்கோட உடல் அமைப்பு தனித்துவமானதா இருக்கே, ஒளிரும் லாலிபாப் மாதிரி...” என்று ரோசி சொல்ல, “இருங்க, இது என்னன்னு பார்க்கலாம்” என்று நீர்மூழ்கியின் சிறப்பு விளக்குகளை இயக்கினார் அருணா.

தலையில் கொம்பு முளைத்த உருண்டையான மீன் ஒன்று அங்கே இருந்தது. மீனின் தலைப் பகுதியிலிருந்து நீண்டிருந்த ஒரு குச்சியின் முனையில் இருந்த சிறு உருண்டை நீல ஒளியை உமிழ்ந்தது!

“அப்போ இவ்வளவு நேரம் நாம பார்த்தது இந்த மீனின் தலையிலிருந்து வரும் அந்தக் குச்சியைத்தானா?” என்று கேட்டான் செந்தில்.

நீர்மூழ்கி விளக்குகளின் வெளிச்சத்தைக் குறைத்த அருணா, “ஆமாம், இது ஒரு வகை ஆழ்கடல் மீன். இதோட பெயர் தூண்டில் மீன் (Angler fish). இந்த மீனில் 200 இனங்கள் உண்டு. தூண்டில் மீன் என்பதற்கான பெயர்க்காரணத்தை நீங்களே பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க” என்றார் அருணா.

விளக்கிலிருந்து குறைவான ஒளி வந்துகொண்டிருந்தாலும் கண்கள் ஓரளவு இருட்டுக்குப் பழகிவிட்டதால், அங்கு நடப்பவை ஓரளவு தெரிந்தன. தூண்டில் முனையில் நீல ஒளி விட்டுவிட்டு வந்துகொண்டிருந்தது. தூண்டில் மீனுக்குச் சற்றுத் தொலைவில் ஓர் ஊசிக்கணவாய் இந்த ஒளியையே உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தது. சில நிமிடங்களில் ஒளியை நோக்கி வேகமாக வந்த ஊசிக்கணவாய், தூண்டிலை நெருங்கி அதைக் கவ்வ முயன்றது. உடனே வாயை அகலமாகத் திறந்த தூண்டில் மீன் அப்படியே ஊசிக்கணவாயை விழுங்கியது.

“சிறப்பான வேட்டையாடும் உத்தி. விரட்டி இரையைப் பிடிக்குறதுக்குள்ள மூச்சு வாங்கிடும். இந்தத் தூண்டில் மீன் இருக்கும் இடத்திலிருந்தே இரையைப் பிடிச்சிடுது” என்றான் செந்தில்.

“ஆமா, உடல் ஆற்றலை நிறைய சேமிக்கலாம்” என்றாள் ரக்‌ஷா.

“ரொம்ப சரி. ஆழ்கடலில் இரை கிடைப்பது அரிது என்பதால், ஆற்றலைச் சேமிச்சாதான் வாழ முடியும். அது மட்டுமில்ல, இந்த மீன் பெருசா வாயைத் திறந்து இரையை விழுங்குவதைப் பார்த்திருப்பீங்க! வாய் மட்டுமல்ல, இதோட வயிற்றுப் பகுதியும் இரண்டு மடங்கு விரிந்து கொடுக்கக்கூடியது. எப்போதாவதுதான் இரை கிடைக்கும் என்பதால், பெரிய இரையா இருந்தாலும் உள்வாங்கிச் செரிப்பதற்கான தகவமைப்பு இது” என்று விளக்கினார் அருணா.

“இந்த ஒளி எங்கிருந்து வருது?”என்றாள் ரக்‌ஷா. “இதை உயிர் ஒளிர்தல்னு (Bioluminescence) சொல் வோம். அதாவது, இந்தத் தூண்டில் போன்ற அமைப்புக்குள்ள ஒளிரக்கூடிய பாக்டீரியாக்கள் இருக்கும். அவற்றின் வேதிவினை மூலமா ஒளி உருவாகும்”என்றார் அருணா.

இரையை விழுங்கிய தூண்டில் மீன் மெல்ல நீந்திக்கொண்டிருந்தது.

“இதை நேரில் பார்ப்பதே பெரிய அதிசயம்தான். இந்த மீன் முதன்முதலில் 1833இல் கண்டறியப்பட்டது. ஆனாலும் கரை ஒதுங்கிய மீன்கள், வலைகளில் எப்போதாவது சிக்கும் மீன் உடல்களை வெச்சுதான் விஞ்ஞானிகள் இதன் உடல் அமைப்புகளை ஆராய்ச்சி செஞ்சாங்க.

இந்த மீனை உயிருடன் பார்க்கவே மனித இனத்துக்குப் பல ஆண்டுகளாச்சு! 1999இல், இதே கேப் கடல்முனையில்தான் இந்த மீன் முதன்முதலில் வீடியோவில் பதிவாச்சு. அப்போ விஞ்ஞானிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இன்று ஏற்பட்டிருக்கும் அறிவியல் வளர்ச்சியால் நாம நீர்மூழ்கிக்குள் இருந்தபடியே இந்த மீனைப் பார்க்கிறோம்” என்றார் அருணா.

“சரி, அந்த் தூண்டில் மீன் மாதிரி யாரால பெருசா வாயைத் திறக்க முடியும்? போட்டி வெச்சுக்கலாம்” என்று செந்தில் ஆரம்பித்து வைக்க, மூவரும் வாயை அகலமாகத் திறந்து பார்த்தார்கள். அருணா சிரித்துக்கொண்டார். நீர்மூழ்கி சிறு சத்தத்துடன் அங்கிருந்து புறப்பட்டது.

(அதிசயங்களைக் காண்போம்)

கட்டுரையாளர், கடல்சார் ஆராய்ச்சியாளர்.

தொடர்புக்கு: nans.mythila@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in