

விடுமுறை நாள்களில் அப்பாவுக்கு உதவியாகக் கடைக்குச் சென்றுவிடுவான் கதிர். கதிரின் அப்பா பழைய பேப்பர் கடை வைத்திருக்கிறார். காகிதத்தை மூட்டைக் கட்டி, சரக்கு வண்டிகளில் மதுரைக்கு அனுப்பி வைப்பார்.
அன்று அப்பாவுடன் கடைக்குச் சென்ற கதிர், அவரது அனுமதியோடு சைக்கிளை எடுத்துக்கொண்டு தென்றல் நகருக்கு விரைந்தான். ஊருணியைத் தாண்டி வலது பக்கத்தில் திரும்பி, முதல் தெருவில் நுழைந்தவுடன், “பழைய பேப்பர் இருக்காம்மா? பழைய நியூஸ் பேப்பர், பழைய பத்திரிகைகள் இருந்தால் கொண்டு வாங்கம்மா” என்று சத்தமாகக் கத்தினான். விசில் ஊதி குடியிருப்போர் கவனத்தை ஈர்க்க முயன்றான்.
தென்றல் நகர் புதிதாக உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதி. தெருவோரம் நகராட்சிப் பூங்கா இருந்தது. சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு, யாராவது பழைய பேப்பர் கொண்டுவருவார்களா என்று காத்திருந்தான்.
சற்று தொலைவில் சாக்கடையில் ஒரு கோழிக்குஞ்சு தவறி விழுந்ததைப் பார்த்தான் கதிர். அம்மா கோழி பதற்றத்துடன் கத்தியது. அவன் சுதாரிப்பதற்குள் சாக்கடையில் இறங்கி கோழிக்குஞ்சை எடுத்து வெளியே விட்ட ஒருவர், கதிரை நோக்கி வந்தார்.
“அடடே! அழகர் மாமா. அத்தை, கோதை எல்லாரும் நலமா?” என்று விசாரித்தான்.
அழகருக்கும் கதிரைப் பார்த்ததில் மகிழ்ச்சி. அப்போது பெரிய பையுடன் தாத்தா ஒருவர் வந்தார்.
“தாத்தா, பழைய நியூஸ் பேப்பரும் பத்திரிகைகளும் கலந்துதான் இருக்கு. கிலோவுக்கு 14 ரூபாய் தரலாம்” என்றான் கதிர்.
தாத்தா அவனைப் பார்த்து நட்போடு சிரித்தார். அவனுக்குத் தன் தாத்தாவின் நினைவு வந்தது.
தாத்தா அவனிடம், “கிலோவுக்கு 14 ரூபாய் நான் உனக்குத் தர்றேன்” என்றார். கதிருக்குக் குழப்பமாக இருந்தது.
தாத்தா சொன்னது போலவே பணத்தை எடுத்து நீட்டினார்.
“தாத்தா, எனக்கெதுக்கு இந்தப் பணம்? நீங்கள் கொடுத்த பேப்பருக்கு நான்தான் பணம் தர வேண்டும். நீங்கள் பேப்பர் போடுவதே எங்களுக்கு உதவிதான். அதைத் தவிர நான் எதையும் இலவசமாகப் பெற மாட்டேன்” என்றான் கதிர்.
“தம்பி, நீ செய்ற இந்த வேலை பூமிக்கே நன்மை தருது. அதைப் பாராட்டாம இருக்க முடியுமா?” என்ற தாத்தாவின் வார்த்தைகள் அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.
“என்ன சொல்றீங்க தாத்தா?”
“பழைய காகிதங்களை அரைச்சுக் கூழாக்கி, மறுபடியும் புதுசா காகிதம் தயாரிக்கிறாங்க. மறுசுழற்சி முறையில் ஆயிரம் டன் பேப்பர் உற்பத்தி செய்தால், 17 மரங்களை வெட்டாமல் காப்பாத்தலாம்” என்றார் தாத்தா.
“ஆமாம் தாத்தா, நானும் படிச்சிருக்கேன். ஒரு மனிதன் தன்னோட வாழ்நாள் முழுவதும் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை ரெண்டு முதிர்ந்த மரங்கள் தருகின்றன” என்றான் கதிர்.
“அப்படினா, நீ சேகரிக்கும் இந்தப் பழைய பேப்பரால எத்தனை மரங்கள் காப்பாற்றப்படும்! உண்மையிலேயே நீ சிலர் உயிர்வாழக் காரணமாக இருக்குற தம்பி!”
கதிருக்கு உடல் சிலிர்த்தது. இதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“தாத்தா, அரசாங்கம் மரக்கன்று வளர்ப்பை ஊக்குவிக்கிறாங்க. பல தன்னார்வ அமைப்புகளும் மரக்கன்றுகளை இலவசமாகத் தர்றாங்க. நம்ம ஆட்களும் அதை வாங்கி நடறாங்க. அழகாக செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்ல பதிவிடுறதோட சரி. தன்னோட வேலை முடிஞ்சதுன்னு போயிடறாங்க” என்று வருத்தப்பட்டான் கதிர்.
அதுவரை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அழகர் மாமா, “நீ சொல்றது சரிதான். அதற்காக நாம் சோர்ந்து போயிடக் கூடாது. மரம் வளர்ப்பின் அவசியத்தைப் பற்றித் திரும்பத் திரும்பச் சொல்லணும்” என்றார்.
தாத்தாவுக்கு அழகர் மாமாவை அறிமுகம் செய்து வைத்தான் கதிர்.
“ஒரு செடி மரமாக வளர்றதுக்குப் பல வருடங்கள் ஆகுது. மரங்களைப் பாதுகாத்து வளர்க்கிறவங்க பூமியைக் காக்கும் மருத்துவர்கள் தம்பி!” என்றார் தாத்தா.
“தாத்தா, இந்தப் பணத்துல மரக்கன்றுகளை வாங்கி நடுங்க” என்று பேப்பருக்கான பணத்தைக் கொடுத்தான் கதிர்.
‘கீங்… கீங்...’ என்று அலறியபடி தெருவோரம் அரசுப் பேருந்து வந்து நின்றது. அதிலிருந்து இறங்கி வந்த கோதையை, கதிர் அடையாளம் கண்டுகொண்டான். அவள் கையில் வைத்திருந்த நோட்டுப் புத்தகத்தில் ‘காகிதக் கழிவுகளைக் குறைப்போம்; பூமியை அழிவிலிருந்து மீட்போம்’ என்கிற வாசகம் இருந்தது.