

நாட்டிலஸ் நீர்மூழ்கி இந்தோனேசி யாவுக்கு அருகில் உள்ள ஒரு பவளத்திட்டுக்குள் நுழைந்தது. “பவளத்திட்டுகளை எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்கவே இல்லை. யானை, கடல், ரயில்னு பார்க்கப் பார்க்கத் திகட்டாத விஷயங்களின் பட்டியலில் பவளத்திட்டையும் சேர்க்கணும்” என்றாள் ரோசி.
“இதோ இந்தத் திறமையான விலங்கைப் பார்க்கத்தான் இங்க வந்திருக்கோம்” என்று காட்டினார் அருணா.
“அட, இதைத் தோட்டுக்கணவாய்னு (Cuttlefish) சொல்வாங்க. ஆக்டோபஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. பத்துக் கை இருக்கு பாரேன்” என்றான் செந்தில்.
“இது எப்படி வேட்டையாடுதுன்னு பாருங்க” என்றார் அருணா.
பவளத்திட்டில் ஓர் இடுக்கான பகுதிக்குள் நீந்திய தோட்டுக்கணவாய், மெல்ல பழுப்பு நிறத்திலிருந்து சுற்றியுள்ள கடற்பஞ்சுகளுக்கு ஏற்றவாறு மஞ்சள் நிறத்துக்கு மாறியது! பிறகு கடற்பஞ்சுகளுக்கு நடுவில் புகுந்து அசையாமல் நின்றது. சட்டென்று பார்த்தால் அதை யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது. அடுத்த சில நொடிகளில் கடல் தரையிலிருந்து ஒரு நண்டு வெளியே வந்தது. நொடிப்பொழுதில் அதைத் தன்னுடைய வாயில் போட்டுக்கொண்டது தோட்டுக்கணவாய். உணவு கிடைத்த மறுகணம் மீண்டும் பழையபடி பழுப்பு நிறத்துக்குத் தோட்டுக்கணவாயின் உடல் நிறம் மாறியது.
எல்லாரும் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
“வேட்டையாட மட்டுமில்ல, பெரிய விலங்குகளிடமிருந்து தப்பிக்கவும் இந்த உரு மறைப்பு (Camouflage) பயன்படும்” என்றார் அருணா.
“அதோ அடுத்த வேட்டை” என்று பரபரப்பான ரக்ஷா, “ஆனா, இந்த நண்டு ஏற்கெனவே கணவாயைப் பார்த்துடுச்சு. எப்படி வேட்டை நடக்கும்?” என்றாள்.
நண்டுக்கு அருகில் வந்த தோட்டுக்கணவாய், நான்கு கைகளைத் தலைக்கு மேல் தூக்கியது. இரண்டு கைகளைப் பக்கவாட்டில் விரித்துக்கொண்டது. மெல்ல அதன் நிறம் வெளிறியது. வெள்ளை நிறத்துக்கு உடல் மாறியவுடன், தூக்கிய கைகளை முன்னோக்கி நீட்டியது. பக்கவாட்டில் இரண்டு கைகளும் விமான இறக்கைகள்போல விரிந்திருக்க, அதன் உடல் வண்ணம் மாறத் தொடங்கியது! பட்டை பட்டையாக அடர் பழுப்பும் கறுப்பும் மாறிமாறித் தெரிந்தன. சீரியல் விளக்குகள் விட்டுவிட்டு எரிவதுபோல, கறுப்பு, பழுப்பு, வெள்ளை ஆகிய நிறங்கள் அதன் உடல் முழுவதும் பயணித்தன!
நண்டு அப்படியே ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருந்தது. நெருங்கிய தோட்டுக்கணவாய், அதை எளிதாகப் பிடித்துச் சாப்பிட்டது.
“ஆ... இது என்ன? ஏதோ மாயாஜாலம் மாதிரி இருக்கே” என்றாள் ரோசி. மற்ற இருவரும் ஆச்சரியத்துடன் ஆமாம் என்று தலை அசைத்தனர்.
“இது ஒரு வகையான அறிதுயில் (Hypnosis) நிலை. மாறிமாறி நிறங்கள் வருவதால், அதைப் பார்க்கும் நண்டு அப்படியே திகைச்சு நின்னுடும். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தோட்டுக்கணவாய் வேட்டையாடும். பெரிய இரையைப் பிடிக்க தோட்டுக்கணவாய்கள் பயன்படுத்தும் உத்தி இது.
தோட்டுக்கணவாய்களின் மேல் தோலில், நிறமிகள் நிறைந்த செல்கள் இருக்கும். தோலின் முதல் அடுக்கில் நிறம் தரும் Chromatophore செல்கள், இரண்டாவது அடுக்கில் பளபளப்பு தரும் Iridiophore செல்கள், மூன்றாவது அடுக்கில் ஒளியைப் பிரதிபலிக்கும் leucophore செல்கள் இருக்கும். இந்த செல்கள் எல்லாமே சிறு நரம்புகளோடு பிணைக்கப்பட்டிருக்கும். நரம்புகள் தூண்டப்படும்போது வெவ்வேறு செல்களுக்கு உயிர்ப்பு வரும்.
அதன் மூலம் தோலில் நிறங்கள் உருவாகும். ஒரு அழி ரப்பர் அளவு உள்ள தோட்டுக்கணவாயின் தோலை எடுத்துப் பார்த்தால், மேல் அடுக்கில் மட்டுமே 200 செல்கள் தெரியும். இதன்மூலம்தான் நிறமாற்றம் நடக்குது” என்றார் அருணா.
“இரையைக் கவர்ந்து பக்கத்தில் வரவெச்சு வேட்டையாடுவது, இரைக்குத் தெரியாமலே அதை நெருங்கி வேட்டையாடுவது, இரையைத் துரத்தி அது சோர்வடையும்போது தாக்குவதுனு படிச்சிருக்கேன். ஆனா, இப்படி மாயாஜாலம் செய்து வேட்டையாடுவது ரொம்பப் புதுசா இருக்கு” என்றான் செந்தில்.
“இது மட்டுமில்ல, வழக்கமா கணவாய்கள் எதிரிகள்கிட்டேயிருந்து தப்பிக்கணும்னா மை மாதிரியான திரவத்தைத் துப்பி எதிரிகளைக் குழப்பும்னு படிச்சிருக்கோமே” என்று அருணா கேட்க, “ஆமாம், அது கண்ணீர்ப்புகை குண்டு மாதிரின்னு என் அறிவியல் ஆசிரியர் சொன்னாங்க” என்றாள் ரோசி.
“ஆமாம், கிட்டத்தட்ட அப்படித்தான். ஒருவகை தோட்டுக்கணவாய், இந்த மையோட சேர்த்து கோழை மாதிரி ஒரு திரவத்தையும் சுரக்குமாம். பிறகு கையை நீட்டி, அதைக் கணவாய் மாதிரியே உருவாக்குமாம். மையால் உருவான இந்தப் போலி கணவாயை எதிரிகள் வேட்டையாடும்போது, அந்த இடைவெளியில் இது தப்பிக்குமாம்” என்றார் அருணா.
“கைவசம் நிறைய வித்தை வெச்சிருக்கும் போல! நமக்கும் இந்த மாதிரி சக்தி இருந்தா நல்லா இருக்கும். எப்போ இந்தச் சக்தியைப் பயன்படுத்தலாம்னா...” என்று ரக்ஷா இழுக்க, “டாக்டர் ஊசி போடும்போது”, “கண்ணாமூச்சி ஆடும்போது” என்றெல்லாம் பதில்கள் வந்தன.
தொலைவில் அடுத்த வேட்டைக்குத் தோட்டுக்கணவாய் தயாராக, நீர்மூழ்கி வேகமாகப் புறப்பட்டது.
(அதிசயங்களைக் காண்போம்)
கட்டுரையாளர், கடல்சார் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: nans.mythila@gmail.com