மாய உலகம்! - கூட்டன்பர்க் கண்ட கனவு

ஓவியம்: லலிதா
ஓவியம்: லலிதா
Updated on
3 min read

எனக்கு ஒரு கனவு இருக்கிறது. என் வீதியில் முதியவர் ஒருவர் தன்னந்தனியாக வசிக்கிறார். அவர் கைகள் எப்போதும் நடுங்கிக்கொண்டிருக்கும். ஒருநாள் அவர் வீட்டுக்குச் சென்று, ‘இந்தாங்க தாத்தா’ என்று அவர் கரங்களைப் பிரித்து ஒரு புத்தகத்தை வைத்துவிட்டு வரவேண்டும்.

என் எதிர்வீட்டில் ஒரு பெரிய குடும்பம் இருக்கிறது. நான்கு குழந்தைகள் ஆ, ஊவென்று எப்போதும் கத்திக்கொண்டும் சிரித்துக்கொண்டும் விளையாடிக்கொண்டு இருப்பார்கள். அவர்களை அழைத்து ஒவ்வொரு சின்ன கையிலும் ஒரு புத்தகத்தைத் திணிக்க வேண்டும். அந்தப் புத்தகங்களில் பூக்களும் விலங்குகளும் பறவைகளும் மேகங்களும் மீன்களும் நிறைந்திருக்கும்.

ரொட்டிக் கடையில் ஒரு சிறுவன் வேலை செய்துகொண்டிருக்கிறான். கிழிசல் இல்லாத ஆடை அணிந்து அவனை நான் இதுவரை பார்த்ததில்லை. ஒருநாள் அவனை அழைத்து, ‘இந்தா’ என்று ஒரு புத்தம் புதிய புத்தகத்தைக் கொடுப்பேன். ‘ஆ, இதெல்லாம் வேண்டாம். இதை வைத்து நான் என்ன செய்ய’ என்று அவன் நெளிவான்.

‘வேறு எதற்கு? படிக்கத்தான்’ என்று அவன் கையில் வைத்து அழுத்துவேன். ‘எனக்குத்தான் படிக்கவே தெரியாதே’ என்பான். ‘அப்படியானால் இதிலிருந்து தொடங்கு’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று வந்துவிடுவேன்.

எனக்கு ஒரு கனவு இருக்கிறது. விதவிதமான தின்பண்டங்கள் கிடைப்பது போல், விதவிதமான துணிமணிகள் கிடைப்பது போல், விதவிதமான குதிரைகளும் கோழிகளும் கிடைப்பதுபோல் விதவிதமான புத்தகங்கள் சந்தை முழுக்கக் கொட்டிக் கிடக்கும். எனக்கு, உனக்கு என்று போட்டிப் போட்டுக்கொண்டு எல்லாரும் புத்தகங்களை வாங்கிக்கொண்டு செல்வார்கள்.

‘அப்பா, எனக்கு அது வேண்டும், இதுவும் வேண்டும், அங்கே ஒளிந்துகொண்டிருக்கிறதே அதுவும்’ என்று குழந்தைகள் கைநீட்டி, நீட்டிக் கேட்பார்கள். அப்பா எல்லா நூல்களையும் வாங்கிக் கொடுப்பார். ஒரு பையில் அவற்றைப் போட்டுக்கொண்டு, மகிழ்ச்சியில் துள்ளிக்கொண்டே குழந்தைகள் வீட்டுக்குப் போவார்கள்.

ரொட்டிக் கடை சிறுவன்போல் படிக்கத் தெரியாதவர்களுக்கு ஆரம்ப எழுத்துகளை அறிமுகப்படுத்தி வைக்க ஒரு புத்தகம். தன்னந்தனியாக வாழும் தாத்தாவுக்குத் துணையாக கதைப் புத்தகங்கள். தோட்ட வேலை செய்யும் பெண் வீட்டுக்குப் போனதும் வேறோர் உலகுக்குச் சென்றுவிடக் கவிதைப் புத்தகங்கள்.

‘உனக்குத் தெரியுமா, அவர் வீட்டில் நான்கு அழகிய புத்தகங்கள் இருக்கின்றன’ என்று இனி யாரும் வியக்க மாட்டார்கள். இனி யாரும் புத்தகத்தை அழகிய கண்ணாடிப் பெட்டிக்குள் காட்சிப்படுத்த மாட்டார்கள். ஓர் ஆண்டு முழுக்க வேலை செய்து சம்பாதித்தால்தான் ஒரு புத்தகம் வாங்க முடியும் என்னும் நிலை இனி ஜெர்மனியில் ஒருவருக்கும் ஏற்படாது. ஜெர்மனி மட்டுமல்ல, உலகில் எங்கும் புத்தகம் இனி அபூர்வப் பொருளாக இருக்காது.

ஆம், நான் வாழ்ந்துகொண்டிருப்பது 15ஆம் நூற்றாண்டில் என்பதை நான் மறந்துவிடவில்லை. ஒரு புத்தகத்தை அச்சிட்டுக் கொண்டு வருவதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும், எவ்வளவு செலவாகும் என்பதை நான் அறிவேன். ஏன் புத்தகம் தங்கம் போல், வெள்ளி போல் சிலரிடம் மட்டும் இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியும்.

முட்டை போல், முட்டைகோஸ் போல் யார் வேண்டுமானாலும் பணம் கொடுத்து வாங்கி, அள்ளிச் செல்லும் அளவுக்குப் புத்தகங்கள் பெருக வேண்டுமானால் நம் சமூகம் மாற வேண்டும். நம் பொருளாதார அமைப்பு மாற வேண்டும். நம் அரசியல் சூழல் மாற வேண்டும். நம் கல்வி அமைப்பு மாற வேண்டும். தொழில்நுட்பம் மாற வேண்டும். எல்லாமே சரிதான்.

ஆனால், இப்படி யோசியுங்களேன். அவை எல்லாம் மாறும்வரை வெறுமனே காத்திருப்பதற்குப் பதில் நாம் ஏன் முதலில் புத்தகங்களைக் கொண்டுவரக் கூடாது? என் வீதி முழுக்க, என் ஜெர்மனி முழுக்க, என் உலகம் முழுக்கப் புத்தகங்களை நிரப்பினால் என்ன?

புத்தகங்கள் பெருகுவதைக் கண்டு பள்ளிகள் பெருகலாம். பள்ளிகள் பெருகப் பெருக கற்றவர்கள் அதிகரிக்கலாம். கற்றவர்கள் அதிகரிக்கும்போது நம் அரசியல் சூழல் மாறலாம். பொருளாதார அமைப்பு மாறலாம். அறிவியல் வளரலாம். தொழில்நுட்பம் வளரலாம். கப்பல்கள் அதிகரிக்கலாம்.

வானில் பறக்கலாம். கிழிந்த ஆடைகளை இனி ஒருவரும் அணியாத நிலை ஏற்படலாம். எனக்குப் படிக்கத் தெரியாதே என்று யாரும் சொல்ல முடியாத நிலை உருவாகலாம். நாம் விரும்பும் அனைத்து மாற்றங்களையும் புத்தகம் ஏற்படுத்தலாம். நம் ஏக்கங்கள் அனைத்தையும் புத்தகம் தீர்க்கலாம்.

வறுமை ஒழியும்வரை நான் காத்திருக்கப் போவதில்லை. மாறாக, புத்தகங்களைக் கொண்டு வறுமையை ஒழிக்க முடியும் என்று நம்புகிறேன். புத்தகங்களைக் கொண்டு தனிமையை வெல்ல முடியும். உடைந்து கிடக்கும் உள்ளத்தை, உடைந்து கிடக்கும் தேசத்தை, உடைந்து கிடக்கும் உலகைப் புத்தகங்களைக் கொண்டு சரிசெய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்.

எனக்கு ஒரு கனவு இருக்கிறது. மளமளவென்று காகிதங்களை அச்சிட்டுத் தள்ளிக்கொண்டே இருக்கும் ஒரு மாபெரும் இயந்திரத்தை நான் உருவாக்குவேன். அந்த இயந்திரத்திலிருந்து புத்தகங்கள் சுடச்சுட வந்து விழுந்துகொண்டே இருக்கும்.

ஆனால், கீழே விழுவதற்குள் ஆயிரம் கரங்கள் பாய்ந்து வந்து புத்தகங்களைப் பற்றிக்கொள்ளும். சூடு தணிவதற்குள் ஆயிரம் விரல்கள் பக்கங்களைப் புரட்டி முடித்திருக்கும். ‘போதாது, இன்னும் கொடு கூட்டன்பர்க்’ என்று ஆயிரம் குரல்கள் உலகம் முழுவதிலும் இருந்து ஒரே நேரத்தில் ஒலிக்கும். எனது இயந்திரம் அருவிபோல் காகிதங்களைப் பொழிந்துகொண்டே இருக்கும்.

அது நடக்கும்போது நீங்கள் வேறோர் உலகைக் காண்பீர்கள். வேறொரு வாழ்க்கை வாழ்வீர்கள்.

(ஐரோப்பாவில் முதன்முதலில் அச்சு இயந்திரத்தை உருவாக்கியவர், எழுத்துகளை நகர்த்தக்கூடிய சாத்தியமுள்ள அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தி அச்சிட்டவர் ஜோன்னஸ் கூட்டன்பர்க்).

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in