

கலிபோர்னியாவின் கடற்பகுதிக்கு வந்து சேர்ந்த நாட்டிலஸ் நீர்மூழ்கி, வேகத்தைக் குறைத்துக்கொண்டது. நல்ல வெயில் என்றாலும் சூரிய ஒளி தெரியாதபடி பிரம்மாண்டமான தாவரங்கள் கடல் தரையிலிருந்து மேற்பரப்பு வரை அடர்த்தியாகக் காணப்பட்டன.
“அட, கடல் காடு” என்றாள் ரோசி.
“ஆனா, இந்தத் தாவரங்கள் மங்கிய பச்சையும் பழுப்புமா இருக்கே... பசுமையா இல்லையே” என்றாள் ரக்ஷா.
“தண்ணிலேயே ஊறுவதால் அழுகிப் போயிருக்குமோ? இல்லையே... கடல்புல் பச்சையாகத்தானே இருக்கு?” என்றபடி அருணாவை ஏறிட்டுப் பார்த்தான் செந்தில்.
“இவையெல்லாம் வழக்கமான செடிகள் அல்ல, பாசிகள். குறிப்பா சொல்லணும்னா பழுப்புப் பாசிகள் (Brown Algae). நாங்க இதை கெல்ப்னு (Kelp) சொல்வோம். கெல்ப்பில் 30க்கும் மேற்பட்ட பேரினங்கள் இருக்கு. அவற்றில் பல இனங்கள் ரொம்ப வேகமா, உயரமா வளரக்கூடியவை. அப்படிப்பட்ட இனங்கள் ஒரே இடத்தில் ஒன்னா வளரும்போது இதுபோன்ற கெல்ப் காடுகள் உருவாகும். கெல்ப் காடுகள் உயிர்ச்சத்து நிறைந்த குளிரான கடல் பகுதிகளில்தான் அதிகமாக இருக்கும்” என்றார் அருணா.
“காடுனா காட்டு விலங்குகளும் இருக்குமே” என்று ரோசி கேட்க, “அதோ பாரு” என்று கைகாட்டினான் செந்தில்.
தொலைவில் சில கடல் சிங்கங்கள் நீந்திக்கொண்டிருக்க, அவற்றைக் கடந்துபோனது ஒரு பெரிய மீன் கூட்டம்.
“இருங்க” என்று கேமரா வைத்த ரோபாட்டை, கெல்ப் காட்டுக்குள் அனுப்பினார் அருணா. கேமராவில் பளீர் ஆரஞ்சு நிறத்தில் கரிபால்டி மீன்கள், நண்டுகள், பல கைகள் கொண்ட கடல் நட்சத்திரங்கள், சிப்பிகள், அயிலை மீன்கள், கிளிஞ்சல்கள், கடல்பரட்டைகள், இறால்கள் என்று எல்லாவற்றையுமே பார்க்க முடிந்தது.
கேமராவில் தெரிந்த பாசியின் இலை போன்ற பகுதியை உற்றுப் பார்த்த செந்தில், “அட, இது என்ன உருண்டையா இருக்கு! கெல்ப் பழமா? சாப்பிட்டா சுவையா இருக்குமா?” என்றான்.
சிரித்த அருணா, “இது காற்றுப்பை (Gas Bladder). கெல்ப் தாவரங்கள் கீழிருந்து மேல் வரை இருப்பதால, இலைப் பகுதிகளைச் சூரிய ஒளி இருக்கும் கடற்பரப்பில் மிதக்க வைக்க இயற்கை செய்திருக்கும் ஏற்பாடு. இலைகள் மேலே இருந்தால்தானே ஒளிச்சேர்க்கை நடக்கும்?” என்றார்.
“நீச்சல் குளத்தில் மிதப்பதற்குக் காற்று வளையம் ஒன்னு தருவாங்களே, அது மாதிரி” என்றாள் ரக்ஷா.
“அம்மாடி! இந்தப் பாசிகள் எவ்வளவு பெருசா இருக்கு! அதுங்களுக்கு முன்னாடி கடல்நாய், கடல்சிங்கமெல்லாம்கூட சின்னதாதான் தெரியுது” என்றாள் ரோசி.
“ஆமாம், கெல்ப் பாசிகள் 100 முதல் 200 அடி உயரம் வரைகூட வளரும். நல்ல சூழல் இருந்தா ஒரு நாளைக்கு இரண்டு அடி வளரும்” என்று அருணா சொல்ல, இரண்டு அடி எப்படி இருக்கும் என்று கையால் அளந்து பார்த்த மூவரும் ஆச்சரியப்பட்டார்கள்.
“நானும் இதே வேகத்தில் வளர்ந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?” என்றாள் ரக்ஷா. எல்லாரும் சிரித்தார்கள்.
“இவை அடர்த்தியான காடுகளை உருவாக்குவதால், கெல்ப் பாசிகளை, ‘சூழல் பொறியாளர்கள்’னு (Ecosystem Engineers) சொல்வாங்க. நிலத்தில் உள்ள மழைக்காடுகளில் இருப்பதுபோலவே கெல்ப் காடுகளிலும் ஒவ்வொரு அடுக்கிலும் உயிரிகள் இருக்கும். கெல்ப் காடுகள் நீரின் வேகத்தைக் குறைத்து, ஒளிந்துகொள்ள இடமும் தரும் என்பதால் பல உயிரிகளின் குஞ்சுகள் இங்கேதான் வளரும். சராசரியா ஒரு கெல்ப் காட்டில் ஒரு சதுர மீட்டர் பரப்பளவில் 1 லட்சம் முதுகெலும்பற்ற உயிரிகள் இருக்குமாம்” என்றார் அருணா.
“நிலத்தில் காடுகள் அழிஞ்சிட்டு வரும் இந்த நேரத்தில் கடல் காடுகளாவது செழிப்பா இருக்கே” என்று பெருமூச்சு விட்டாள் ரோசி.
“இல்லை, நீங்க பார்ப்பது நல்ல நிலையில் இருக்கும் ஒரு கெல்ப் காடு. இது ஒரு அரிதான காட்சியா மாறிடுச்சு. உலகில் கடந்த 50 ஆண்டுகளில் பெரும்பாலான கெல்ப் காடுகள் அழிஞ்சுபோச்சு. மீதமிருக்கும் கெல்ப் காடுகளும் வருடத்துக்கு இரண்டு சதவீதம் அழிந்துகொண்டே வருவதாகக் கண்டுபிடிச்சிருக்காங்க” என்றார் அருணா.
“ஐயோ... அவ்வளவு ஆபத்தா... அந்த கேமரா ரோபாட் கெல்ப் பாசியைக் கொஞ்சம்கூடக் கிழிச்சிடாம நாம அதைக் கவனமா செலுத்தலாம். இருக்கும் கெல்ப் காடுகளை நாம்தானே பாதுகாக்கணும்” என்று செந்தில் கவலையோடு சொன்னான்.
மீதி இருவரும் தலையாட்ட, கேமரா ரோபாட் திரும்பி வந்தவுடன் நீர்மூழ்கி மெதுவாகப் புறப்பட்டது.
(அதிசயங்களைக் காண்போம்)
கட்டுரையாளர், கடல்சார் ஆராய்ச்சியாளர்.
தொடர்புக்கு: nans.mythila@gmail.com