மனம் தளராத சார்லஸ் குட்இயர் - திலகா

மனம் தளராத சார்லஸ் குட்இயர் - திலகா
Updated on
2 min read

இன்று நாம் பயன்படுத்தும் ரப்பர் குழாய், ஷூ சோல், டயர், பென்சில் அழிக்கும் ரப்பர், பந்து, பொம்மை போன்ற ரப்பர் பொருட்களுக்குக் காரணம், ரப்பரை வல்கனைசேஷன் செய்ததுதான். இயற்கையான ரப்பரைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் மாற்றுவதுதான் வல்கனைசேஷன். வல்கனைசேஷன் கண்டுபிடிப்புக்கு முன்பும் ரப்பர் பொருட்கள் பயன்பாட்டில் இருந்தன. ஆனால், அந்த ரப்பர் காலணிகளும் ரெயின் கோட்களும் வெயில் காலத்தில் உருகின. மழைக் காலத்தில் ஒட்டிக்கொண்டன.

அமெரிக்காவைச் சேர்ந்த சார்லஸ் குட்இயர் என்பவருக்கு ரப்பர் மீது தீராத ஆர்வம் இருந்தது. அதுவரை பயன்பாட்டில் இருந்த ரப்பரை, இன்னும் மென்மையாகவும் நீடித்து உழைக்கும் வகையிலும் மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்கான ஆராய்ச்சிகளில் இறங்கினார். ஒவ்வொரு முறையும் மிகுந்த நம்பிக்கையோடு காத்திருப்பார்.

அந்த முயற்சி தோல்வி அடைந்தால், சிறிதும் மனம் தளராமல் அடுத்த முயற்சியில் இறங்கிவிடுவார். சில ரசாயனங்கள் ரப்பரை மென்மையாக்குவதுபோல் தோற்றத்தைத் தரும். வெயில் காலத்துக்கும் மழைக் காலத்துக்கும் காத்திருப்பார். வெயில் காலத்தில் உருக ஆரம்பித்துவிடும். மழைக் காலத்தில் விரிசல் அடைந்துவிடும். அதைத் தூக்கிப் போட்டுவிட்டு, அடுத்த ரசாயனத்தைக் கலந்து வைப்பார்.

வெவ்வேறு வெப்பநிலைகளில் வெவ்வேறு ரசாயனங்களைக் கலந்து ஆராய்ச்சிகளைச் செய்து பார்த்தார். ரப்பரை மென்மையாக மாற்றுவதற்கு, அதனுடன் கலக்கப்படும் டர்பைனே காரணம் என்பதைக் கண்டறிந்தார். ஆராய்ச்சி அடுத்த கட்டத்தை அடைந்தது. தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொண்டார்.

ஒரு நாள் நைட்ரிக் அமிலத்தைக் கலந்தார். வெற்றி கிடைத்தது. மகிழ்ச்சியோடு அதற்கான காப்புரிமையும் பெற்றார். அமெரிக்கத் தபால் துறை, ரப்பர் பைகளுக்கான ஆர்டரை வழங்கியது. ஆர்வத்துடன் தயாரித்துக் கொடுத்தார். ஆனால், சில மாதங்களில், அந்தப் பைகள் ஒட்டிக்கொண்டன. மிகவும் ஏமாற்றம் அடைந்தார் சார்லஸ்.

சார்லஸ் குட்இயர்
சார்லஸ் குட்இயர்

சில நாட்களுக்குப் பிறகு ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, கந்தகமும் வெள்ளைக் காரீயமும் தவறுதலாக விழுந்துவிட்டன. சார்லஸ் இதைக் கவனிக்கவில்லை. மறுநாள் எடுத்துப் பார்த்தபோது ரப்பர், தோல்போல மென்மையாக இருந்தது. நன்றாக வளைந்தது. ஒட்டவும் இல்லை.

இந்த விபத்து சார்லஸின் ஆராய்ச்சியைச் சரியான திசையில் திருப்பியது. வெப்பமும் வேதிப் பொருட்களும் சேர்ந்துதான் ரப்பரைப் பயன்படுத்தக் கூடியதாக மாற்றும் என்பதை அறிந்துகொண்டார். 1844-ல் வல்கனைஷேசனுக்குக் காப்புரிமையும் பெற்றார்.

பல ஆண்டுகள் சார்லஸ் செய்த தொடர் முயற்சியின் காரணமாக, இன்று உலகமே ரப்பர் பொருட்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in