கதை: நத்தையின் முதுகில் வீடு!

கதை: நத்தையின் முதுகில் வீடு!
Updated on
2 min read

பூஞ்சோலை கிராமத்தின் மேற்குத் திசையில் சிறிய காடு இருந்தது. அந்தக் காட்டில் இருந்த ஒரு மரத்தில் இரண்டு புறாக்கள் கூடுகட்டி வசித்தன. சில நாட்களுக்கு முன்புதான் அவற்றுக்குக் குஞ்சுகள் பிறந்திருந்தன.

புறாக்கள் இரண்டும் அதிகாலை தங்கள் கூட்டிலிருந்து கிழக்குத் திசை நோக்கிப் பறந்து செல்லும். பூஞ்சோலை கிராமத்துக்கு அருகிலிருந்த சோளக்கொல்லைக்குச் சென்று, சோளமுத்துகளைச் சாப்பிடும். பிறகு மாலை வேளையில் சோளக் கதிர்களைக் கொத்தியபடி தங்கள் கூட்டுக்குத் திரும்பும். கூட்டிலிருக்கும் குஞ்சுகளுக்குச் சோளமுத்துகளை உடைத்து, ஊட்டிவிடும்.

அன்று புறாக்கள் இரண்டும் கூட்டிலிருந்து சோளக்கொல்லையை நோக்கிப் புறப்பட்டன. வழியில் ஒரு நத்தையைக் கண்டன. அது மெதுவாக ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது.

“இது நாமிருக்கும் காட்டிலுள்ள குளக்கரையில் வசிக்கும் நத்தைதானே?” என்று கேட்டது ஒரு புறா.

“ஆமாம், அதேதான்!” என்று மற்றொரு புறா சொல்ல, புறாக்கள் இரண்டும் நத்தையின் அருகில் இறங்கின.

“நத்தையாரே, எங்கே இவ்வளவு வேகமாகப் போயிட்டிருக்கீங்க? ஏதாவது அவசர வேலையோ?” என்று ஒரு புறா கேட்டது.

“அவசரம் ஒன்றும் இல்லை. அரை கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என் உறவினர் ஒருவரைப் பார்க்கப் போகிறேன்” என்று நிதானமாகப் பதில் சொன்னது நத்தை.

“அவ்வளவு தொலைவா? நேற்றே கிளம்பிட்டீங்களா? ”

“நான் புறப்பட்டு இரண்டு நாட்கள் ஆகிவிட்டன” என்றது நத்தை.

“இரண்டு நாட்களா? அப்படியென்றால் நீங்க ஊர்போய்ச் சேர ஒரு மாதம் ஆகும்போலத் தெரிகிறதே” என்று சிரித்தது ஒரு புறா.

“சரி, நீங்கள் இருவரும் எங்கே போகிறீர்கள்?” என்று புறாக்களிடம் கேட்டது நத்தை.

“நாங்கள் தினமும் 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சோளக்கொல்லைக்குப் போகிறோம். சோளமுத்துகளை உண்டுவிட்டு மாலையில் அதே ஐந்து கிலோமீட்டர் பயணம் செய்து, நம் காட்டுக்குத் திரும்பி வருகிறோம்.”

“சரி, சரி. நீங்கள் வெகுதொலைவு போக வேண்டும் அல்லவா? கிளம்புங்கள்!” என்று சொன்னது நத்தை. புறாக்களும் பறந்து சென்றன.

மாலை வேளை புறாக்கள் இரண்டும் அலகில் சோளக்கதிர்களைக் கவ்விக்கொண்டு அதே வழியில் திரும்பிவந்தன. மீண்டும் நத்தையைப் பார்த்தன.

“நத்தையே! நாங்கள் உணவு தேடிவிட்டு கூடு திரும்பிக்கொண்டிருக்கிறோம். இருட்டத் தொடங்கிவிட்டது. நீங்க பகல் முழுவதும் நடந்தும்கூட இவ்வளவு தொலைவைத்தான் கடந்தீங்களா? ” என்று ஒரு புறா கேட்டது.

“வாயில் என்ன?” என்று கேட்டது நத்தை.

“எங்கள் குஞ்சுகளுக்குக் கொடுப்பதற்காகச் சோளக்கதிர்களை எடுத்துச் செல்கிறோம்.”

“தினமும் பத்து கிலோமீட்டர் தொலைவு பறக்க வேண்டுமா? உங்கள் கூட்டை ஏன் சோளக்கொல்லையிலேயே கட்டிக்கொள்ளக் கூடாது? இப்படி அங்குமிங்கும் அலைந்து திரிய வேண்டிய அவசியம் இருக்காது அல்லவா?” என்று கேட்டது நத்தை.

“அதெப்படி முடியும்? சோளக்கொல்லையில் நாங்கள் கூடு கட்டினால் எங்களுக்கும் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பு இருக்காதே... அது திறந்தவெளி அல்லவா? மனிதர்களாலும் பூனைகளாலும் கழுகுகளாலும் ஆபத்து வரலாம்.

அதனால்தான் காட்டுப் பகுதியில் உயர்ந்த மரத்தில் கூடுகட்டி வைத்திருக்கிறோம். உணவுக்காகத் தினமும் சோளக்கொல்லைக்குச் சென்று வருகிறோம்” என்றன புறாக்கள்.

“பாவம் நீங்கள்! உறைவிடத்திற்கும் உணவு இருக்கும் இடத்திற்கும் பறந்து திரிந்தே உங்கள் வாழ்நாளில் பாதி வீணாகப் போய்விடுகிறதே. ஆனால், என்னைப் பாருங்கள். என் வீட்டை நான் முதுகிலேயே சுமந்து செல்கிறேன். இருட்டி விட்டதே என்று எனக்கு கவலையோ பயமோ இல்லை.

ஓய்வெடுக்க வேண்டும் என்றால் ஓட்டுக்குள் சென்றுவிடுவேன். களைப்பு நீங்கியதும் மீண்டும் பயணத்தைத் தொடர்வேன்” என்று நத்தை சொன்னதும், புறாக்கள் இரண்டும் அமைதியாக இருந்தன.

“நண்பர்களே, இயற்கை ஒவ்வொரு உயிரையும் காரணத்தோடுதான் படைத் திருக்கிறது. உங்களால் வேகமாகப் பறக்க முடியும். என்னால் மெதுவாகத்தான் நடக்க முடியும்.

ஆனால், எனக்கு ஒரு ஆபத்து என்றால் ஓட்டுக்குள்ளும் தண்ணீருக்குள்ளும் பாதுகாப்பாக இருக்க முடியும். உங்களால் அது முடியுமா? விரைவில் காட்டுக்குப் போய்ச் சேருங்கள். குஞ்சுகள் பசியோடு காத்திருக்கும்” என்றது நத்தை.

“நத்தையே, எங்களை மன்னித்துவிடுங்கள். புரிந்துகொண்டோம்” என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றன புறாக்கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in