

வேகமாகச் சீறிப்பாய்ந்த நாட்டிலஸ் நீர்மூழ்கி, ஆஸ்திரேலியாவின் பெரும் பவளத்திட்டுக்கு அருகே வந்து நின்றது. மூவரும் பவளத்திட்டின் ஒரு மூலையில் நிதானமாக நீந்திக்கொண்டிருக்கும் பேராமையை ரசித்தனர்.
“அதோ, கடல் நட்சத்திரம்” என்று கைகாட்டினாள் ரக்ஷா.
அங்கே கிட்டத்தட்ட ஓர் அடி விட்டத்தில், முள்கள் நிறைந்த பெரிய கருஞ்சிவப்பு கடல் நட்சத்திரம் இருந்தது.
“இதுக்கு நிறைய கைகள் இருக்கும்போல, இந்தப் பக்கம் ஆறு... அந்தப் பக்கம் ஏழு...” என்று கழுத்தை வளைத்து எண்ணினான் செந்தில்.
“இதை எண்ணி முடிக்க உனக்கு இவ்வளவு நேரமா? மொத்தம் 21 கை” என்றாள் ரோசி.
“இது முள்கிரீட நட்சத்திரம் (Crown of Thorns Sea star). இது ஆஸ்திரேலியாவில் நிறைய இருக்கும். இந்தியப் பெருங்கடலில்கூடப் பார்க்கலாம்” என்றார் அருணா.
“முள் நீளமா இருக்கு” என்று ரோசி சொல்ல, “ஆமாம், இதன் ஒவ்வொரு முள்ளுமே 4 சென்டிமீட்டர் நீளம் இருக்கும். சரி, சரி கவனிங்க” என்று அருணா சொன்னார். முள்கிரீட நட்சத்திரம் நகர்வதை அனைவரும் பார்த்தார்கள்.
நீர்மூழ்கியிலிருந்து சீறியபடி புறப்பட்ட சிறிய ரோபாட் கேமரா, அங்கே நடப்பதைத் துல்லியமாகப் படம் எடுத்து, நேரலையாக நீர்மூழ்கிக்குள் அனுப்பியது.
மெதுவாக நகர்ந்த முள்கிரீட நட்சத்திரம், ஒரு பவள உயிரியின் மேல் அமர்ந்துகொண்டது. அது நகரும்போதெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக முள்கிரீட நட்சத்திரத்தின் குழல் கால்கள் (Tube Feet) முன்னேறுவது ரோபாட் கேமராவில் தெரிந்தது.
அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தபோதே, முள்கிரீட நட்சத்திரம் பவள உயிரியை இறுக்கிப் பிடித்தது. பவள உயிரியின்மீது அதன் வயிற்றுப் பகுதிக்குள்ளிருந்து வந்த திரவம் பீய்ச்சி அடிக்கப்பட்டது. அடுத்த முப்பது நிமிடங்களில் முள்கிரீட நட்சத்திரம் கொஞ்சம் கொஞ்சமாகப் பவள உயிரியை உறிஞ்சியது. அது இறங்கியபோது பவள உயிரியின் அந்தப் பகுதியே நிறம் இழந்து வெளிறிப் போயிருந்தது.
“என்ன நடந்தது!” என்று ஆச்சரியப்பட்டாள் ரோசி.
“இந்த முள்கிரீட நட்சத்திரம் பவள உயிரியோட மொக்குகளை (Polyps) ஜீரணத் திரவங்கள் மூலமாகக் கரைத்து, உறிஞ்சிவிட்டுப் போகிறது. அடுத்த சில நாட்களில் இந்தப் பவள உயிரி முழுமையாக நிறமிழந்து, இறந்துவிடும். இதன் மேல் பாசி படர்ந்துடும்” என்றார் அருணா.
“வேகமாகச் சாப்பிடுதே” என்று செந்தில் கேட்க, “ஆமாம். ஒரு முள்கிரீட நட்சத்திரம் சராசரியாக ஒரே நாளில் 60 சதுர சென்டிமீட்டர் பவளத்திட்டைச் சாப்பிடும்! ஆண்டுக்கு 65 சதுர அடி பவளத்திட்டைத் தின்று முடிக்கும்” என்றார் அருணா.
“பவளத்திட்டுகள் உருவாகவே பல ஆண்டுகள் ஆகும். இப்படி வேகமாக இரையானால் எப்படிப் பவளத்திட்டைப் பாதுகாக்க முடியும்?” என்று ரக்ஷா கேட்டாள்.
“இயற்கை அப்படி எல்லாம் விட்டுடுமா? இந்த முள்கிரீட நட்சத்திரத்துக்கும் வேட்டையாடிகள் இருக்கும். அதுதான் சமநிலை” என்றான் செந்தில்.
“ரொம்ப சரி. அங்கே பாருங்க” என்று அருணா கைகாட்ட, முள்கிரீட நட்சத்திரத்துக்கு அருகில் பெரிய சங்கு நத்தை ஊர்ந்துவந்தது. நத்தையைக் கண்டதும் அங்கிருந்த ஒன்றிரண்டு முள்கிரீட நட்சத்திரங்கள் நகர்ந்தன.
“இது ட்ரைட்டன் சங்கு (Triton Trumpet). முள்கிரீட நட்சத்திரத்தைத் தன்னுடைய கூர்மையான வயிற்றுப்பல்லால் வேட்டையாடிச் சாப்பிடும். ஒருவகை கிளிமீனும் முள்கிரீட நட்சத்திரத்தை வேட்டையாடும்” என்றார் அருணா.
“அப்பாடா, பவளத்திட்டுத் தப்பிச்சது” என்றாள் ரோசி.
“அவசரப்படாதீங்க” என்று ஒரு காணொளியை ஓடவிட்டார் அருணா. “இதில் ஆயிரக்கணக்கான முள்கிரீட நட்சத்திரங்கள் இருக்கு பார்த்தீங்களா? ஆஸ்திரேலியாவில் இது ஒரு பெரிய பிரச்சினையா இருக்கு. நத்தைகளை அழகுக்காகச் சுற்றுலா பயணிகள் சேகரிப்பது, கிளிமீன்கள் அளவுக்கு அதிகமாகப் பிடிக்கப்படுவது, மாசு போன்ற காரணங் களால வேட்டையாடிகளோட எண்ணிக்கை குறைந்துவிட்டது. வேட்டையாடிகள் இல்லாமல் முள்கிரீட நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகரிக்குது, இது பவளத்திட்டுகளுக்கே ஆபத்தாக முடியுது” என்றார் அருணா.
“முள்கிரீட நட்சத்திரம் கையை இழந்தாலும் திரும்ப கை முளைச்சிடுமே! என்னதான் தீர்வு?” என்றான் செந்தில்.
“ஆமாம். இந்த ட்ரைட்டன் சங்குகள், கிளிமீன்களின் எண்ணிக்கையை எப்படிப் பழையபடி மீட்பது என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்துகிறார்கள். 2015இல் இந்த முள்கிரீட நட்சத்திரங்களை மட்டுமே அழிக்கும் ஒரு சிறு ரோபாட்கூட உருவாக்கப்பட்டது” என்றார் அருணா.
“சூப்பர்! ரோபாட் நண்பனின் துணையோட ஒரு சூப்பர் ஹீரோ பவளத்திட்டுகளைக் காப்பாத்துற மாதிரி நான் ஒரு கதை எழுதப் போறேன்” என்றாள் ரக்ஷா.
சூப்பர் ஹீரோவுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று மூவரும் சண்டையிட, நீர்மூழ்கி மெல்லப் புறப்பட்டது.
(அதிசயங்களைக் காண்போம்)
கட்டுரையாளர், கடல்சார் ஆராய்ச்சியாளர்.
தொடர்புக்கு: nans.mythila@gmail.com