பாடுவோம்! படித்து மகிழ்வோம்!

பாடுவோம்! படித்து மகிழ்வோம்!
Updated on
2 min read

குழந்தைக் கவிஞர் என்ற பட்டத்தைப் பெற்ற அழ. வள்ளியப்பாவின் பாடல்கள் எளிமையும் சந்தமும் நிரம்பியவை. இவற்றைக் குழந்தைகள் தாங்களே படித்துப் புரிந்துகொள்வதுடன் ராகம் போட்டும் பாடலாம். அவர் எழுதிய பல பாடல்கள் குழந்தைகளிடமிருந்து உருவானவை. குழந்தைகளிடம் கலந்துரையாடியதன் காரணமாக உருவானவை.

நத்தை, யானை, இறகு, ஆமையின் ஓடு, மின்மினி, நிலா, தும்பி என அவருடைய பாடல்களில் பலவும் இயற்கையைப் பற்றியும், இயற்கை அம்சங்களைப் பற்றியும் சொல்பவை. அதேநேரம் குழந்தைகள் வாயைப் பிளந்து வியக்கும் விமானம், வண்டி, வீடு போன்ற செயற்கைப் பொருட்களைப் பற்றியும் நிறைய பாடல்கள் உள்ளன. இவற்றைத் தவிர பாடல்கள் மூலமாகவே கதையைச் சொல்லும் ‘கதைப் பாடல்கள்’, பெரிதாக விஷயம் ஏதுமில்லாமல் ஜாலியாக எழுதப்பட்ட ‘வேடிக்கை பாடல்கள்’ போன்றவற்றையும் அழ. வள்ளியப்பா எழுதியுள்ளார்.

அவர் எழுதிய குழந்தைப் பாடல்களின் தொகுப்பான ‘மலரும் உள்ளம்’ தேசிய, மாநில அரசுகளின் பரிசுகளைப் பெற்றது. மலரும் உள்ளம் தொகுப்பின் இரண்டாம் பாகத்தை ‘ஆடும் மயில்’ என்ற தலைப்பில் என்.சி.பி.எச். தற்போது புத்தகமாக வெளியிட்டுள்ளது.

இந்தப் பாடல்களில் பலவும் அன்றைக்குப் பெரியவர்களிடையே பிரபலமாக இருந்த ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், உமா போன்ற இதழ்களிலும், விதிவிலக்காகக் கலைக்கதிர் (அறிவியல்), கண்ணன் (குழந்தைகள்) இதழ்களிலும் வெளியானவை.

‘ஆடும் மயில்’ புத்தகத்தில் இடம்பெற்றுள்ள எளிமையான, சட்டென்று கவரக்கூடிய கோட்டோவியங்களை வடித்திருப்பவர் ஓவியர் டி.என். ராஜன். வள்ளியப்பாவின் பாடல்களுக்கு இந்த ஓவியங்கள் மேலும் அழகு சேர்க்கின்றன.

வெளியீடு: நியு செஞ்சுரி புக் ஹவுஸ்,
தொலைபேசி 044 - 2624 1288

‘ஆடும் மயில்’ புத்தகத்தில் இருந்து இரண்டு சுவாரசியமான பாடல்களைப் பார்ப்போம்.

சீக்கிரம் நமக்கெல்லாம் ஸ்கூல் திறக்கப் போகிறார்கள் இல்லையா, அதைப் பற்றி அழ. வள்ளியப்பாவின் கதைப்பாடல் ஒன்று:

ஏமாற்றம்

இரண்டு மாத விடுமுறையும்

இனிமையாகக் கழிந்ததுவே.

பள்ளிக்கூடம் திறந்ததுவே,

பரீட்சை முடிவும் தெரிந்ததுவே.

‘எட்டாம் வகுப்பைக் கடந்தோம் நாம்.

இனிமேல் பயமே இல்லை’ யென

எண்ணிக்கொண்டே வீடடைந்தேன்,

என்றும் இல்லா மகிழ்வுடனே.

மறுநாள் பள்ளி செல்லுகையில்,

வழியில் உள்ள கடைதனிலே,

கண்டேன் அழகிய புத்தகமே,

காசைக் கொடுத்து வாங்கினனே.

வாங்கிப் படித்துக்கொண்டே நான்

மகிழ்வுடன் பள்ளி வந்தடைந்தேன்.

வகுப்பில் நுழைந்தேன், அங்கும் நான்

மற்றவருடனே பேசாமல்,

கதையைப் படிப்பதில் என்னுடைய

கவனம் முழுவதும் செலுத்தினனே.

கலகல என்ற சிரிப்பொலிதான்

காதில் விழுந்தது, உடனே நான்,

‘ஏனோ மாணவர் சிரிக்கின்றார்?’

என்றே நிமிர்ந்து பார்க்கையிலே,

என்னைப் பார்த்தே சிரித்தார்கள்

என்பதை உடனே நானறிந்தேன்.

விஷயம் புரிந்தது. புரிந்ததுமே

வெட்கங் கொண்டேன். எதனாலே?

கதையைப் படிப்பதில் மாத்திரமே,

கவனம் செலுத்திச் சென்றதனால்,

எட்டாம் வகுப்பில் திரும்பவும் நான்

இருப்பதை அறிந்தேன், அடடாவோ!

படித்துத் தேறியும் முன்போலப்

பழைய வகுப்பில் நுழைந்ததனை

எண்ணி ஓட்டம் பிடித்தேனே,

எனது வகுப்பை அடைந்தேனே!

அலட்சியமாக இருப்பது பற்றி அழ.வள்ளியப்பாவின் வேடிக்கைப் பாடல் ஒன்று:

தொப்பென்று வீழ்ந்தான்!

தெருவில் நடந்து சென்றான்

சின்னச்சாமி என்பான்.

வாழைப் பழத்தைத் தின்றான்;

வழியில் தோலை எறிந்தான்;

மேலும் நடந்து சென்றான்;

விரைந்து திரும்பி வந்தான்;

தோலில் காலை வைத்தான்.

தொப்பென்று அங்கே வீழ்ந்தான்!

விடுமுறையில் வாசிக்கலாமே!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in