

ரோமாபுரி முழுக்கத் தேடிப் பார்த்து விட்டேன். தொலைவான இடங்களுக்கு ஆள்களை அனுப்பிப் பார்த்துவிட்டேன். அறிஞர்கள், தத்துவ ஆசிரியர்கள், ஞானிகள், கவிஞர்கள், கலைஞர்கள் என்று எல்லாரிடமும் கேட்டுப் பார்த்துவிட்டேன்.
இதுவரை நான் தேடியது கிடைக்கவில்லை. அப்படி ஒன்று இந்த உலகிலேயே கிடையாது என்று வருத்தத்தோடு கைவிரித்துவிட்டார்கள் அனைவரும்.
இதுவரை இல்லாவிட்டால் என்ன, நீங்கள் உருவாக்கிக் கொடுக்கக் கூடாதா என்றுகூடச் சொல்லிப் பார்த்துவிட்டேன். ஐயோ, என்னால் முடியாது என்று எல்லாரும் பறந்தோடிவிட்டார்கள்.
என்னது, ரோம சாம்ராஜியத்தின் பேரரசர் மார்கஸ் அரேலியஸ் தேடியும் கிடைக்காத ஒரு பொருள் இந்த உலகில் உண்டா? அவர் இவ்வளவு கெஞ்சியும் முடியாது என்று அனைவரும் மறுத்துவிட்டார்களா? அப்படி எதைத்தான் தேடினீர்கள் மார்கஸ் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? சொல்கிறேன். நான் தேடியது ஒரு புத்தகத்தை. ஒரே ஒரு புத்தகத்தை.
என் அரண்மனை எந்நேரமும் செழிப்போடு மின்னிக்கொண்டிருக்கிறது. என் பெட்டகத்தில் பொன்னும் வைரமும் குவிந்துகிடக்கின்றன. என் உணவு மேஜையில் இல்லாத ருசி இல்லை. என் தோட்டத்தில் விளையாத பழம் இல்லை. என் படைகளிடம் இல்லாத ஆயுதம் எதுவும் இல்லை. என்னைக் கண்டு அஞ்சாத மனிதரை இதுவரை நான் பார்த்ததில்லை.
என் கவலை என்ன தெரியுமா? நான் எவ்வளவு பெரிய தவறு இழைத்தாலும் அதை ஒருவரும் கண்டுகொள்ளப் போவதில்லை. நீங்கள் அப்படிச் செய்திருக்கக் கூடாது மார்கஸ் என்று என் முன்னால் யாரும் வந்து கைநீட்டிச் சொல்லப் போவதில்லை. நான் பிழையாக வாதிட்டாலும், ஆம் மன்னா நீங்கள் சொல்வதுதான் சரி என்கிறார்கள் என்னைச் சுற்றி இருப்பவர்கள்.
நான் தவறாகவே முடிவெடுத்தாலும், என் முடிவால் பலர் பாதிக்கப்பட்டாலும், அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவர்கூட, நீங்கள் எடுக்கும் முடிவு எப்போதும் நியாயமாகத்தான் இருக்கும் மன்னா என்றுதான் சொல்வார்கள்.
இதே நான் மார்கஸ் அரேலியஸ் என்னும் தனி மனிதனாக இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று பாருங்கள். இதை ஏன் இப்படிச் செய்தாய்? அதை ஏன் செய்யத் தவறினாய்? உன் வாதம் தவறானது. உனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியவில்லை. உன் புரிதலில் போதாமை இருக்கிறது என்றெல்லாம் சொல்லியிருப்பார்கள்.
நான் சறுக்கும் ஒவ்வொரு முறையும் யாராவது என்னைத் திருத்தியிருப்பார்கள். என் குற்றங்களை நிச்சயம் யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
நான் யாரோ ஒருவனாக இருந்திருந்தால் ஆயிரம் வழிகாட்டிகள் எனக்குக் கிடைத் திருப்பார்கள். ஆயிரம் பாதைகள் எனக்குத் திறந்திருக்கும். நான் யாரோ ஒருவனாக இருந்திருந்தால் ஆயிரம் நூல்களை நான் வாசித்திருக்க முடியும். எது நீதி, எது நியாயம், எது சரி, எது தவறு என்பதை எல்லாம் நானே படித்துத் தெரிந்துகொண்டிருக்க முடியும்.
ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்றும் எப்படி வாழக் கூடாது என்றும் சொல்வதற்கு ஆயிரம் நூல்கள் இருக்கின்றன. ஆனால், என்னைப் போன்ற ஒரு பேரரசர் எப்படி வாழவேண்டும் என்று அறிவுறுத்த ஒரு நூல், ஒரே ஒரு நூல்கூட இங்கு இல்லை.
ஒரு பேரரசர் தவறு இழைக்காமல் எப்படி ஆட்சி செய்ய வேண்டும்? செல்வத்தைக் கண்டு மயங்காமல் இருக்க அவர் என்ன செய்ய வேண்டும்? நீதியின் பாதை என்பது எப்படி இருக்கும்? மக்களின் அசலான தேவையை அவர் எவ்வாறு கண்டறிய வேண்டும்? என்னைவிடப் பலசாலி இந்த உலகில் யாரும் இல்லை என்றோ நான் நினைத்தால் ஆகாதது எதுவும் இல்லை என்றோ மமதை கொள்ளாமல் இருப்பது சாத்தியமா?
தினம் தினம் பல முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன். மக்கள் கொண்டுவரும் வழக்குகளைத் தீர்க்க வேண்டியது என் பொறுப்பு. மார்கஸ் நம்மை எல்லாம் ஆள்கிறார், அவர் பார்த்துக்கொள்வார் என்று மக்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றுகிறேனா இல்லையா என்பதை யார் கண்காணிப்பது?
சாதாரண மனிதனால் நூறு குற்றங்கள் இழைக்க முடியும் என்றால் பேரரசனான என்னால் பல நூறு மடங்கு அதிக குற்றங்களை இழைக்க முடியும் அல்லவா?
என் அதிகாரத்தையும் பலத்தையும் செல்வத்தையும் காண்பதற்கு எனக்கே அச்சமாக இருக்கிறது. நானும் உங்களைப் போன்ற மனிதன்தான். என்னோடு வந்து நேர்மையாக உரையாடுங்கள் என்று யாரை அழைத்தாலும், பேரரசரே, உங்களோடு உரையாடு வதற்கான தகுதி எனக்கு இல்லை என்று எல்லாரும் விலகிவிடுகிறார்கள்.
யாரும் நெருங்க முடியாத உயரத்தில் என்னை ஏன் ஏற்றி வைத்திருக்கிறீர்கள்? என்னை ஏன் எல்லாரிடமிருந்தும் பிரித்து வைத்திருக்கிறீர்கள்? நான் என்ன கடவுளா? நான் என்ன அதிசயப் பிறவியா? என் தலையில் மணிமுடி ஏறுவதற்கு முந்தைய கணம் வரை உங்கள் எல்லாரையும் போன்ற சாதாரண மனிதனாகத்தானே நானும் இருந்தேன்? இப்போதும் அவ்வாறே கருதி என்னை ஏற்றுக்கொள்ள ஏன் முடியவில்லை உங்களால்?
எல்லாரிடமும் கேட்டுக்கேட்டுச் சலித்த பிறகு, இறுதியாக நான் ஒரு முடிவுக்கு வந்தேன். என்னைக் கட்டுப்படுத்த வெளியில் எந்த ஒரு குரலும் இல்லை என்றால் அப்படி ஒரு குரலை நானே எனக்குள் இருந்து கண்டறிவேன். அந்தக் குரல் சொல்வதைக் கவனித்துக் கேட்டு, நானே ஒரு நூலை எனக்காக எழுதிக்கொள்வேன்.
என்னால் கனவிலும் தொட முடியாத ஓர் உயரத்தைக் கண்டுபிடித்து, மார்கஸ் நீ செல்ல வேண்டிய இடம் இதுதான் என்று அதில் எழுதுவேன். ஒரு சாதாரண மனிதன் பின்பற்றுவதைக் காட்டிலும் மேலான, கடினமான ஒழுக்க விதிகளை வகுத்து, மார்கஸ் இவற்றிலிருந்து ஒரு நாளும் விலகாதே என்று அதில் எழுதுவேன்.
என் ஒவ்வொரு செய்கையையும் அந்த நூல் கவனமாகக் கண்காணிக்கும். நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் அது சீர்தூக்கிப் பார்க்கும். என் சிறுமை, என் போதாமை போன்றவற்றை அந்நூல் தெளிவாகச் சுட்டிக்காட்டும். நான் தவறிழைக்கும் ஒவ்வொரு முறையும் என் தலையில் அது குட்டும்.
வானில் மிதந்துகொண்டிருக்கும் என்னை இந்நூல் கையைப் பிடித்து இழுத்துவந்து தரையில் வீசும். என் அதிகாரத்தைப் பார்த்து அது சிரிக்கும். என்னோடு ஓயாமல் அது உரையாடும், ஓயாமல் சண்டையிடும். எனக்கே எனக்கான அந்த நூல் ஒரு பேரரசனாக மாறிவிட்ட என்னைக் காதைப் பிடித்துத் திருகி மீண்டும் ஒரு மனிதனாக மாற்றும். அந்த மாயம் நிகழ்வதற்காக நான் காத்திருக்கிறேன்.
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com