ஆழ்கடல் அதிசயங்கள் 11: கடல் மூரைகளுக்கு வேட்டையாடிகள் உண்டா?

ஆழ்கடல் அதிசயங்கள் 11: கடல் மூரைகளுக்கு வேட்டையாடிகள் உண்டா?
Updated on
2 min read

வேகமாக வந்த நாட்டிலஸ் நீர்மூழ்கி, இந்தோனேசியாவின் பவளத்திட்டுகள் அருகில் நின்றது. கண்ணாடியைப் போன்ற கலங்காத நீரில் எல்லா உயிரினங்களும் அழகாகத் தெரிந்தன.

“இதுக்கு நீர்மூழ்கிகூடத் தேவை இல்லை, ஹெலிகாப்டர்ல இருந்தே பவளத்திட்டுகளைப் பார்க்கலாம்போல! தண்ணீர் அவ்வளவு தெளிவா இருக்கே” என்று ஆச்சரியப்பட்டாள் ரோசி.

வண்ண மீன்கள் அங்கும் இங்கும் நீந்திக்கொண்டிருக்க, திட்டு இடுக்கில் முள்களோடு ஓர் உயிரி கிடந்தது.

“இதைப் பார்க்கத்தான் வந்திருக்கோம், இதன் பெயர் கடல் மூரை (Sea Urchin)” என்றார் அருணா.

“நல்ல பேருதான். சில நேரம் பெரிய புலிகள்கூட முள்ளம்பன்றிகள்கிட்ட ஜாக்கிரதையா நடந்துக்கும்னு படிச்சிருக்கோம். இது கடல் முள்ளம்பன்றிபோல! யாராலும் நெருங்கவே முடியாதா?” என்றான் செந்தில்.

“இந்த முள்கள் பாதுகாப்பு தரும் என்பது உண்மைதான். ஆனா, கடல் மூரையையும் விரும்பிச் சாப்பிடும் உயிரினங்கள் இருக்கும்தானே?” என்று சந்தேகமாகக் கேட்டாள் ரக்‌ஷா.

“அதைத்தான் தெரிஞ்சிக்கப் போறோம். கவனமா பாருங்க” என்று அருணா சொல்ல, கடல் மூரையை நெருங்கி வந்தது பெரிய கிளாத்தி மீன் (Triggerfish) ஒன்று.

“அது சரி, இந்த மீன் வாயைப் பக்கத்துல கொண்டு போனாலே முள் குத்திடும். இது எப்படி மூரையைச் சாப்பிடும்?” என்று கிண்டலாகக் கேட்டான் செந்தில்.

அருணா புன்னகை செய்தபடி இருந்தார். மெதுவாக மூரையை நெருங்கிய கிளாத்தி மீன், ஒவ்வொரு முள்ளாக வாயாலேயே பிடுங்கி உடைத்தது. பிறகு வாயாலும் மூக்காலும் நெட்டித் தள்ளி, மூரையைக் குப்புறப் புரட்டியது. மூரையின் வயிற்றுப் பகுதியில் ஓர் ஓட்டை இருந்தது. அந்த ஓட்டையில் வாயை வைத்து, உள்ளிருந்த சதையை உறிஞ்சியது!

கிட்டத்தட்ட நான்கு நிமிடங்களுக்கு மேல் நடந்த இந்த வேட்டையை மூவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.

“சூப்பர்! எப்படி இவ்வளவு திறமையா சாப்பிடுது?” என்றாள் ரோசி.

“கொஞ்சம் இருங்க” என்றபடி நீர்மூழ்கியை இன்னும் சிறிது தொலைவு செலுத்தினார் அருணா. அங்கு வேறு ஒரு கடல் மூரையைக் கடல் நட்சத்திரம் ஒன்று நெருங்கிக்கொண்டிருந்தது.

“இதுவும் அதே மாதிரிதான் சாப்பிடுமா?” என்று செந்தில் கேட்க, “இல்ல இல்ல, அதோ பாரு” என்று ரக்‌ஷா கைகாட்டினாள்.

முதலில் அந்தக் கடல் நட்சத்திரம் முள்களைக் கண்டுகொள்ளாமல் மூரையின் மேல் படுத்துக்கொண்டது. தன்னுடைய ஐந்து கரங்களாலும் மூரையை அது இறுக்கமாகப் பிடித்துக்கொண்டதுபோலத் தோன்றியது.

“என்ன நடக்குது?” என்று மூவரும் ஒரே குரலில் கேட்டார்கள்.

“வயிற்றுக்கு வெளியிலேயே இப்போ ஜீரணம் நடந்துகிட்டு இருக்கு. கடல் நட்சத்திரம் தன்னுடைய குடலில் இருக்கும் ரசாயன திரவத்தை வெளியில் செலுத்தி, மூரையை மொத்தமாகக் கரைக்குது! பிறகு கரைஞ்ச சத்துகளை உறிஞ்சிடும்” என்று விளக்கிய அருணா, நீர்மூழ்கியை ஆழம் குறைவான பகுதிக்குச் செலுத்தினார்.

அங்கு இருந்த ஒரு மூரையை ஆலா (Sea gull) என்கிற கடல்பறவை வேட்டையாடிக்கொண்டிருந்தது! தன்னுடைய கடினமான அலகால் முள்களையும் ஓட்டையும் உடைத்து, மூரையின் சதையைச் சாப்பிடத் தொடங்கியது. “அட! இத்தனை விதமான வேட்டை உத்திகள் இருக்கா?” என்றாள் ரோசி.

“இதோ பாருங்க, இது கலிபோர்னியாவில் நடக்கும் வேட்டை” என்று நீர்மூழ்கிக்குள் ஒரு காணொளியை ஓடவிட்டார் அருணா. அதில், சில கடல்நீர்நாய்கள் (Sea otters), ஊதா நிறத்தில் இருந்த மூரைகளை வேட்டையாடும் காட்சி தெரிந்தது. தங்களது உள்ளங்கைகளால் கடல் மூரை முள்களை ஒருபக்கம் ஒதுக்கிய கடல்நீர்நாய்கள், முள் இல்லாத பக்கத்தைப் பக்கவாட்டில் கடித்துச் சாப்பிட்டன. “இந்தக் கடல்நீர்நாய்கள் கடல் மூரைகளை விரும்பிச் சாப்பிடும் என்பதால், காலப்போக்கில் இதுங்களோட பற்களில் ஊதா சாயம் ஒட்டிக்கும்” என்றார் அருணா.

“முதல்ல ரக்‌ஷா சொன்னதுதான் சரி. முள்கள் நிறைந்த உயிரினமா இருந்தாலும், அந்த முள்களையும் தாண்டி கடல் மூரைகளை வேட்டையாடும் உயிரினங்கள் உண்டு. பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொரு வேட்டையாடியும் கடல் மூரைகளின் முள்களைச் சமாளிக்க ஒவ்வொரு வித்தையை வெச்சிருக்கும். கடல் மூரைகள் வேகமா வளரக்கூடியவை என்பதால், இதுபோன்ற வேட்டை யாடிகள் இல்லைன்னா அவற்றின் எண்ணிக்கை அதிகமாகிடும். அது சூழலோட சமநிலையைக் குலைச்சிடும்” என்று அருணா விளக்கம் கொடுத்தார்.

“முள் இருக்கும் மூரையைக்கூட வேட்டை உயிரினங்கள் சுலபமா சாப்பிடுது, நீ என்னடான்னா சின்ன ஆரஞ்சுப்பழத்தை உரிக்க முடியாம என்கிட்ட கொடுத்தியே”என்று ரோசி கிண்டலடித்தாள். “நகத்தை வெட்டியிருந்தேன், அதான்” என்று செந்தில் சொல்ல, கடல்நீர்நாய்களுக்கு நகம் எவ்வளவு பெரிதாக இருக்கும் என்று மூவரும் விவாதிக்கத் தொடங்கினார்கள். நீர்மூழ்கி மெல்ல வேகம் எடுத்தது.

கட்டுரையாளர், கடல்சார் ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: nans.mythila@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in