

பூமியின் உடல் அனலாகக் கொதித்தது. அவள் சோர்வாக இருந்தாள். சரியாக மூச்சுவிட முடியாமல் தவித்தாள்.
எப்போதும் அவள் சுழற்சிக்கு நடுவே சற்றுத் தூங்குவாள். இப்போதெல்லம் பகல் மிகவும் வேதனையாக இருக்கிறது. சூரியக் கதிர்கள் மேனியைச் சுட்டெரிக்கின்றன. உடல்நிலை மோசமடைந்து வருவதை நினைத்து பூமி கவலையடைந்தாள்.
“எனக்குக் காய்ச்சல் அதிகரிக்கிறது. காடுகள் தீப்பிடித்துவிடுகின்றன. இப்போது நான் என்ன செய்வேன்?” என்று தழுதழுத்த குரலில் சூரியனிடம் கேட்டாள் பூமி.
சூரியக் குடும்பத்தில் உள்ள எல்லாக் கோள்களுக்கும் செய்தி பரவியது. சூரியன், பூமியின் நிலையை எண்ணி வருந்தினார்.
“பூமி நோய்வாய்ப்பட்டிருக்கிறாள். விரைவில் அவள் உடல் நலம்பெற வேண்டும். அவளைத் தீராத காய்ச்சலில் இருந்து மீட்டெடுக்கும் பணியைச் செய்ய வேண்டும்” என்று மற்ற கோள்களிடம் சொன்னார்.
வெள்ளிக் கோளிடம் சூரியன், “பூமிக்கு உடல் பரிசோதனை செய்து, முழு தகவல்களை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
கவலையுடன் வந்த வெள்ளியிடம், “எனக்கு என்ன ஆச்சு? ஏன் நான் மட்டும் இப்படிப் பாதிக்கப்பட்டிருக்கேன்?” என்று வருந்தினாள் பூமி.
பூமியின் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. நுரையீரல் பரிசோதனைகள் நடந்தன. பாதிப்பு அறிகுறிகளை வைத்துப் பார்த்தால், அது நாள்பட்ட நோயாக இருக்கலாம் என்று புரிந்தது. பூமிக்கு ஆறுதல் சொல்லி தேற்றினாள் வெள்ளி.
வறண்டுபோன பூமியின் சருமத்தைச் சோதிக்க, செவ்வாயைத் துணைக்கு அழைத்தாள் வெள்ளி. சருமச் சோதனைகள் நடைபெற்றன. இயற்கையில் பச்சைப் பசேலெனக் காட்சிதரும் பூமியின் சருமப் பகுதி, பொலிவிழந்து, ஆழமான வெடிப்புகளுடன் கறுத்துப் போயிருப்பதைப் பார்த்த செவ்வாய் அதிர்ச்சியடைந்தாள். நோய்த் தடுப்பாற்றல் குறைந்திருப்பது பரிசோதனை முடிவில் தெரியவந்தது.
“சிறுசிறு பாகங்களாக வெடித்துச் சிதறப் போகிறேனோ என்கிற பயம் என்னை வாட்டி வதைக்கிறதே” என்ற பூமியின் பதற்றத்தைத் தணித்து ஆறுதல் சொல்ல, மற்ற கோள்கள் முயன்றன.
கடைசியில் சூரியனுக்குப் பரிசோதனை முடிவுகள் அனுப்பப்பட்டன. அவற்றை ஆராய்ந்து பார்த்த சூரியன், “பரிசோதனைகள் முடிவுகளின்படி, ‘காலநிலை மாற்றம்’ என்கிற கொடிய நோய் பாதித்திருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. உடனே கவனிக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
“அதென்ன காலநிலை மாற்றம்?”
“உன்னைச் சுற்றிப் போர்வைபோல திரண்டுள்ள வாயுக்கள், சூரியனிலிருந்து வெப்பத்தை அனுமதிக்கின்றன. ஆனால், உன் மீது பட்டு எதிரொளிக்கப்படும் வெப்பத்தை விண்வெளிக்கு தப்பிச்செல்ல விடாமல் தடுத்து உன்னிடமே திருப்பி அனுப்பிவிடுகின்றன. இதனால் உன் உடல் கூடுதலாக வெப்பமடைகிறது” என்றார் சூரியன்.
நோய் பாதிப்பின் தீவிரத்தை அறியாத பூமிக்கு, சூரியனின் பேச்சு புரியாத புதிராக இருந்தது. சூரியன் தொடர்ந்தார்.
“உன் மேல் பகுதி தொடர்ந்து அதிகமாகச் சூடாவதால், தட்பவெப்பநிலை மாற்றமும் இயற்கைச் சீற்ற நிகழ்வுகளும் ஏற்படுகின்றன.”
“அதெப்படி?”
“உலகம் முழுவதிலும் பெட்ரோல், டீசல், நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருள்கள் பயன்பாட்டில் உள்ளன. அதன் காரணமாக, அதிக அளவு கரியமிலவாயு வெளியேற்றப்படுகிறது. அதனால், உன் மேற்பரப்பில் உள்ள வாயுக்களின் அடர்த்தி அதிகரித்து, அதிக வெப்பத்தைப் பிடித்து வைத்துக்கொள்கின்றன. இதுவே பிரச்சினைக்குக் காரணம்.”
“இதற்கெல்லாம் சிகிச்சை உள்ளதா? என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்ட பூமியை, வெள்ளியும் செவ்வாயும் தேற்றினார்கள்.
இரக்கப்பட்ட சூரியன், “மாற்று எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்" என்று உபதேசம் செய்தார்.
“வேறு ஏதும் மருந்துகள் இல்லையா?” என்று ஆதங்கத்தோடு கேட்ட பூமிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, “அதிக எண்ணிக்கையில் மரங்கள் வளர்ப்பது நல்ல தீர்வாக இருக்கும். பெரும்பாலான தீங்கு விளைவிக்கும் வாயுக்களை மரங்கள் உட்கொள்வதால், காலநிலையைச் சீராக வைத்திருக்க முடியும்” என்றும் ஆலோசனை சொன்னார் சூரியன்.
பூமிக்குச் சற்று ஆறுதலாக இருந்தது.
“நீ வருத்தப்படும் அளவுக்கு உன்னுடைய மனிதர்கள் வருத்தப்படுவதில்லை. இந்தப் பிரச்சினைக்குக் காரணமே மனிதர்களின் செயல்பாடுகள்தாம். இயற்கை அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தம். மனிதர்கள் தங்களுக்கு அறிவு கூடுதல் என்கிற ஒரே காரணத்துக்காக, இயற்கைச் சமநிலையைக் குலைக்கும் நடவடிக்கைகளில் இறங்கி விட்டார்கள். அவர்கள் தாங்கள் செய்யும் தவறுகளை உணர்ந்து, திருந்தினால்தான் உன் நோய் குணமாகும். இல்லையென்றால், அவர்கள் செய்யும் செயல்களுக்கு, எந்தத் தவறும் செய்யாத மற்ற உயிரினங்களும் நீயும் பாதிக்கப்படுவீர்கள்” என்று சூரியன் சொல்லவும் பூமிக்குப் பயம் வந்துவிட்டது.
“உடனே மனிதர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறேன்” என்றது பூமி.
பூமியின் குரல் உங்களுக்குக் கேட்கிறதா?