

குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்தான் என்றால், இன்றைய குரங்கு ஏன் மனிதனாக மாறவில்லை, டிங்கு?
- கா. நனி இளங்கதிர், 5-ம் வகுப்பு, ஓ.எம்.ஜி.எஸ். பதின்ம உயர்நிலைப் பள்ளி, காளையார்கோவில்.
நல்ல கேள்வி, நனி இளங்கதிர். பரிணாம வளர்ச்சி என்பது ஒன்றிரண்டு ஆண்டுகளிலோ நூறு, இருநூறு ஆண்டுகளிலோ நடந்துவிடக்கூடியது அல்ல. பரிணாம வளர்ச்சியில் ‘காலம்’ என்பது மிக முக்கியமானது.
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே மூதாதையரிடமிருந்து இரண்டு வேறு உயிரினங்களாக, மனிதனும் குரங்கும் பரிணாம வளர்ச்சியடைந்தனர். 2.5 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான இந்த இரண்டு இனங்களும் கொஞ்சம் கொஞ்சமாகப் பரிணாம வளர்ச்சியடைந்து, இன்றைய மனிதர்களாகவும் குரங்குகளாகவும் மாறியிருக்கின்றனர். புதைபடிவங்கள், டி.என்.ஏ., ஆய்வுகள் மூலம் விஞ்ஞானிகள் இதை உறுதிசெய்துள்ளனர்.
மனிதர்களும் ரீசஸ் குரங்குகளும் டி.என்.ஏ.,வில் 93 சதவீத ஒற்றுமையைக் கொண்டுள்ளன. மீதி இருக்கும் வேற்றுமை காரணமாக 2.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தங்களின் பொதுவான மூதாதையரிடமிருந்து மனிதர்களும் ரீசஸ் குரங்குகளும் இரண்டு வேறு உயிரினங்களாகப் பிரிந்துவிட்டன.
வண்ணத்துப்பூச்சியைப் பிடிக்கும்போது இறக்கைகளி லிருந்து ஏதோ ஒரு பொருள் விரல்களில் ஒட்டிக் கொள்கிறதே, அது என்ன டிங்கு?
- ஜி. மஞ்சரி, 10-ம் வகுப்பு, ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
வண்ணத்துப்பூச்சிகளின் இறக்கைகளிலிருந்து உங்கள் விரல்களில் ஒட்டிக்கொள்ளும் அந்தத் தூள், மிகச் சிறிய செதில்கள். இவை உணர்கருவிகள் (Setae ). சூரிய ஒளியை உறிஞ்சி, பிரதிபலிப்பதன் மூலம் வெப்பத்தைச் சமநிலைப்படுத்துகின்றன.
இது தவிர, மென்மையான இந்தச் செதில்கள் எதிரியிடமிருந்து வழுக்கிக்கொண்டு தப்பிச் செல்லும் விதத்தில் அமைந்திருப்பதால், அவற்றின் உயிரையும் காப்பாற்றுகின்றன. வண்ணத்துப்பூச்சி செதில்களை இழந்தால் விரைவில் உயிர் இழந்துவிடும், மஞ்சரி.