ஆழ்கடல் அதிசயங்கள் 10: கடலின் பொறியாளர்கள்!

ஆழ்கடல் அதிசயங்கள் 10: கடலின் பொறியாளர்கள்!
Updated on
3 min read

நாட்டிலஸ் நீர்மூழ்கி வேகமாகச் சீறிப்பாய்ந்து ஜப்பான் கடல் பகுதிக்குச் சென்று நின்றது. மணல் நிறைந்த அந்தக் கடல் பகுதியில் ஆங்காங்கே காணப்பட்ட நண்டுகளையும் திருக்கை மீன்களையும் நீர்மூழ்கிக்குள் இருந்த ரோசி, செந்தில், ரக் ஷா ஆகிய மூவரும் வேடிக்கை பார்த்தனர்.

“அதோ பாருங்க“ என்று ரோசி கைகாட்டினாள்.

அங்கே கடல் தரையில் வட்டவட்டமாக மணலால் அழகான வடிவங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.

“இந்த அழகான வடிவங்களை உருவாக்கிய பொறியாளர் இப்போ வருவார்” என்று ஆராய்ச்சியாளர் அருணா சொல்ல, எல்லாரும் ஆர்வமாகக் காத்திருந்தனர்.

அங்கு வந்த சிறிய மீன், தன்னுடைய வாலால் மணலைச் சிலுப்பியது.

“அடடா, இந்த மீன் வட்டத்தைக் கலைக்குதே” என்று வருத்தப்பட்டாள் ரக் ஷா.

“இல்லையே, வட்டத்தை உருவாக்கியதே அந்தச் சின்ன மீன்தான்” என்று அருணா சொல்ல, எல்லாரும் “அப்படியா!” என்று ஒரே குரலில் ஆச்சரியப்பட்டனர்.

அருணா கைகாட்ட, தன்னுடைய வால் துடுப்பு, பக்கவாட்டுத் துடுப்புகளால் மெல்ல மணலைச் சிலுப்பி அந்த மீன் மேடுகளையும் பள்ளங்களையும் உருவாக்குவதை மூவரும் பார்த்து ரசித்தனர்.

“இந்த வட்டம் பெருசா இருக்கும்போல! ஒரு சின்ன மீன், துடுப்புகளை மட்டும் அசைச்சு இந்த வட்டத்தை உருவாக்கியிருக்கே” என்றாள் ரக் ஷா.

“ஆமாம், இந்த வட்டம் கிட்டத்தட்ட ஆறரை அடி விட்டம் கொண்டது. இந்த மீனோட நீளம் பத்து சென்டிமீட்டர்தான். சுமார் 10 நாள்கள் உழைச்சு இந்த வட்டத்தை உருவாக்கியிருக்கு. இது பலூன்மீன் (Pufferfish) இனத்தைச் சேர்ந்தது. இதைப் பேத்தை, பெலாசின்னு தமிழ்ல சொல்வோம். இந்த மீன் இனத்தில், ஜப்பானில் காணப்படும் ஒருவகை வெண்புள்ளி பேத்தை இதே மாதிரி மணலில் கூடு கட்டும்” என்றார் அருணா.

“இந்த மீன் இனத்தைப் பத்தி எனக்குக் கொஞ்சம் தெரியும். இது ஆபத்து வரும்போது வயிற்றில் காற்று இல்லைனா கடல்நீரை நிரப்பி, பலூன் மாதிரி உருண்டையா ஆகிடும். இது விஷமுள்ள மீன் இனம்னு சொல்வாங்க” என்றான் செந்தில்.

“ஆமாம், இதில் ஒவ்வொரு இனத்துக்கும் விஷத்தன்மை மாறுபடும். ஆபத்து வரும்போது இந்த மீன்கள் பலூன் மாதிரி உப்புவதால், வேட்டையாடி மீன்களால் இந்த மீன்களைக் கடிச்சு சாப்பிட முடியாது” என்றார் அருணா.

“பேத்தை மீன் எதுக்கு மணல்ல இப்படி வட்டம் போடுது? ” என்று ரக் ஷா கேட்க, “இரு, நான் சொல் றேன். இது ஒரு கூடுன்னு நினைக்கிறேன். பெண் மீன்கள் வந்து இந்தக் கூட்டைப் பார்த்து, கூடு பிடிச்சிருந்தா ஆண் மீனோட இணை சேரும். பறவை இனங்கள்ல அப்படித்தானே நடக்குது! நான் சொல்றது சரியா?” என்று அருணாவை ஆர்வமாகப் பார்த்தாள் ரோசி.

“மிகவும் சரி” என்று புன்னகையுடன் அருணா சொல்ல, மற்ற இருவரும் கைதட்டினார்கள். ரோசி குனிந்து கைகூப்பி நன்றி சொன்னாள்.

“வழக்கமாகக் கடலுக்குள் ஆராய்ச்சி செய்பவர்கள், டைவிங் போகும் ஆர்வலர்கள்னு நிறைய பேர் இந்த வட்டங்களைப் பார்த்திருக்காங்க. முதன்முதலில் 1995ஆம் வருடமே இந்த வட்டங்களைப் பார்த்தாச்சுனாலும் யார் இந்த வட்டங்களை உருவாக்குனது என்பது நமக்குத் தெரியாமலேயே இருந்தது. 2013ஆம் வருடம்தான் பேத்தை மீன் உருவாக்கும் கூடு இது என்பது கண்டறியப்பட்டது” என்றார் அருணா.

“இந்த வட்டத்தோட நடுப்பகுதியில் பெண் மீன் முட்டை போடுமா?” என்றான் செந்தில்.

"ஆமாம், இந்த வட்டத்தின் மேடான பகுதிகள்ல எல்லாமே மென்மையான, சிறிய துகள் கொண்ட மணல் இருக்கும்படி ஆண் மீன் வடிவமைச்சிருக்கும். மத்தியில் இருக்கும் அழகான மேட்டுப் பகுதியில் பெண் மீன் முட்டை இடும். ஆண் மீன் அந்த முட்டைகளை ஒரு வாரம் வரை அடைகாக்கும். குஞ்சு பொரிஞ்சு வந்ததும் இந்த வட்டமான கூட்டிலிருந்து எல்லாம் புறப்பட்டு போயிரும்” என்று விளக்கினார் அருணா.

“ஓ... பெண் மீனைக் கவர்வது மட்டுமில்லாம முட்டைகளைப் பாதுகாக்கவும் இது பயன்படுதா?” என்றாள் ரக் ஷா.

“ஆமாம், பார்ப்பதற்கு இது சும்மா கடல்வெளியில் இருக்கும் மணல் வட்டம் போலத் தெரியும். ஆனா, இந்தக் கூட்டை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள், மேடு பள்ளமா மணல் இருப்பது அழகுக்காக மட்டுமில்ல, அதில் ஒரு காரணம் இருக்குன்னு கண்டுபிடிச்சிருக்காங்க.

மேடு பள்ளமா மென்மையான மணல் துகள்கள் இருப்பதால, இங்கு கடல் நீர் சுழன்று பயணிக்கும் விதமே மாறுபடும். குறிப்பா இதோட நடுப்பகுதியில், அதாவது முட்டைகள் இருக்கும் இடத்தில், கடல்நீரின் வேகம் 25 சதவீதம் குறைவா இருக்கும். அதற்கு இந்தக் கூடு அமைப்புதான் காரணம். கடல்நீரின் வேகம் குறைவு என்பதால் முட்டைகள் நீரில் அடித்துச் செல்லப்படுவதும் குறையுது” என்று விரிவாகப் பேசினார் அருணா.

“வரைபடம், பெரிய கருவிகள், கைகூட இல்லாமல் இந்த மீன்கள் இவ்வளவு அழகான வட்டங்களை உருவாக்குவது பெரிய விஷயம்தான்” என்றான் செந்தில்.

இவர்களைக் கண்டுகொள்ளாமல் அந்தச் சிறிய மீன் நடுப்பகுதியில் கிடந்த சிறிய பாசிகளைத் தள்ளிவிட்டு, மீண்டும் துடுப்புகளால் மேட்டுப் பகுதியைச் சரிசெய்து அழகுபடுத்த ஆரம்பித்தது. நாட்டிலஸ் நீர்மூழ்கி ஓசையின்றி விலகிச் சென்றது.

கட்டுரையாளர், கடல்சார் ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: nans.mythila@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in