சிட்டுக்குருவி... சிட்டுக்குருவி... - பாடல் - அழ. வள்ளியப்பா

சிட்டுக்குருவி... சிட்டுக்குருவி... - பாடல் - அழ. வள்ளியப்பா
Updated on
1 min read

சின்னச் சின்ன பறவையான
சிட்டுக்குருவி,
தேடித் தேடித் திரிவதென்ன
சிட்டுக்குருவி?
என்ன வேண்டும், என்ன வேண்டும்,
சிட்டுக்குருவி?
என்னிடம் நீ சொல்ல வேண்டும்
சிட்டுக்குருவி.

உணவு தேடித் திரிகின்றாயோ
சிட்டுக்குருவி?
ஊக்கமது கைவிடாத
சிட்டுக்குருவி.
பணமும் வேண்டாம்; காசும் வேண்டாம்
சிட்டுக்குருவி.
பச்சைநெல்லை நான் தருவேன்
சிட்டுக்குருவி.

கூடுகட்டி வாழ்வதற்கோ
சிட்டுக்குருவி
குச்சிகளைத் தேடுகின்றாய்
சிட்டுக்குருவி?
பாடுபட்டு வேலை செய்ய,
சிட்டுக்குருவி
பாடமெல்லாம் கற்றுத்தரும்
சிட்டுக்குருவி.

வீட்டுக்குள்ளே எந்த இடம்
சிட்டுக்குருவி?
வேண்டுமோ நீ சொல்லிடுவாய்,
சிட்டுக்குருவி.
கூட்டை அங்கே கட்டிக்கொள்வாய்
சிட்டுக்குருவி
கொடுக்க வேண்டாம் வாடகையும்
சிட்டுக்குருவி.

கூட்டை நாங்கள் கலைக்க மாட்டோம்
சிட்டுக்குருவி.
குஞ்சுகளைத் தொடவுமாட்டோம்
சிட்டுக்குருவி
சேட்டையொன்றும் செய்ய மாட்டோம்
சிட்டுக்குருவி
திண்ணம் இது திண்ணமாகும்
சிட்டுக்குருவி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in