Last Updated : 09 Jun, 2022 04:39 PM

Published : 09 Jun 2022 04:39 PM
Last Updated : 09 Jun 2022 04:39 PM

கேசபியாங்கா மாதிரி அசையாமல் நின்றேன்! - கலாப்ரியா

எனக்கு ஏழு வயது இருக்கும். முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மணிமுத்தாறு அணைக்கட்டு முடிவடையும் தருவாயில் இருந்தது. திருநெல்வேலி டவுன் சர்ச் மிஷன் என்று மூலப்பெயரும் ‘குட்டை வாத்தியார் பள்ளிக்கூடம்’ என்று பட்டப் பெயரும் (வழங்கு பெயர்) கொண்ட பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். என் அக்கா கிருஷ்ணவேணி என்கிற கிட்டக்கா என்னைவிட இரண்டு வயது பெரியவர். அதே பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார்.

4 வயதில் கலாப்ரியா

நான் படித்தது கிறிஸ்தவப் பள்ளி. காலை கடவுள் வணக்க நிகழ்ச்சியில் தேவாரப்பாடல், பைபிளிலிருந்து சில வசனங்கள், குரானிலிருந்து சில வசனங்கள் என்று தினமும் நடக்கும்.

பள்ளியிலிருந்து ‘மணிமுத்தாறு உல்லாசப் பயணம்’ அழைத்துப் போவதாக அறிவித்தார்கள். ஒரு ரூபாய்தான் கட்டணம். விருப்பம் உள்ளவர்கள் பெற்றோரிடம் அனுமதியும் பணமும் வாங்கி வரவேண்டும் என்றார்கள்.

எப்போது மதிய இடைவேளை வரும், வீட்டில் சொல்லி அனுமதி வாங்கிவருவோம் என்றிருந்தது. வகுப்பில் யாரும் பாடத்தையே கவனிக்கவில்லை, அதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். ஒரு ரூபாய் என்பது எல்லாம் அப்போது ரொம்பப் பெரிய பணம். ‘குடியரசு வாசகம்’ என்கிற தமிழ்ப் பாடப் புத்தகமே எட்டணாதான். (ஐம்பது காசு). அதை வாங்கவே பிள்ளைகளிடம் காசு இருக்காது. சில வசதியான பிள்ளைகள் ஆரஞ்சு வில்லை, கடலை மிட்டாய் என்று வாங்கித் தின்ன காலணா (இரண்டு நயாபைசா) கொண்டுவருவார்கள். அதிலும் ஓட்டைக் காலணாவைக்கூடப் பத்திரமாக, ஆண் பிள்ளைகள் என்றால் சட்டைப் பித்தானில் மாட்டிவிடுவார்கள். பெண் பிள்ளைகள் என்றால் பாவாடை நாடாவில் முடிச்சுப் போட்டு அனுப்புவார்கள்.

7 வயதில் அக்காவுடன் கலாப்ரியா

முதலில் அம்மா அனுப்ப முடியாது என்று மறுத்துவிட்டார். பெரும்பாலான பிள்ளைகளுக்கு அனுமதி கிடைக்காமல் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டே வந்தனர். காசு கொண்டுவந்தது என் தோழி சசிகலா மட்டுமே. அவள் பணக்கார வீட்டுப் பெண். அவள் கொடுத்துவிட்டாள் என்றதும் அப்பாவிடம் முரண்டு பிடித்து அழுதேன்.

‘அக்காவும்தான் துணைக்கு வர்றா, அப்புறம் என்ன பயம்’ என்பது என் வாதம். ‘துணையாகத் தம்பி வருகிறானே, பிறகு ஏன் என்னை அனுப்ப மறுக்கறீங்க?’ என்பது அக்கா வாதம்.

மறுநாள் அப்பாவே பள்ளிக்கு வந்துவிட்டார். அப்பாவுக்கு அணைக்கட்டில் உள்ள ஒரு பொறியாளரைத் தெரியும். அதனால், நானே உங்களுடன் வருகிறேன் என்று சொன்னதும் ஆசிரியர்களுக்கு சந்தோஷம். அப்பா வந்தால் நன்றாகச் செலவழிப்பார்! ஆனாலும், பிள்ளைகள் மற்ற மாணவர்களுடன்தான் வரவேண்டும்; தனிச்சலுகை கிடையாது என்று சொல்லிவிட்டார்கள்.

அப்பா கிளம்பியதும் அம்மாவும் வருகிறேன் என்றார். அவர்கள் தனியே ரயிலில் டிக்கெட் எடுத்து வந்தார்கள். எங்களுக்குச் சலுகைக் கட்டணம் கால் பங்குதான். அங்கிருந்து அப்பாவின் செல்வாக்கில், அணைக்கட்டு வேலை செய்யும் லாரி ஒன்றில் ஏற்றிவிட்டார்கள். பெரும்பாலான வேலைகள் முடிந்துவிட்டன. தண்ணீர் கடல் போலத் தேங்கிக் கிடந்தது.

14 வயதில் முதல் கேமராவுடன்...

அணைக்கட்டின் உயரமான சுவர் ஒன்றில் நிறைய பெயர்களையும் அதற்கு நேராக ஏதோ தேதியையும் எழுதிக்கொண்டிருந்தார்கள். நூறு பெயர்களாவது இருக்கும். அவர்கள் எல்லாம் இந்த அணை கட்டிக்கொண்டிருக்கும்போது, பாறைகளை வெடி வைத்து உடைக்கும் போது, உயரத்திலிருந்து தவறி விழுந்து, கனமான இரும்புத் தூண்கள், கற்கள் விழுந்து, காட்டுப் பகுதியில் விலங்குகளால் தாக்கப்பட்டு, நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள் என்று அப்பாவின் நண்பர் (அந்தப் பொறியாளர்) சொன்னார். ஒரு பெரிய அணைக்கட்டு உருவாகும்போது எத்தனை பேர் தங்கள் இன்னுயிரைத் தந்திருக்கிறார்கள்!

அதேபோல அடுத்த வருடம் தூத்துக்குடிக்கு உல்லாசப் பயணம் என்ற போதும் அம்மா நாமும் போவோம் என்று அப்பாவிடம் சொல்லிவிட்டார்! அங்கேயும் அப்பாவின் நண்பர் தூத்துக்குடி மில்லில் பணிபுரிந்தார். தூத்துக்குடியில் அந்த மில்லையும் கடற்கரையையும் பார்ப்பதுதான் திட்டம். அப்போது பழைய துறைமுகம் சிறிதாகவே இருக்கும். பெரிய கப்பல் எல்லாம் வர முடியாது. சிறிய கப்பலில் ஏறிப் பார்த்தோம். இன்றும் அந்தக் கப்பல் கனவில் வரும்!

ஏற்கெனவே வ.உ.சி. கப்பல்விட்ட கதையை, பாடத்தில் கதைப்பாடலாக ஓர் ஆசிரியர் திரைப்பாடல் மெட்டில் பாடிக் காட்டியிருந்தார். ‘ஓட்டப்பிடாரத்திலே உயர்ந்த நல்ல குடும்பத்திலே உதித்தனரே தியாகியான சிதம்பரம்...’ என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடலை, வாசமுத்து நன்றாகப் பாடுவான்.

அப்படி அறிமுகமாகியிருந்த வ.உ.சி. நடத்திய கப்பல் கம்பெனி, அவரது உப்பளம் எல்லாம் வேறு பெயரில் இருந்தன. அவற்றை எல்லாம் பார்த்துவிட்டு, கடற்கரையில் முத்துக்குளிப்பதைப் பார்த்தோம். முத்துச் சிப்பி வியாபாரம் மும்முரமாக நடந்தது. குவித்துப் போட்ட சிப்பிகளை விலை பேசி வாங்கினால், அவர்களே அறுத்துக் காண்பிப்பார்கள். சில நேரம் அதில் முத்து இருக்குமாம். அப்பா அரை உயிருடன் இருந்த இரண்டு சிப்பிகளை வாங்கி அறுத்துக் காட்டச் சொன்னார். முதலாவதில் ஒன்றுமில்லை. இரண்டாவதில் பொடிசாக ஒன்று தென்பட்டது. அதுவும் சரியாக இல்லை.

அப்பாவே பல ஊர்களுக்கும் அழைத்துச் செல்வார். ஐந்தாம் வகுப்பு படித்தபோது மதுரை சித்திரைத் திருவிழாவுக்கு என்னையும் என் கிட்டக்காவையும் அழைத்துப் போனார். சித்திரைத் திருவிழாவுக்கு உறவினர் வீடுகள் நிரம்பி வழியும். ஆனால், நாங்கள் போன உறவினர் வீட்டில் அப்படி நெருக்கடி இல்லை. அந்த வீட்டு அம்மா எங்களை நன்றாகத்தான் கவனித்துக்கொண்டார். என்றாலும் எங்களைப் போன்ற குழந்தைகளிடம் ஏனோ சிடுசிடுவென்றே பேசினார். வள்ளுவரின் ‘முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து’ என்கிற குறளைப் படிக்கும்போது, ஏனோ அந்த அம்மாவின் முகமே நினைவு வரும்.

கவிஞர், எழுத்தாளர் கலாப்ரியா

அப்பா எந்த ஊருக்கு அழைத்துப் போனாலும், எல்லா முன்னெச்சரிக்கைகளையும் செய்துவிடுவார். ஊசி நூல், டார்ச், மடக்குக் குடை, பிளாஸ்க், மிலிட்டரி வாட்டர் ஜக் என்று எல்லாம் கச்சிதமாக எடுத்து வைப்பார். அதே போல பெட்டியோ பையோ பொருள்களைக் கச்சிதமாக அடுக்குவார். எப்போது தேவை என்கிற கணக்கு அடுக்குவதில் இருக்கும்.

எந்த ஊர் போனாலும் என் கையில் ஒரு சிறிய பர்ஸும் ஐந்து ரூபாயும் கொடுத்துவிடுவார் அப்பா. ‘ஒரு இனவலுக்கு (பாதுகாப்பு) வச்சுக்கோ’ என்பார். தங்கப் போகிற இடம் லாட்ஜோ வீடோ அதற்குப் போகும் வழியிலுள்ள திரையரங்கம், ஜவுளிக்கடை போன்ற முக்கிய அடையாளங்களைக் கவனிக்கச் சொல்வார். தெருப் பெயரை ஆங்கிலத்திலும் தமிழிலும் பழக்கப்படுத்துவார். அக்காவின் கையைப் பிடித்துக்கொண்டு, என்னை ஓரளவு சுதந்திரமாக விட்டுவிடுவார்.

அவ்வளவு பெரிய சித்திரைத் திருவிழாவில் அலைந்து திரிந்ததில் எனக்கு நல்ல பசி. ஓட்டலில் கூட்டம். அப்பா யோசித்துக்கொண்டிருக்கும்போதே நான் நுழைந்துவிட்டேன். திரும்பிப் பார்த்தால் அப்பாவைக் காணோம். அவசரமாக வெளியே வந்தால் அங்கேயும் இல்லை. பத்தடி நடந்தேன். உடனே அப்பாவின் முன்னெச்சரிக்கைகளில் ஒன்று நினைவுக்கு வந்தது.

‘எங்கேயாவது தொலைஞ்சு போயிட்டா அங்க இங்கேன்னு ஓடாதே. கண்ணுல படும்படியா தொலைஞ்சு போன இடத்திலயே நில்லு, சரியா?’ அப்படியே அந்த ஓட்டல் முன் சிறிய மேடான பகுதியில் நின்றுகொண்டேன்.

நேரம் செல்லச் செல்ல பயமும் அழுகையும் வந்தது. அடக்கிக்கொண்டு நின்றேன். கால் மணி நேரத்தில் அப்பாவும் அவர் நண்பரும் வந்துவிட்டார்கள். “உன் பையன் நீ சொன்ன மாதிரி தொலைஞ்ச இடத்தைவிட்டு, ‘கேசபியாங்கா’ (தந்தை உயிருடன் இல்லாததை அறியாத சிறுவன், தந்தையின் உத்தரவுக்காக சிலைபோல் காத்திருந்ததாக எழுதப்பட்ட பிரபலமான கவிதை) மாதிரி அசையவே இல்லையே!” என்று ஆச்சரியப்பட்டார் அந்த மாமா.

இன்று நானும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பல ஊர்களுக்குச் செல்கிறேன். அவர்களிடம் இதே முன் எச்சரிக்கைகளைச் சொல்லி வைத்திருக்கிறேன்.

நீங்களும் பயணங்களை அனுபவியுங்கள். பத்தாயிரம் புத்தகங்களைப் படித்துப் பெறும் அனுபவத்தைவிட, ஆயிரம் மைல்கள் பயணம் செய்து பெறும் அனுபவம் மிகவும் சிறந்தது. பயணித்துக்கொண்டே இருங்கள்!

கட்டுரையாளர், கவிஞர், எழுத்தாளர்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

t1

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x