

என்னைப் பற்றி இதுவரை நீங்கள் கேள்விப்பட்ட அனைத்தையும் ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் மறந்துவிட்டு, நான் சொல்வதைக் காது கொடுத்துக் கேளுங்கள். என்னைப் பற்றி மற்றவர்கள் சொல்லித்தான் இதுவரை கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த மற்றவர்கள் பெரும்பாலும் பயங்கரமான கதைகளையே சொல்லியிருப்பார்கள். என் தரப்பு என்னவென்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?
எனக்கென்று ஒரு பெயர் இருக்கிறது. ‘மெஃபிஸ்டோஃபெலஸ்’. மற்றவர்கள் எனக்கு வைத்த பெயர், ‘சாத்தான்’. என் நகங்கள் உங்கள் நகங்களைவிடக் கொஞ்சம் கூர்மையாக இருக்கும். என் தலையில் சிறிய கொம்புகள் முளைத்திருக்கும். கடைவாய்ப் பற்கள் வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும். மற்றபடி நானும் உங்களில் ஒருவன்தான்.
உங்கள் எல்லாரையும்விட மிகவும் சாது. ஒரு கொசுவைக்கூட இதுவரை நான் அடித்ததில்லை. உள்ளே ஒன்றை வைத்துக்கொண்டு வெளியில் இன்னொன்று பேசியதில்லை. எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று என் மூக்கை வலிந்து நுழைத்து எவருக்கும் உபதேசம் செய்ததில்லை. யார் வம்புதும்புக்கும் போனதில்லை.
மனிதன் கடவுளை நம்புகிறான். கடவுளைக் கொண்டாடுகிறான். கடவுளை வழிபடுகிறான். உண்மையில் மனிதனுக்கு உற்ற நண்பனாக இருப்பது நான்தான் என்று சொன்னால் நம்புவீர்களா? எனக்குப் பெருமை பீற்றிக்கொள்ளும் பழக்கம் சிறு வயது முதலே கிடையாது என்பதால், இவற்றை எல்லாம் நான் சொல்லிக்கொண்டு திரிவதில்லை. அதற்காக அது உண்மை இல்லை என்று ஆகிவிடாது இல்லையா?
நீங்களே யோசித்துப் பாருங்கள். கடவுளை நீங்கள் தேடிப்போக வேண்டும். நானோ உங்களைத் தேடி வருவேன். கடவுளிடம் நீங்கள் வேண்டிக்கொள்ள வேண்டும். நானோ உங்களுக்கு வேண்டியதை நீங்கள் கேட்காமலேயே வழங்குவேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் என்னென்ன தேவைகள் இருக்கின்றன என்று எனக்குதான் துல்லியமாகத் தெரியும். அந்தத் தேவைகளை எப்படி நிறைவேற்றி வைக்க வேண்டும் என்பதும் எனக்குத் தெரியும்.
இந்த உலகில் மகிழ்ச்சியாக, நிம்மதியாக வாழும் ஒவ்வொருவரும் என்னோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டவர்கள்தாம் என்பதை நீங்கள் அறிவீர்களா? நான் எந்த அளவுக்கு நேர்மையானவன் என்பதை என் ஒப்பந்தத்தைப் பார்த்து நீங்களே முடிவு செய்துகொள்ளலாம். உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் அளிப்பதாக நான் வாக்குறுதி அளிப்பேன். பதிலுக்கு நான் கேட்டதை நீங்கள் அளிப்பதாக வாக்குறுதி அளிக்க வேண்டும். அவ்வளவுதான். இருவரும் கையெழுத்துப் போட்டுவிட்டால் ஒப்பந்தம் தயார்.
‘ஐயோ, பொல்லாத சாத்தான் என்னவெல்லாம் கேட்டு வைக்குமோ’ என்று அஞ்ச வேண்டாம். எந்த வேறுபாடும் பார்க்காமல் எல்லோரிடமும் நான் எதிர்பார்ப்பது ஒன்றைத்தான். இதயம்.
ஏன் குறிப்பாக இதயம் என்றால் உங்களுக்குக் கொஞ்சமும் பயன்படாத ஒரு பொருள் அது மட்டும்தான். இதயம் மிகப் பெரிய பாரம். அது எப்போதும் உங்களைப் போட்டு அழுத்திக்கொண்டே இருக்கும். எல்லார் மீதும் பாவப்படும் பழக்கம் அதற்கு இருக்கிறது. அன்பு, கருணை, நன்மை, உண்மை என்று ஏதேதோ பேசி உங்களைக் குழப்பிக்கொண்டே இருக்கும்.
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால், நீங்கள் ஆசைப்பட்ட அனைத்தும் உங்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு நிறைய, நிறைய பணம் வேண்டும். ஆனால், உங்கள் இதயம் இருக்கிறதே, அது உங்களை ஆசைப்பட விடாது. பணம் சம்பாதிக்க அனுமதிக்காது. எல்லாவற்றுக்கும் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே இருக்கும்.
நீங்கள் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்று நினைக்கும் நானா அல்லது உங்கள் மகிழ்ச்சியைத் தடுக்க நினைக்கும் உங்கள் இதயமா? உங்கள் எதிரி யார், உங்கள் நண்பன் யார் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
என்னிடம் ஓர் அரசியல்வாதியின் இதயம் இருக்கிறது. அதைக் கழற்றிக்கொடுத்த மறுநாளே அவர் ஊரின் மிகப் பெரும் பணக்காரர் ஆகிவிட்டார். பங்களா, தோட்டம், பதவி, சொத்து என்று மகிழ்ச்சியோடு இருக்கிறார்.
என்னிடம் ஒரு வணிகரின் இதயம் இருக்கிறது. ஒரு சிறிய ஓட்டு வீட்டில் இருந்தவர் தன் இதயத்தை இழந்த பிறகு, கடகடவென்று மாடி மேல் மாடி கட்டிக்கொண்டிருக்கிறார். இன்பமாக இருக்கிறார்.
என்னிடம் ஒரு மருத்துவரின் இதயம் இருக்கிறது. ஒரு கவிஞரின் இதயம் இருக்கிறது. ஒரு விளையாட்டு வீரரின் இதயம் இருக்கிறது. ஓர் ஆய்வாளரின் இதயம் இருக்கிறது. ஒரு விஞ்ஞானியின் இதயம் இருக்கிறது. ஒரு பெண்ணின் இதயம் இருக்கிறது. வானில் உள்ள நட்சத்திரங்களை எப்படி எண்ணி முடிக்க முடியாதோ அப்படியே என்னிடமுள்ள இதயங்களையும் எண்ணி முடிக்க முடியாது.
‘போதும் சாத்தான், இதயம் இல்லாமல் வாழ்வதற்குக் கடினமாக இருக்கிறது. ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வோம். என்னுடைய இதயத்தைத் திருப்பித் தந்துவிடு’ என்று இதுவரை ஒருவர், ஒரே ஒருவர்கூட என்னிடம் வந்து கேட்டதில்லை.
நீ ஏன் இப்படி இதயங்களைச் சேர்த்துக்கொண்டே போகிறாய், எப்போது நிறுத்துவாய் என்று நீங்கள் கேட்கலாம். நான் ரொம்ப காலமாகத் தேடிக்கொண்டிருக்கும் ஓர் இதயம் கிடைத்தவுடன் நிறுத்திவிடுவேன். உங்களுக்கும் சொல்கிறேன், எங்காவது கண்டால் சொல்லுங்கள்.
ஒரு குழந்தையின் இதயம். மிக, மிகச் சிறியதாக இருக்கும். தூக்கினால் பூபோல் இருக்கும். இருக்கும் இடமே தெரியாது. ஆனாலும், கிடைக்க மாட்டேன் என்கிறது. இனிப்பு தருகிறேன். பொம்மை தருகிறேன். பணம் தருகிறேன். மகிழ்ச்சி தருகிறேன். இதயத்தை மட்டும் கொடுத்துவிடு என்று எவ்வளவோ குழந்தைகளிடம் கேட்டுப் பார்த்துவிட்டேன். கெஞ்சிகூடப் பார்த்துவிட்டேன். எல்லாக் குழந்தைகளும் ஒன்றுபோல் என்ன சொல்கின்றன தெரியுமா?
‘நாங்கள் ஏற்கெனவே மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஏற்கெனவே நிம்மதியாக இருக்கிறோம். எங்கள் உலகில் எந்தக் கவலையும் இல்லை. எந்தத் தேவையும் இல்லை. எல்லோரும் எங்களை நேசிப்பதற்குக் காரணம் எங்கள் இதயம். நாங்கள் எல்லோரையும் நேசிப்பதற்குக் காரணமும் எங்கள் இதயம்தான். அதுதான் எங்கள் உலகை இனிமையானதாக ஆக்குகிறது.
எங்களுக்குப் பணம் வேண்டாம். அப்படி என்றால் என்ன, அதை வைத்துக்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்றுகூட எங்களுக்குத் தெரியாது. தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இல்லை.
அப்படியானால் உங்கள் இதயத்தை ஒருவருக்கும் தரமாட்டீர்களா என்று நீ கேட்கலாம். தருவோம். யார் ஒருவர் தன் இதயத்தை எங்களுக்குத் தருகிறாரோ அவருக்கு, அவருக்கு மட்டுமே எங்கள் இதயத்தை நாங்கள் அளிப்போம். என்ன சாத்தான், ஒப்பந்தம் போட்டுக்கொள்வோமா?’
கொடுப்பதற்கு என்னிடம் எந்த இதயமும் இல்லை என்று அந்தக் குழந்தைகளிடம் எப்படிச் சொல்வது?
(ஜெர்மானியக் கவிஞர் கதே உருவாக்கிய புகழ்பெற்ற ஒரு கதாபாத்திரம் இந்தச் சாத்தான்).
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com