பாடல்: அவர்கள் தந்த மரம்! - அழ. வள்ளியப்பா

பாடல்: அவர்கள் தந்த மரம்! - அழ. வள்ளியப்பா
Updated on
1 min read

காகம் ஒன்று ஆல மரத்தில்
வந்து அமர்ந்தது.
கனிந்து சிவந்த பழங்கள் தம்மைக்
கொத்தித் தின்றது.

வேகமாகச் சிறகடித்துப்
பறந்து சென்றது.
வெட்டவெளியில் ஓரி டத்தில்
எச்ச மிட்டது.

எச்சத் துடனே தரையில் வீழ்ந்த
ஆலம் விதைகளில்
இரண்டு வாரம் சென்ற பின்னர்
ஒன்று முளைத்தது.

உச்சி வெய்யில் தலையில் விழவே
நடந்து சென்றவர்
அந்தச் செடியைக் கண்டே
உள்ளம் மகிழ்ந்தனர்.

ஆடு மாடு கடித்தி டாமல்
வேலி போட்டனர்.
அவர்களே தினமும் மாலை நேரம்
தண்ணீர் விட்டனர்.

பாடு பட்டே அந்தச் செடியை
வளர்த்து வந்ததால்
பத்தே ஆண்டில் பெரிய மரமாய்
வளர்ந்து விட்டது.

கோடை நாளில் குடையைப் போல
நிழலைத் தந்திடும்.
கூட்டம் நடத்த மண்ட பம்போல்
என்றும் உதவிடும்.

ஆடிப் பாடச் சிறுவ ருக்கும்
அரங்க மாகிடும்.
அருமை யான ஊஞ்ச லாக
விழுது மாறிடும்.

சின்ன விழுது பல்து லக்கத்
தினமும் உதவிடும்.
தேடி வந்த பறவை யெல்லாம்
கூடு கட்டிடும்.

இன்னும் நூறு, நூறு விதத்தில்
நன்மை செய்திடும்
இந்த மரத்தின் பெருமை கூற
எவரால் முடிந்திடும்?

விதையைப் போட்டுச் சென்ற காகம்
எங்கு திரியுமோ?
வேலி போட்டு வளர்த்த மனிதர்
எங்கு வாழ்வாரோ?

உதவி பலவும் செய்யும் மரத்தை
நமக்குத் தந்தவர்
உலகில் எங்கே இருந்த போதும்
வாழ்க, வாழ்கவே!


இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in