

இந்தியப் பெருங்கடலில் எங்கு பார்த்தாலும் நீல பரப்பாகத் தெரியும். ஓர் இடத்துக்கு வந்து, பாதி கடலின் மேற்பரப்பிலும் பாதி நீருக்குள்ளுமாக நின்றது நாட்டிலஸ் நீர்மூழ்கி. திடீரென்று பரபரப்பான ஆராய்ச்சியாளர் அருணா, “கவனிங்க” என்று சொல்ல, எல்லோரும் கடலில் நடக்கும் வேட்டையைப் பார்த்தார்கள்.
சூரை மீன்களும் பாறை மீன்களுமாக ஒரு சிறு வேட்டையாடிக் குழு, குழல் போன்ற சிறு மீன்களைத் துரத்திக்கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் வளைந்து நெளிந்து வேட்டையாடிகளுக்குப் போக்குக் காட்டிய சிறு மீன்கள், அடுத்த சில நொடிகளில் கடல்நீரைத் தாண்டிக் காற்றில் எழும்பிப் பறந்தன!
“இதை நான் பார்த்திருக்கேன். இது பறவைக்கோலா மீன் தானே?” என்றாள் ரக்ஷா.
“ஆமாம். இதுதான் பறவைக்கோலா (Flying fish). உலகெங்கிலும் இந்த மாதிரி 60க்கும் மேற்பட்ட பறவைக்கோலா இனங்கள் இருக்கு. சரி, இப்போ அடுத்த பறவைக்கோலா மீன் மேல எழும்பும்போது என்ன நடக்குதுன்னு கவனிங்க” என்று அருணா சொல்லவும் மூவரும் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.
வேட்டையாடி மிக அருகில் வந்த பின்னர், பறவைக்கோலா வேகமாக நீந்தியது. தன் உடலை ஆங்கில எழுத்தான ‘சி’ வடிவத்தில் சுருட்டிக்கொண்டது. பிறகு கடற்பரப்பை நோக்கி நீந்தி, உடலை நெளித்தது. வால் துடுப்பை அதிவேகமாக அசைத்தது. விமானம் ஒன்று மேலெழும்புவதற்கு முன்பாக தரையிலேயே ஓடி வேகமெடுப்பதைப் போல, கடலின் மேற்பரப்பிலேயே கொஞ்சம் மிதந்துவிட்டு, இறுதியாக ஒருமுறை வால்துடுப்பை அங்குமிங்கும் அசைத்து காற்றில் எழும்பியது. பிறகு துடுப்புகளை அசைக்காமல் விரித்து வைத்துக்கொண்டது.
“சூப்பரா பறக்குது!” என்றாள் ரோசி.
“பார்ப்பதற்கு இது பறப்பதுபோலத் தெரிந்தாலும், உண்மையில் இது காற்றில் சறுக்கிச் செல்வது (Gliding) தான். பறவையோட சிறகு போலவே விரிந்திருக்கும் இந்த முதுகுத் துடுப்புதான் பறவைக்கோலா பறக்க உதவி செய்யுது. சில பறவைக்கோலா இனங்களுக்கு இடுப்புத் துடுப்பும் இதுபோலவே விரிந்து இருக்கும். அது சறுக்குவதற்குக் கூடுதலா உதவி செய்யும்” என்று விளக்கினார் அருணா.
“ரொம்ப நேரம் பறக்குதே... ஓ பறக்குதுன்னு சொல்லக் கூடாதில்ல, சறுக்குது” என்றான் செந்தில்.
சிரித்தபடியே பதில் சொன்னார் அருணா: “ஆமாம், இந்த மீன்கள் 45 வினாடிகள் வரை காற்றில் இருக்கும். மணிக்கு 55 கிலோமீட்டர் வேகம் வரையில்கூட சறுக்கும். சொல்லப்போனா இந்த மீன்கள் கடல்நீரைவிட, காற்றில் இயங்கும் வேகம் பத்து மடங்கு அதிகம்னு கண்டுபிடிச்சிருக்காங்க. பறவைக்கோலாவின் உடல், காற்றையும் நீரையும் கிழிச்சு முன்னேறும்படி கச்சிதமா இருக்கு.”
“கடல்மட்டத்தைவிட ரொம்ப உயரமா சறுக்கும்போல” என்றாள் ரோசி.
“ஆமாம், 20 அடி உயரம் வரைகூட இந்த மீன்கள் எழும்பும். 400 மீட்டர் தொலைவு வரை சறுக்கியே கடக்கும்” என்று அருணா சொல்லும்போதே, “அப்படியும் வேட்டை மீன் துரத்திட்டே இருந்தால்?” என்று கேட்டான் செந்தில். “அதோ பாருங்க” என்றார் அருணா.
காற்றில் சறுக்கிக் கொண்டிருந்த பறவைக்கோலா மீன், மெல்ல இறங்கி கடலின் மேற்பரப்புக்கு வந்தது. வாலை மட்டும் நீரில் நனைத்து, அடித்து நகர்த்தி மீண்டும் காற்றை நோக்கி எழும்பியது!
“ஓ, தேவைப்படும்போது அப்பப்போ இது மாதிரி கடலைத் தொட்டு வேகம் சேர்த்துக்கும்னு புரியுது. சரி, இதுங்க எப்படிக் காற்றில் சுவாசிக்கும்? நீருக்குள் பார்ப்பது மாதிரியே இந்தப் பறவைக்கோலா மீன்களால் காற்றிலும் பார்க்க முடியுமா?” என்றாள் ரோசி.
“தலைவர்னா சும்மாவா! சரியான கேள்விகளைத்தான் கேட்டிருக்கீங்க!” என்று சிரித்த அருணா, “இந்த மீன்களுடைய கண்களின் அமைப்பு கொஞ்சம் தட்டையா வித்தியாசமா இருக்கும் என்பதால், இவற்றால் காற்றிலும் ஓரளவு காட்சிகளைப் பார்க்க முடியும். இந்த மீன்களால் காற்றில் இருக்கும் ஆக்சிஜனைச் சுவாசிக்க முடியாது. நாம நீருக்குள் போகும்போது மூச்சை அடக்கிக்கொள்வது மாதிரியே காற்றில் இருக்கும் நேரத்தில் இந்த மீன்களும் மூச்சுவிடாமல் தாக்குப்பிடிக்கும்” என்றார்.
எவ்வளவு நேரம் துரத்தியும் பறவைக்கோலா மீன்களைப் பிடிக்க முடியாத வேட்டையாடிகள், சோர்ந்துபோய் வேறு இடத்தை நோக்கி நீந்தின. “இந்த மீன் குடும்பத்தின் அறிவியல் பெயருக்கு, ‘வெளியில் இருக்கும் மீன்கள்’னு அர்த்தம்” என்று அருணா சொல்ல, தப்பித்த மகிழ்ச்சியில் பறவைக்கோலாக்கள் துடுப்பை மடித்து நீரில் இறங்கி, தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டன.
(அதிசயங்களைக் காண்போம்)
கட்டுரையாளர், கடல்சார் ஆய்வாளர்
தொடர்புக்கு: nans.mythila@gmail.com