

ஆந்தைக்கு இரவில் பார்வை நன்றாகத் தெரிவது ஏன், டிங்கு?
- ச. தன்சிகா, 6-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
ஆந்தையின் கண்ணில் விழிக்கோளம் (eye ball) கிடையாது என்பதால் கண் நகராது. மற்ற பறவைகளுக்குப் பக்கத்துக்கு ஒரு கண் இருக்கும். ஆந்தைக்கு ஒரே பக்கத்தில் இரண்டு கண்கள் இருக்கின்றன. மற்ற பறவைகளுடன் ஒப்பிடும்போது ஆந்தைக்கு பைனாகுலர் பார்வை (binocular vision) சிறப்பாக இருக்கிறது.
அதாவது, இரண்டு கண்களாலும் ஒரு பொருளை, ஒரே நேரத்தில் முப்பரிமாணத்தில் பார்க்க முடியும். இதன் மூலம் ஒரு பொருளுக்கு இடையே உள்ள தூரத்தையும் ஆழத்தையும் சரியாகக் கணிக்க முடியும். ஆந்தை இரவு நேரத்தில் இரை தேடக்கூடிய பறவை. இதன் விழித்திரையில் குச்சி செல்கள் (rods) அதிகமாகவும் கூம்பு செல்கள் (cones) குறைவாகவும் இருக்கின்றன. குறைவான வெளிச்சத்திலும் குச்சி செல்களால் சிறப்பான பார்வையைக் கொடுக்க முடியும். அதனால், ஆந்தைகளுக்கு இரவில் நன்றாகப் பார்வை தெரிகிறது, தன்சிகா.
எத்தனையோ நான்கு கால் விலங்குகள் இருந்தாலும் ஏன் மாடுகளை மட்டும் உழவுக்குப் பயன்படுத்துகிறார்கள், டிங்கு?
- சு.அ. யாழினி, 9-ம் வகுப்பு, ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா, திருச்சி.
மனிதர்களோடு இணைந்து வாழ, மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகளில் ஒன்று மாடு. பொதுவாக மாடுகள் சாதுவானவை. தீவனம் கொடுத்துவிட்டால், நன்றாக உழைக்கக்கூடியவை. மாடுகளின் சிறுநீர், சாணம் போன்றவை நிலத்துக்கு உரமாகின்றன. அதனால், டிராக்டர் கண்டுபிடிக்கப்படும் வரை மாடுகளை வைத்தே மனிதர்கள் விவசாய வேலைகளைச் செய்து வந்தார்கள். இப்போதும் சிறு விவசாயிகள் மாடுகளையே நம்பியிருக்கிறார்கள். மாடுகளைக் கலப்பையில் கட்டி, நிலத்தை உழலாம். விளைந்த பொருள்களை மாடுகள் பூட்டப்பட்ட வண்டியில் எடுத்துச் செல்லலாம். மாடுகளைப் பராமரிப்பதும் உணவு அளிப்பதும் எளிது. அதனால், மனிதர்கள் மாடுகளை விவசாயத்துக்குப் பயன்படுத்த ஆரம்பித்திருப்பார்கள். மாடுகள் செய்யக்கூடிய வேலைகளை வேறு எந்தெந்த விலங்குகளால் செய்ய முடியும் என்று யோசித்துப் பாருங்கள், யாழினி.
மரகதப்புறா ஏன் தமிழ்நாட்டின் மாநிலப் பறவையாக இருக்கிறது, டிங்கு?
- கே. திவ்யா, 8-ம் வகுப்பு, ஆதர்ஷ் வித்யா கேந்திரா, நாகர்கோவில்.
இந்தியாவில் சுமார் 30 வகை புறாக்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் சுமார் 12 வகை புறாக்கள் இருக்கின்றன. இவற்றில் பச்சை வண்ண உடலுடன் இருக்கும் மரகதப்புறா மிக அழகாக இருக்கும். சமீப ஆண்டுகளில் இந்த மரகதப்புறாக்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. உலக இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு, மரகதப்புறாவை அழியும் நிலையில் இருக்கும் பறவைகளில் ஒன்றாக அறிவித்திருக்கிறது. மரகதப்புறாவைத் தமிழ்நாட்டின் மாநிலப் பறவையாக அங்கீகரிப்பதன் மூலம், இதற்குக் கூடுதல் கவனம் கொடுத்துப் பாதுகாக்க முடியும், திவ்யா.
எலுமிச்சை ஏன் இவ்வளவு புளிப்பாக இருக்கிறது, டிங்கு?
- சி.என். ராஜேஷ், 6-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, கரூர்.
பழங்களில் சிட்ரிக் அமிலம் இருக்கும். அதுதான் பழத்துக்குப் புளிப்புச் சுவையைத் தருகிறது. அந்த சிட்ரிக் அமிலம் எலுமிச்சையில் அதிக அளவில் இருப்பதால், மற்ற பழங்களைப் போல் நம்மால் அதை நேரடியாகச் சாப்பிட முடியாத அளவுக்குப் புளிப்பாக இருக்கிறது. அதாவது சிட்ரிக் அமிலம் 5-6 சதவீதமாகவும் ஹைட்ரஜனின் அளவு 2.2 சதவீதமாகவும் இருப்பதால் எலுமிச்சைக்குப் புளிப்புச் சுவை அதிகமாக இருக்கிறது, ராஜேஷ்.