கதை: ஓணானுக்கு இறக்கை முளைக்குமா?

கதை: ஓணானுக்கு இறக்கை முளைக்குமா?
Updated on
1 min read

காட்டில் இருந்த பெரிய ஆல மரத்தில் நிறைய வௌவால்கள் குடியிருந்தன. அவை பகல் முழுவதும் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும். இரவானதும் இரை தேடப் போய்விடும்.

அந்த மரத்தில் ஓர் ஓணானும் இருந்தது. அந்த ஓணான் பகலில் இரை தேடும். இரவானதும் ஒய்வெடுக்க சென்றுவிடும். ஓணானுக்கு வௌவால்கள் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். தலையை ஆட்டி ஆட்டிச் சிரிக்கும். வௌவால்களைப் பார்த்து, “நேராக நிமிர்ந்து நிற்க முடியாதா? தலைகீழாகத் தொங்குவதில் அப்படி என்னதான் கிடைக்குமோ! அதைவிடு, பகலில் யாராவது தூங்குவாங்களா?” என்று கேள்விகளாகக் கேட்டுக்கொண்டிருக்கும்.

ஒரு நாள் ஓணானுக்கு வௌவாலைப் போலப் பறக்க வேண்டும் என்கிற ஆசை வந்தது. அது வௌவால்களிடம் போய், “நான் பறக்க வேண்டும், அதற்கு என்ன செய்யலாம்?” என்று கேட்டது.

ஒரு குறும்புக்கார வௌவால், “எங்களைப் போலத் தலைகீழாகத் தொங்க வேண்டும். அப்படித் தொங்கினால் உனக்குச் சிறகுகள் முளைக்கும். நீயும் பறக்கலாம்...” என்று சிரித்துக்கொண்டே சொன்னது.

ஓணானும் அதை நம்பி பகலில் மரத்தின் கிளையில் வாலைச் சுருட்டிக்கொண்டு தொங்க ஆரம்பித்தது. பல முறை வால் நழுவிக் கீழே விழுந்தது ஓணான். மறுபடியும் மரத்தில் ஏறித் தொங்கியது.

பகலில் இரை தேடி வெளியே செல்லாததால், ஓணானால் சாப்பிட முடியவில்லை. இரவிலோ உணவு எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. உணவு இல்லாமல் ஓணான் மெலிந்துவிட்டது. ஓணானைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

அந்தக் குறும்புக்கார வௌவால் ஓணானைப் பார்த்து, “நண்பா, நீ எத்தனை நாள் தொங்கினாலும் இறக்கை முளைக்காது. உன்னால் பறக்க முடியாது. உன்னுடைய வாழ்க்கை வேறு. எங்களுடைய வாழ்க்கை வேறு. யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் கிடையாது…” என்று சொன்னது.

தொங்கிக்கொண்டிருந்த கிளையில் ஏறிய ஓணான் பக்கத்தில் போய்க்கொண்டிருந்த எறும்பைப் பார்த்துத் தன் நாக்கை நீட்டியது. இரண்டு பக்கமும் உருளும் தன் கண்களை உருட்டிக்கொண்டே, “புரிந்தது நண்பா...” என்று சொல்லிவிட்டு வேகமாக ஓடியது, ஓணான்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in