

ஒரு நாள் நண்பர்கள் என்னை மறைவிடத்துக்கு அழைத்துச் சென்று, “ஹேரியட் டப்மேன், அடுத்து நீதான். தயாராக இருந்துகொள்” என்று ஆறுதலாக என் கையைப் பிடித்து அழுத்தினார்கள். வெடித்து அழ ஆரம்பித்தேன். என்னை எப்படிச் சமாதானம் செய்வது என்று தெரியாததால், “தைரியமாக இரு, ஹேரியட்” என்று என் முதுகைத் தட்டிக்கொடுத்துவிட்டு நகர்ந்து சென்றுவிட்டார்கள்.
இரவெல்லாம் அழுதேன். அப்பா அம்மாவை, உறவினர்களை, நண்பர்களை விட்டுப் பிரியப்போகிறேனா? ‘இந்தா, இது நன்றாக வேலை செய்யும், விலையும் குறைவுதான்’ என்று குதிரையைப் போல், பன்றியைப் போல் என்னையும் யாருக்காவது விற்றுவிடுவார்களா? அடுத்து யார் என்னை வாங்குவார்கள்? என்னை எங்கே இழுத்துச் சென்று அடைப்பார்கள்?
அங்கும் முதுகை வளைத்து, பகலெல்லாம் இரவெல்லாம் வேலை செய்ய வேண்டுமா? அங்கிருப்பவரும் சாட்டை வைத்திருப்பாரா? என்ன செய்தோம், ஏது செய்தோம் என்று குழம்புவதற்குள் இழுத்துப் போட்டு அடிப்பாரா? அதையும் வாங்கிக்கொண்டு மூலையில் படுத்துக்கொண்டு இப்படி அழுவதைத் தவிர வேறு வழி இல்லையா?
மனமும் உடலும் வாட்டி வதைக்க எப்படியோ தூங்கிப்போனேன். பெரிய வானம். இரு கைகளையும் நீட்டிக்கொண்டு நான் மிதக்கிறேன். முதுகில் இரண்டு பெரிய இறக்கைகள் படபடத்துக்கொண்டிருக்கின்றன. “ஹேரியட், விழுந்துவிடுவாய், கீழே வா” என்று எல்லோரும் கத்துகிறார்கள். ஆனால், சுகமான காற்று என்னை முன்னால் இழுக்கிறது. என்னோடு வா என்று ஒரு நட்சத்திரம் கண்சிமிட்டுகிறது. அதன் ஒளியைப் பின்தொடர்ந்து நான் பறக்க ஆரம்பிக்கிறேன்.
குரல்கள் காணாமல் போகின்றன. பண்ணைகள் காணாமல் போகின்றன. வெள்ளை எஜமானர்களையும் அவர்களுடைய வெள்ளை அமெரிக்காவையும் கடந்து நான் பறந்துகொண்டே இருக்கிறேன். என் உடல் முழுக்கப் பரவியிருக்கும் புண்களைக் காற்று இதமாக வருடிக்கொடுக்கிறது. முதன் முறையாக என் இதழ்களைப் பிரித்துப் புன்னகை செய்கிறேன்.
மறுநாள் காலை கண் விழித்தது வேறொரு ஹேரியட். அவள் கண்களில் கலக்கம் இல்லை. அவள் உடலில் நடுக்கம் இல்லை. விறுவிறுவென்று நடந்து சென்றபோது, அவள் கால்களில் கூடுதல் வலு சேர்ந்ததுபோல் இருந்தது. “இங்கிருந்து கிளம்பப்போகிறேன், என்னோடு யார் வருகிறீர்கள்?” என்று அவள் கேட்டபோது, அவள் குரலை அங்கிருக்கும் ஒருவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. “என்னது கிளம்புகிறாயா, எங்கே?” என்று விழிக்கிறார் அப்பா. ‘தப்பிக்க நினைப்பதே குற்றம் என்று உனக்குத் தெரியாதா’ என்று பதறுகிறார்கள் உடன்பிறந்தோர். ‘பிடித்தால் கொன்றே போட்டுவிடுவார்கள், பேசாமல் வேலையைப் பார்’ என்று எச்சரிக்கிறார்கள் நண்பர்கள்.
ஓடத் தொடங்கினேன். புலி துரத்தும்போது புள்ளிமான் காற்றைக் கிழித்துக்கொண்டு பாய்ந்து ஓடுவதைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா? அப்படி ஓடினேன். பண்ணைகள் எல்லாம் கால் முளைத்து என்னைத் துரத்துவதுபோல் இருந்தது. எஜமானர்கள் எல்லாம் திரண்டு குதிரையில் ஏறிக்கொண்டு துப்பாக்கியோடு என்னை வேட்டையாட வருவதுபோல் இருந்தது. என் உடலிலுள்ள ஒவ்வொரு துளி ரத்தமும் ஒவ்வொரு துண்டு சதையும் ஒவ்வோர் அணுவும் ஒவ்வோர் எலும்பும் ஓடு, ஓடு என்று அலற ஆரம்பித்தன.
தெற்கு போல் வட அமெரிக்காவில் அடிமைகளை விற்பதோ வாங்குவதோ எளிதல்ல என்று வணிகர்களும் குதிரையோட்டிகளும் சொன்னது நினைவில் இருந்தது. வடக்குதான் என்னுடைய நட்சத்திரம். ஆனால், அது எங்கிருக்கிறது? தப்பியோடி வரும் அடிமைப் பெண்ணுக்கு வழியெல்லாம் பலர் உதவினர். ரகசியப் பாதாளப் பாதையைச் சிலர் காட்டினார்கள். ரயில் வண்டியில் ஏற்றிவிட்டார்கள். சிலர் உணவு கொடுத்தார்கள். உறங்க இடம் கொடுத்தார்கள். சிலர் குதிரையில் அழைத்துப்போனார்கள்.
வடக்கில் கால் பதித்ததும், ‘நான் அடிமை அல்ல’ என்று வானை நோக்கி மீண்டும் மீண்டும் சத்தமாகக் கத்தினேன். ‘இனி நான் ஒரு பொருளல்ல. என் உடல் யாருக்கும் சொந்தமானதல்ல. என்னை யாரும் விற்கவோ வாங்கவோ முடியாது. என்னை யாரும் திட்டவோ அடிக்கவோ முடியாது.’
புதிய நண்பர்கள் கிடைத்தனர். கிடைத்த வேலைகளை எல்லாம் செய்தேன். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்தேன். அதன்பின் ஒரு நாள் புறப்பட்டேன். எங்கே என்று நண்பர்கள் கேட்டபோது, தெற்குக்குப் போகப்போகிறேன் என்றேன். அதிர்ந்துவிட்டார்கள்.
“உனக்கு என்ன ஆகிவிட்டது ஹேரியட்? யாராவது மீண்டும் அங்கே போய் மாட்டிக்கொள்வார்களா? போகாதே, நில்!”
மீண்டும் ஓடத் தொடங்கினேன். இப்போது எனக்குப் பாதை நன்றாகத் தெரியும். எனக்கு உதவிய அத்தனை முகங்களையும் தெரியும். எல்லோரும் நண்பர்களாகிவிட்டனர். எனக்கு உதவிய அனைவருக்கும் இப்போது என்னாலும் உதவ முடிந்தது.
நள்ளிரவு வரும்வரை காத்திருந்து என் பண்ணைக்குள் நுழைந்தேன். “ஐயோ ஹேரியட்டா? இப்போது எதற்கு வந்தாய்?” என்று அம்மாவும் அப்பாவும் அலறிவிட்டார்கள். வாயைத் திறக்கக் கூடாது என்று அதட்டி இருவரையும் வந்த வழியே அழைத்துப்போனேன்.
மீண்டும் வேலைகள் செய்தேன். பணம் சேர்த்துக்கொண்டேன். மீண்டும் ஓடத் தொடங்கினேன். இன்னோர் இரவில் பண்ணையில் என்னைப் பார்த்த உறவினர்கள், ‘நீயென்ன பெண்ணா, பிசாசா? ’ என்றனர். ‘போகும்போது சொல்கிறேன் வாருங்கள்’ என்று பிடித்து இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தேன்.
கையோடு அடுத்த பயணமும் ஆரம்பமாகிவிட்டது. “உன் பெற்றோரையும் உறவினர்களையும்தான் காப்பாற்றிவிட்டாயே, இப்போது ஏன் வந்திருக்கிறாய்?” என்றார்கள் நண்பர்கள். “உங்களுக்காக” என்றேன் மூச்சு வாங்கியபடி. “இன்னும் எவ்வளவு முறை இப்படி ஓடிஓடி வரப்போகிறாய் ஹேரியட்?” என்று தழுதழுத்த குரலில் கேட்டார் ஒருவர். அவரை அணைத்துக்கொண்டு மெல்ல சொன்னேன்.
“சவுக்கைத் தூக்கும் கை ஓயும்வரை, எல்லோருக்கும் விடுதலை கிடைக்கும்வரை, ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் காசு கொடுத்து வாங்கும் வழக்கம் ஒழியும்வரை ஓடுவேன். என் உயிர் இருக்கும்வரை ஓடுவேன்.”
(ஆப்பிரிக்க அமெரிக்கரான ஹேரியட் டப்மேன், அமெரிக்காவில் அடிமை முறையை ஒழித்தவர்களில் முக்கியமானவர்.)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com