Published : 25 May 2022 06:55 AM
Last Updated : 25 May 2022 06:55 AM

டிங்குவிடம் கேளுங்கள்: நம் சூரியன் எந்த விண்மீன் தொகுதியில் இருக்கிறது?

மரத்திலிருந்து பறித்த பூவுக்கும் பழத்துக்கும் உயிர் இருக்குமா, டிங்கு?

- கா. நனி இளங்கதிர், 5-ம் வகுப்பு, ஓ.எம்.ஜி.எஸ். பதின்ம உயர்நிலைப் பள்ளி, காளையார்கோவில்.

மரம் அல்லது செடியிலிருந்து பறிக்கப்பட்ட பூவுக்கும் பழத்துக்கும் உயிர் இருக்காது. ஆனால், பூ வாடுவதற்கும் பழம் அழுகுவதற்கும் சில மணி நேரத்திலிருந்து சில நாட்கள் வரை ஆகும். தற்போது பூ, காய், பழம் போன்றவற்றைப் பறித்து, நீண்ட காலம் பாதுகாப்பதற்கான தொழில்நுட்பங்கள் எல்லாம் வந்துவிட்டன. அதனால், பூக்களையும் பழங்களையும் கூடுதல் காலத்துக்கு வாடாமல், அழுகாமல் பாதுகாக்க முடிகிறது, நனி இளங்கதிர்.

நம் சூரியன் எந்த விண்மீன் தொகுதியில் இருக்கிறது, டிங்கு?

- கே. பொன் இலக்கியா, 7-ம் வகுப்பு, அக்‌ஷயா அகாடமி, மதுரை.

பூமியிலிருந்து இரவு நேரத்தில் பார்க்கும்போது தெரியும் விண்மீன் கூட்டங்களை, மனிதர்கள் தங்களின் வசதிக்காக 88 தொகுதிகளாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். நம் சூரியனை அதுபோல் பார்க்க முடியாது அல்லவா? அதனால் நம் சூரியன் அந்த விண்மீன் கூட்டம் எவற்றிலும் சேர்ந்தது அல்ல. பூமி வேகமாகச் சூரியனைச் சுற்றி வருவதால், சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விண்மீன் தொகுதியில் (ராசி மண்டலம்) இருப்பதாக நாம் நினைத்துக்கொள்கிறோம். உண்மையில் சூரியன் ராசி மண்டலங்களில் இருப்பதும் இல்லை, கடப்பதும் இல்லை. நம் சூரியன் போல் வேறு ஒரு சூரிய மண்டலத்தில் ஒருவேளை மனிதர்கள் வசிக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால், அப்போது விண்மீன் தொகுதியில் நம் சூரியனையும் அவர்களால் பார்க்க முடியும், பொன் இலக்கியா.

ஏன் நாம் அடிக்கடி கண் சிமிட்டுகிறோம், டிங்கு?

- உ. காயத்ரி, 8-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

கண்கள் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். கண்களில் விழும் தூசியைச் சுத்தப்படுத்த வேண்டும். நாம் அடிக்கடி கண்களை மூடித் திறக்கும்போது, சுரப்பிகளிலிருந்து கண்ணீர் வெளியேறி, கண்களை ஈரமாகவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்கிறது. அதனால்தான் நாம் நம்மை அறியாமலேயே கண்களைச் சிமிட்டிக்கொண்டிருக்கிறோம், காயத்ரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x