

நாட்டிலஸ் நீர்மூழ்கி வந்து நின்ற இடம் எது என்று தெரியவில்லை, சுற்றிலும் இருட்டு. நீர்மூழ்கியின் முன் விளக்குகள் மெல்ல இயக்கப்பட்டதும்தான் அது ஒரு பவளத்திட்டு என்றே தெரிந்தது. குழந்தைகள் மூவரும் உன்னிப்பாகக் கவனித்தார்கள். வெள்ளியின் பளபளப்புடன் சிவப்பு, பழுப்பு நிறம் கொண்ட மீன்கள் அங்குமிங்கும் உலவிக்கொண்டிருந்தன. பெரிய கணவாய் ஒன்று நீந்தியபடி வந்தது. பவள உயிரிகளிலிருந்து சிறு மொட்டுகள் வெளியில் வந்து கடல்நீரில் தலையாட்டிக்கொண்டிருந்தன.
“இது பவளத்திட்டுன்னு சொன்னா நம்பவே முடியாது போல. ராத்திரி நேரத்துல எல்லாமே வேற மாதிரி இருக்கு” என்றாள் ரக்ஷா.
“இன்னொரு விஷயம் கவனிச்சியா, இப்போ பார்க்கும் மீன்கள் வேற மாதிரியா இருக்கு” என்றாள் ரோசி.
“என்னென்ன வித்தியாசத்தைக் கவனிச்சீங்க? சொல்லுங்க பார்க்கலாம்” என்று அருணா ஊக்கப்படுத்தினார்.
“இந்த மீன்களுடைய நிறம் பெரும்பாலும் சிவப்பு அல்லது பழுப்பு நிறத்துல இருக்கு” என்றாள் ரோசி.
“எல்லா மீன்களுக்கும் கண்ணு ரொம்பப் பெருசா இருக்கு” என்றான் செந்தில்.
“மிகவும் சரி. எல்லா வாழிடங்களிலும் இருப்பதுபோலவே பவளத்திட்டுகளிலும் இரவாடிகள் (இரவு நேர உயிரினங்கள்) உண்டு. இரவில் சுறுசுறுப்பாக இயங்கும் இந்த உயிரினங்களோட உடலில், இருட்டிலும் தாக்குப்பிடிப்பதற்காகச் சில தகவமைப்புகள் இருக்கும். குறைந்த ஒளியிலும் பார்ப்பதற்குப் பெரிய கண்கள், இரவு நேர ஒளியில் மறைந்து இருப்பதற்கான சிவப்பு நிறம் ஆகியவை சில உதாரணங்கள். இரவாடி மீன்கள் பெரும்பாலும் ஊன் உண்ணிகளாதான் இருக்கும், அதுவும் நிறைய சாப்பிடுவதற்கான ஒரு தகவமைப்புதான்” என்றார் அருணா.
“இரவில் குறைந்த ஒளியில் எப்படி வேட்டையாடும்?” என்றான் செந்தில்.
“படிச்சது உனக்கு நினைவு இருக்கா? மாலை நேரத்தில் பூக்கும் பூக்கள், மகரந்த சேர்க்கைக்கு உதவும் உயிரினங்களை எப்படி ஈர்க்கும்ன்னு...” என்று ரோசி நினைவுபடுத்தினாள்.
சிறிது யோசித்த செந்தில், “இருட்டில் ஒரு பூவைத் தேடிக் கண்டுபிடிக்க உதவுவது வாசனைதானே?” என்றான்.
“மகிழ்ச்சி. நீங்களே பதிலைச் சொல்லிட்டீங்க. இரவு நேரத்தில் பவளத்திட்டுகளில் உள்ள வேட்டையாடிகள் பெரும்பாலும் மோப்ப சக்தியை வச்சுதான் வேட்டையாடும், அதோ அந்த அஞ்சாலை மாதிரி” என்று அருணா கைகாட்ட, தூரத்தில் ஓர் அஞ்சாலை மீன் (Moray Eel) தன்னுடைய வளையைவிட்டு வெளியேறி வேட்டைக்குப் புறப்பட்டது.
“அஞ்சாலைக்கு வளை இருக்கு. தங்குவதற்கு இடமில்லாத மற்ற இரவாடி மீன்கள் பகல்ல என்ன பண்ணும்?” என்று கேட்டாள் ரக்ஷா.
“ஓரளவு நிழல் இருக்கும் பகுதிகள்ல இந்த இரவாடிகள் பகல் முழுக்க ஓய்வெடுக்கும்” என்று அருணா சொல்லிக்கொண்டிருந்தபோதே, “பகல் மீன்கள் இரவில் ஓய்வெடுக்கும், அதானே?” என்று குறுக்கிட்டான் செந்தில்.
தூரத்து வளையில் ஒரு மீன் அசையாமல் இருந்தது, கிட்டத்தட்ட தூங்குவதுபோலத் தெரிந்தது. இந்த அஞ்சாலை அந்த மீனைக் கவனிக்காமலேயே கடந்துவிட்டது.
“அட, இது கிளிமீன் தானே! இது பகல்ல சுறுசுறுப்பா இருக்கும் மீன்... இப்போ தூங்குது. ஆனா, இந்த அஞ்சாலை ஏன் கிளிமீனை ஒண்ணுமே பண்ணல!” என்று ரோசி ஆச்சரியப்பட்டாள்.
“பக்கத்தில் போய்ப் பார்க்கலாம் வாங்க” என்று அருணா நீர்மூழ்கியை முடுக்கிவிட, சில அடி தொலைவு முன்னால் போய் நின்றது நாட்டிலஸ் நீர்மூழ்கி.
கிளிமீனைச் சுற்றிக் கண்ணாடியால் ஆன பையைப் போன்ற பாதுகாப்புப் படலம் இருந்தது! அவ்வப்போது வந்த சிறு பூச்சிகள்கூட அந்தப் பையைத் தாண்டிப் போக முடியாமல் அப்படியே படலத்தின்மீது ஒட்டிக்கொண்டன. வளைக்கு அருகில் வந்த வேட்டையாடிகள், இந்த மீனைக் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றன.
“அட!” என்று மூவரும் ஒரே குரலில் ஆச்சரியப்பட்டார்கள்.
“இதை நாங்க Sleeping Cocoonஎன்று சொல்வோம். கிட்டத்தட்ட ஒரு பாதுகாப்புப் போர்வை மாதிரி. பல கிளிமீன் இனங்கள் இரவு நேரத்தில் தூங்கும்போது தங்களைச் சுற்றி ஒரு பாதுகாப்புப் படலத்தைச் சுரக்கும். உடலில் இருந்து வரும் பிசுபிசுப்பான நிறமற்ற திரவத்தால் இது உருவாகும். உடலைச் சுற்றி இந்தப் படலம் இருப்பதால், மோப்ப சக்தியை வச்சு வேட்டையாடும் இரவாடிகளுக்கு இந்தக் கிளிமீன்களின் வாசனை தெரியாமல் இந்தப் படலம் தடுக்கும்! இரவு நேரத்தில் வந்து தாக்கும் ஒட்டுண்ணிப் பூச்சிகள்கிட்டேயிருந்தும் இந்தத் திரவம் பாதுகாக்கும். ஒருவேளை வேட்டையாடும் மீன்கள் பக்கத்துல வந்தாலும், படலத்தை உடைக்கும் அந்த இடைவெளிக்குள்ளேயே கிளிமீன்கள் தப்பிக்கவும் வாய்ப்பு இருக்கு” என்று விளக்கினார் அருணா.
“ஒவ்வொரு நாளும் இரவில் இதுங்க இப்படிச் செய்யுமா? அருமையான தகவமைப்பு” என்றாள் ரோசி. எல்லோரும் தலையாட்டினார்கள்.
“சரி... சரி... ரொம்ப நேரம் நீர்மூழ்கி லைட் இருந்தா இந்த உயிரினங்களின் அன்றாட சுழற்சி குழப்பமடையும், புறப்படுவோம்” என்றார் அருணா. “ஆமா, மீன்களோட தூக்கம் கலைஞ்சிடும், தூங்கட்டும் பாவம்” என்று ரக்ஷா சொல்ல, விளக்குகள் அணைக்கப்பட்டு நீர்மூழ்கி மெதுவாகப் புறப்பட்டது.
கட்டுரையாளர், கடல்சார் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: nans.mythila@gmail.com