

மேற்குலக இசையை ஆர்வத்தோடு படிப்பதோடு மேற்குலக பாடகர்களின் பாடல்களை தன்விருப்பமாகப் பாடி வெளியிட்டு வருகிறார் ரிஷிகா. இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம். இசைப் பள்ளியில் பியானோ வாசிப்பதற்கு கற்றுக் கொள்கிறார். கர்னாடக இசையும் கற்றுக் கொள்கிறார். G3 இசைப் பள்ளியில் மேற்கத்திய பாணியில் பாடுவதற்கான பயிற்சியையும் எடுத்துவருகிறார். விரைவிலேயே லண்டன் ரிடினிடி இசைத் தேர்வை எழுதுவதற்குத் தயாராகி வரும் இவர், அண்மையில் நார்வேஜியன் பாடகியான அரோரா பாடியிருக்கும் `ரன்அவே' என்னும் பாடலை அவருடைய பாணியில் பாடி அவரின் யூடியூபில் காணொளியாக வெளியிட்டிருக்கிறார். நாடோடி கிராமியப் பாடலின் மெட்டைத் தழுவி பாடப்பட்டிருக்கும் இந்தப் பாடலின் வரிகளுக்கேற்ற காட்சிகளின் தொகுப்பு மூலத்தைவிட கவர் வெர்ஷனில் சிறப்பாக இருக்கிறது. பாடலின் வரிகளுக்கேற்ப கடற்கரையிலேயே ரிஷிகாவின் கவர் வெர்ஷன் பாடல் கடலோரக் கவிதையாய் தொடங்குகிறது!
ஒரு வளர் இளம் பருவத்திலிருக்கும் பெண்ணின் அவளுக்கே உரிய யதார்த்தங்களிலிருந்து தப்பித்து வீடடைவதில் இருக்கும் நியாயத்தை முன்னிறுத்துகிறது இந்தப் பாடல். "அரோரா சிறு வயதிலேயே எழுதி, இசையமைத்துப் பாடியிருக்கும் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதைக் கேட்கும் போது உத்வேகமும் இருக்கும். அமைதியும் இருக்கும். குறிப்பாக இந்தப் பாடலில் இருக்கும் மெலடி என்னை வசப்படுத்தியது. அதனால்தான் இந்தப் பாடலை நான் தேர்ந்தெடுத்துப் பாடியிருக்கிறேன்" என்றார் ரிஷிகா. இதற்கு முன்பாக `அலாதீன்’ திரைப்படத்தில் ஜாஸ்மின் கதாபாத்திரத்துக்காக நவோமி ஸ்காட் பாடிய `ஸ்பீச்லெஸ்' பாடலையும் இவரின் பாணியில் பாடி யூடியூபில் வெளியிட்டிருந்தார் ரிஷிகா.
விரும்பிக் கேட்கும் பாடகர்களின் பாணியை அவர்களுக்கே அறியாமல் நகலெடுத்துப் பாடிவிடுவார்கள் பாடகர்கள். ஆனால் ரிஷிகா அவர் விரும்பும் பாடகர்களின் பாணியில் பாடாமல், அவருடைய பாணியில் பாடி வெளியிடுவது அவரின் இசைத் திறமைக்கு சான்றாக விளங்குகிறது.
ரிஷிகாவின் ரன்அவே பாடலைக் காண:
‘இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க': https://www.hindutamil.in/web-subscription