Published : 20 May 2022 02:42 PM
Last Updated : 20 May 2022 02:42 PM

20 மே வாஸ்கோடகாமா கோழிக்கோட்டில் கால் பதித்தார்

போர்ச்சுக்கலைச் சேர்ந்த வாஸ்கோடகாமா இந்தியாவில் கோழிக்கோட்டில் கால்பதித்தது உலக வரலாற்றில் முக்கியமான நிகழ்வு. ஐரோப்பியர்களுக்கான வியாபார மார்க்கம் இதனால் திறக்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணம் தொடங்கி கோழிக்கோட்டை வந்தடைய 17 மாதங்கள் ஆகியிருக்கிறது.


போர்ச்சுகல் அரசர் முதலாம் மானுவேல் தங்கள் நாட்டின் வளத்தைப் பெருக்க இந்தியாவுடன் வியாபாரத் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என ஆவல் கொண்டார். அதற்கு முன்பு வரை அரபு நாடுகள் மட்டுமே இந்தியாவுடன் வியாபாரத் தொடர்பைக் கொண்டிருந்தது. அதற்காகக் கடல்வழி மார்க்கத்தைக் கண்டறியும் பொருட்டு ஒரு குழுவை இந்தியாவுக்கு அனுப்பத் தீர்மானித்தார். அதன் தலைவராக வாஸ்கோடகாமாவை நியமித்தார்.

8 ஜூலை 1497 உற்சாகமாக இந்தக் குழு வழியனுப்பிவைக்கப்பட்டது. 170 பேர் அடங்கிய இந்தக் குழு, நான்கு கப்பல்களில் புறப்பட்டது. நான்கு கப்பல்களுக்கும் முறையே வாஸ்கோடகாமா, அவரது தம்பி பவ்லோடகாமா, நிக்கலவ் குயில்யோ, கோன்சலோ நியூன்ஸ் ஆகியோர் தலைமை ஏற்றனர். வாஸ்கோடகாமாவின் பயணம் மேற்கு ஆப்பிரிக்கக் கண்டக் கரைகளில் இருந்து விலகியே இருந்தது. இன்றைய செனகலுக்கு அருகில் இருக்கும் கேப் வர்டியில் நங்கூரமிடப்பட்ட இந்தக் குழு, அதற்குப் பிறகு மேற்கு ஆப்பிரிக்கக் கரைகளைக் கடந்து தெற்கே நன்னம்பிக்கை முனை வரை இடைநில்லா பயணத்தை மேற்கொண்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது அவர்கள் கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதியில் ஒரு கரையில் நிறுத்திக் கொண்டாடிக் களித்தனர். அதற்கு ‘நாடல்’ (Natal) எனப் பெயரிட்டார் வாஸ்கோடகாமா. அதன் பொருள் இயேசு கிறிஸ்து பிறப்பு.

காப்பாட்டில் நினைவுத் தூண்

பிறகு இவர்கள் மொசாம்பிக் என்னும் அரபு நாட்டுக்குச் சென்றனர். அங்கிருந்து இன்றைய கென்ய நகரமும் அன்றைய தனி அரசாகவும் இருந்த மலிண்டி நாட்டுக்குச் சென்றனர். இங்கு இவர்களுக்கு கோழிக்கோட்டுக்கு வந்தடைவதற்கான பல உதவிகள் கிடைத்தன. அகமது பின் மஜித் என்பவர்தான் கடல் மார்க்கமாகச் செல்வதற்கான வழியைச் சொல்லியுள்ளார்.அந்த நாடு கோழிக்கோட்டு அரசுடன் வியாபாரத் தொடர்பு கொண்டிருந்தது. அங்கு ஒருவர் இவர்களுக்கு வழிகாட்டக் கூட வந்ததாகச் சொல்லப்படுகிறது.

இப்படி இறுதியாக இவர்கள், 20 மே 1498-ல் கோழிக்கோட்டுக்கு வந்தடைந்தனர். இலக்கை அடைந்த மகிழ்ச்சியில் வாஸ்கோடகாமாவும் குழுவும் கொண்டாடி ஆர்ப்பரித்தனர். கோழிக்கோட்டில் காப்பாடு கடற்கரைப் பகுதியில் தங்கள் கால் சுவட்டைப் பதித்துள்ளனர். இதுதான் இந்தியா மீதான ஐரோப்பியப் படையெடுப்புக்குத் தொடக்கப் புள்ளி.

கோழிக்கோட்டை ஆண்ட அரசர் சாமுத்திரி அவர்களுக்கு நல் வரவேற்பு அளித்தார். ஆனால், அவர்களின் வியாபார உடன்படிக்கையை ஏற்கவில்லை. வியாபாரத்துக்காக அங்கு போர்ச்சுக்கீசியக் குழு இருப்பதற்கு அவர் சம்மதிக்க மறுத்தார். வியாபாரத்துக்கு வரி செலுத்த வேண்டும் எனக் கூறினார். அதனால் வாஸ்கோடகாமா கண்ணூர் கோலத்திரி அரசுடன் உடன்படிக்கை செய்துகொண்டார். அங்குள்ள வியாபாரப் பொருட்களுடன் லிஸ்பன் திரும்பினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆனால், அவர் கொண்டு வந்த பொருளின் லாபம், பயணத்துக்குச் செலவான தொகையுடன் ஒப்பிட்டால் மிகக் குறைவுதான். அதனால் மன்னர், பெட்ரோ கல்வாரியஸ் தலைமையில் வேறொரு குழுவை கோழிக்கோட்டுக்கு அனுப்பினார். இப்போதும் கோழிக்கோட்டு அரசருடன் சுமூகமான உடன்படிக்கை மேற்கொள்ள முடியாததால் சண்டை மூண்டது. இதைச் சமாளிக்க மேலும் வீரர்களை அனுப்ப முடிவெடுத்தது போர்த்துக்கீசிய அரசு. அதற்கு வாஸ்கோடகாமாதான் தலைமை. அப்படி அவரது இரண்டாம் விஜயம் 1502-ல் நடந்தது. பிறகு இந்தியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றிய பிறகு ‘போர்ச்சுகல் இந்தியா’வின் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டு மீண்டும் 1524-ல் வாஸ்கோடகாமா இந்திய விஜயம் செய்ந்தார். இந்தப் பொறுப்பு ஏற்ற நான்காம் மாதத்திலேயே கொச்சியில் வாஸ்கோடகாமா காலமானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x