

ஒரு பொட்டல் வெளியில் ஒரு நாவல் மரம் மட்டும் தன்னந்தனியே இருந்தது. பக்கத்தில் குளம் குட்டைகூட இல்லை. கோடைக்காலம் என்பதால் கடுமையான வெயில் வேறு. அந்த இடமே வறட்சியாக இருந்தது.
அப்போது அந்த வழியாக ஒரு நாரை பறந்து சென்றது. நாவல் மரத்தைக் கண்டதும், ‘இந்த மரம் ஏன் இப்படித் தன்னந்தனியாக இருக்கிறது’ என்று அது நினைத்தது. ரொம்ப தூரம் பறந்து வந்த களைப்பில், மரத்தில் உட்கார்ந்து இளைப்பாறலாம் என்று நாரை நினைத்தது. உடனே அந்த மரத்தின் ஒரு கிளையில் அது அமர்ந்தது.
அந்த நாரை மெதுவாக நாவல் மரத்திடம் பேச்சு கொடுத்தது.
“நாவல் மரமே! இந்தப் பொட்டல் வெளியில் நீ இருப்பதால் யாருக்கு என்ன பயன்? நீ யாருக்காக இங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறாய்” என்று கேட்டது நாரை.
“யாருக்காகவா? உனக்காகத்தான்” என்று பதிலளித்தது நாவல் மரம்.
“எனக்காகவா? நான் ஒன்றும் உன்னை நம்பி இல்லையே” என்றது நாரை.
“நான் சொல்வது உண்மைதான்! நீ ரொம்ப தூரம் பறந்து களைத்துப்போயிருக்கிறாய். நான் இங்கே இருப்பதால்தானே, என் மீது உட்கார்ந்து ஓய்வெடுக்க முடிகிறது. நான் இல்லையென்றால் நீ சுடுமணலில் உட்கார வேண்டியிருக்கும். நீ அப்படி உட்கார்ந்திருந்தால், என்னிடம் நீ கேட்டது போல உன்னிடமும் யாராவது வந்து ஏன் தனியாக உட்கார்ந்திருக்கிறாய் என்று கேட்டிருப்பார்கள் அல்லவா?” என்று கேட்ட நாவல் மரம் தொடர்ந்து பேசியது.
“நாரையே! இந்த உலகில் எல்லாப் பொருளுக்கும் எப்போதும் பயன் உண்டு. பயனற்ற பொருள் என்று எதுவும் இல்லை. நமக்கே தெரியாமல் ஒருவருக்கொருவர் அறிந்தோ அறியாமலோ உதவி செய்துகொண்டுதான் இருக்கிறோம்!” என்று சொன்னது மரம்.
நாவல் மரம் பேசியதைக் கேட்ட நாரை, அதிலுள்ள உண்மையைப் புரிந்துகொண்டது.
மரத்தில் சற்றுநேரம் ஓய்வெடுத்த நாரை, மரத்துக்கு நன்றி சொல்லிவிட்டு விடைபெற்றது. கொஞ்சம் தூரத்திலுள்ள காட்டுக்குப் பறந்துபோனது.
காட்டுக்குப் போனதும் அந்த நாரை, மற்ற பறவைகளைக் கூப்பிட்டு நடந்ததைச் சொல்லியது. தனியாக உள்ள அந்த நாவல் மரத்துக்கு உதவ வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டது.
“நண்பனே! நாம் மட்டும் நினைத்தால் அந்த மரத்துக்கு உதவ முடியாது. காட்டிலுள்ள விலங்குகளையும் உதவிக்கு அழைக்க வேண்டும்” என்று நாரையின் நண்பர்களான பறவைகள் கூறின.
உடனே காட்டு ராஜா சிங்கத்திடம் சென்று உதவி கேட்டன பறவைகள்.
அதைக் கேட்ட சிங்கம், “பறவைகளே, மரத்துக்கு உதவி கேட்கிறீர்களே… இதுவரை நீங்கள் இந்தக் காட்டு விலங்குகளுக்கு என்ன உதவி செய்திருக்கிறீர்கள்?” என்று கேட்டது.
உடனே பறவைகள், “என்ன ராஜா இப்படிச் சொல்லிவிட்டீர்கள்! நாங்கள் மரங்களிலுள்ள பழங்களைச் சாப்பிட்டு விதைகளை எச்சமிடுகிறேரம். அந்த விதையிலிருந்து பல மரங்கள் முளைக்கின்றன. மரங்களிலுள்ள பழங்களைக் குரங்குகள் சாப்பிடுகின்றன. மரத்தில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. அந்தத் தேனைக் கரடி, குடிக்கிறது. ஆபத்துக் காலத்தில் நாங்கள் உயரத்திலிருந்தபடி விலங்குகளை எச்சரிக்கிறோம். இவையெல்லாம் உதவி இல்லையா?” என்று கேட்டன.
பறவைகளின் பேச்சில் நியாயம் இருப்பதை உணர்ந்தது சிங்கம். உடனே அது விலங்குகள் எல்லாவற்றையும் கூப்பிட்டது. “நாரை சொன்ன இடத்தைப் பசுமையாக்க வேண்டும். அங்கே தன்னந்தனியாக நிற்கும் நாவல் மரத்துக்கு உதவுங்கள்” என்று சிங்கம் சொன்னது.
உடனே யானை சிங்கத்திடம், “இந்தக் காட்டின் வழியே ஓடும் காட்டாற்றில் ஒரு கால்வாய் வெட்டி, நாரை சொல்லும் பொட்டல் பகுதிக்கு நீரைக்கொண்டு போனால், அந்த இடம் செழிப்பாகும். நாம் வாழ இன்னொரு காடும் கிடைக்கும்” என்று கூறியது. யானையின் யோசனை சிங்கத்துக்குப் பிடித்துப்போனது.
உடனே ஆற்றிலிருந்து கால்வாய் வெட்டும்படி மற்ற விலங்குகளுக்கு உத்தரவு போட்டது சிங்கம். காட்டிலுள்ள விலங்குகள் எல்லாம் கற்களாலும் மரங்களாலும் ஆயுதங்கள் செய்து, மண்ணை வெட்டத் தொடங்கின. வேலை செய்த விலங்குகளுக்கு மரங்களிலுள்ள பழங்களைப் பறித்துத் தந்தன பறவைகள். கூடவே எந்தத் திசையில் கால்வாய் வெட்ட வேண்டுமென்று வானில் பறந்தபடி திசையைக் காட்டின.
ரொம்ப சீக்கிரமே காட்டாற்றிலிருந்து ஒரு கால்வாய் வெட்டப்பட்டது. அந்தக் கால்வாய் வழியாகப் பொட்டல் வெளிக்கு ஆற்று நீர் பாய்ந்தது. அந்த இடத்தில் நீர் வளம் பெருகியது. அந்தப் பொட்டல் வெளியில் மரங்களும் செடிகளும் முளைக்க ஆரம்பித்தன. பொட்டல் வெளி,கொஞ்ச நாளில் பசுமையான காடாக மாறியது.
அன்று தன்னந்தனியே நின்றிருந்த நாவல் மரத்தைச் சுற்றி நிறைய மரங்கள். நிறைய பறவைகள் மரங்களில் தங்கின. அப்போது அங்கு வந்த நாரையிடம் நாவல் மரம் சொன்னது. “நாரையே! அன்று நீ உட்கார நான் உனக்கு இடம் கொடுத்தேன். இன்று நீ இந்த இடத்தையே பசுஞ்சோலையாக மாற்றிவிட்டாய். ரொம்ப நன்றி!” என்றது.
“நாவல் மரமே! இது நான் உனக்குச் செய்த உதவி மட்டுமல்ல. பறவைகளும் விலங்குகளும் வாழ இப்போது பெரிய காடு கிடைத்திருக்கிறது. ஒருவருக்கொருவர் உதவுகிறோம் என்று அன்று எனக்கு உணர்த்தினாய். அதனாலேயே இன்று நாம் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்கிறோம்!” என்று உற்சாகமாகச் சொல்லிவிட்டு பறந்துபோனது.
ஓவியம்: பிரபு ராம்