

சுகந்தபுரி காட்டில் ஏராளமான மலர்கள் பூத்துக் குலுங்கின. செழிப்பாகச் செடிகளிலும் மரங்களிலும் பூத்துக் குலுங்கிய மலர்களில் அளவுக்கு அதிகமான பூந்தேன் சுரந்தது. அதனால், பூச்சிகளின் படையெடுப்பு அந்தப் பகுதியில் அதிகமாக இருந்தது.
அந்தக் காட்சியைக் கண்ட நரிகளுக்குப் பொறாமையாக இருந்தது. அதில் ஒரு நரி, “தேனீக்கள் மட்டும் பூந்தேனை உறிஞ்சினால்தான் நமக்கு அதிக அளவில் தேன் கிடைக்கும். மற்ற பூச்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு பூந்தேனை உறிஞ்சினால், தேனீக்களுக்குக் குறைவான பங்குதான் பூந்தேன் கிடைக்கும். நமக்கும் தேனடையில் இருந்து கிடைக்கும் தேனின் அளவு குறைந்துவிடும். வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. இதை எப்படியாவது தடுத்து நிறுத்துகிறேன்” என்றது.
அப்போது ஒரு வண்ணத்துப்பூச்சி பூந்தேன் குடித்த மகிழ்ச்சியில் பாடிக்கொண்டே பறந்து வந்தது.
“ஏய், வண்ணத்துப்பூச்சியே... கொஞ்சம் நில்லு, நான் உன்னுடன் பேச வேண்டும்” என்றது நரி.
“என்னிடம் பேச என்ன இருக்கிறது?”
“ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது.”
“நான் தேனை அதிகமாகக் குடித்துவிட்ட மயக்கத்தில் இருக்கிறேன். சீக்கிரமாகச் சொல்லி முடி” என்றது வண்ணத்துப்பூச்சி.
“நீங்கள் எல்லாம் பூக்களில் அமர்ந்து தேனைக் குடிப்பது பூக்களுக்கு வருத்தமாக இருக்கிறதாம்! பூக்கள் எல்லாம் கூடிப் பேசுவதைக் கேட்டேன். பாவம் இல்லையா? கொஞ்சமாவது நியாயமாக நடந்துகொள்ள வேண்டாமா? சிறிது காலம் பூக்கள் பக்கம் வராமல் இருந்தால் பூக்களும் சந்தோஷமாக இருக்கும் அல்லவா?” என்று அக்கறையோடு இருப்பதுபோல் காட்டிக்கொண்டது நரி.
“அப்படியா! இது எங்களுக்குத் தெரியாதே… சரி, நான் எங்கள் கூட்டத்தாரிடம் பேசி சிறிது காலத்துக்கு இந்தப் பக்கம் வராமல் வேறு பக்கம் சென்றுவிடுகிறோம். பூக்களிடம் மன்னிப்பு கேட்டதாகச் சொல்லிவிடுகிறாயா?” என்று வருத்தத்தோடு சொன்னது வண்ணத்துப்பூச்சி.
நரியின் சந்தோஷத்துக்கு அளவே இல்லை.
“கட்டாயம் சொல்லிவிடுகிறேன். நீங்கள் கிளம்புங்கள்” என்றது நரி.
“வண்ணத்துப்பூச்சியிடம் என்ன பேசினாய்?” என்று மற்ற நரிகள் எல்லாம் கேட்டன.
“இனிமேல் தேனீக்களுக்கு அதிகப் பூந்தேன் கிடைக்கும். நிறைய தேன்கூடுகளை உருவாக்கும். நமக்கும் தேன் கிடைத்துக்கொண்டே இருக்கும். வண்ணத்துப்பூச்சிகளின் தொல்லை இனி இல்லை” என்று சிரித்தது அந்த நரி.
மறுநாள் காலை வண்ணத்துப்பூச்சிகள் தென்படவில்லை. பூக்கள் எல்லாம் வண்ணத்துப்பூச்சிகள் குறித்துக் கவலைகொண்டன. காரணம் புரியாமல் தவித்தன.
மூன்று மாதங்கள் கடந்தன. அயல் காடுகளில் பருவகாலம் முடிந்துவிட்டதால் செடிகளும் மரங்களும் பூப்பதை நிறுத்திக்கொண்டன. அதனால் வேறு வழியின்றி சுகந்தபுரிக்கே வண்ணத்துப்பூச்சிகள் திரும்பிவிட்டன.
வண்ணத்துப்பூச்சிகளைக் கண்ட பூக்கள் மகிழ்ந்தன.
“எங்களை எல்லாம் விட்டுவிட்டு எங்கே சென்றீர்கள்? உங்களை எல்லாம் காணாமல் தவித்துவிட்டோம்” என்றன பூக்கள்.
“நாங்கள் உங்கள் மீது அமர்ந்து பூந்தேனை உறிஞ்சுவதால், உங்களுக்கு வலிக்கிறது என்று வருத்தப்பட்டீர்கள் அல்லவா, அதனால்தான் நாங்கள் வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டோம்” என்றது ஒரு வண்ணத்துப்பூச்சி.
“என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் எல்லாம் வந்து அமர்வதால் எங்களுக்கு வலி எல்லாம் இருக்காது. யார் உங்களுக்கு இப்படிச் சொன்னது?”
“நீங்கள் எல்லாம் வருத்தப்பட்டதாக ஒரு நரி வந்து சொன்னது. நீங்கள் எங்களின் பசி தீர்ப்பவர்கள். உங்களை மிகவும் மதிப்பவர்கள் நாங்கள். அதனால்தான் இங்கிருந்து சிறிது காலம் தள்ளியிருக்கலாம் என்று நினைத்தோம். இப்போது எங்களுக்கும் வேறு வழியில்லை. எங்களின் பசி தீர்ப்பீர்களா?” என்று ஒரு வண்ணத்துப்பூச்சி பரிதாபமாகக் கேட்டது.
“அட, இது என்ன புதுக் குழப்பம்? எங்களுக்கு வலிக்கிறது என்றால் நாங்களே உங்களிடம் சொல்லிவிடப் போகிறோம். அந்த நரியிடமா சொல்லி அனுப்புவோம்? நீங்கள் எல்லாம் பூந்தேன் குடிக்க வருவதால் எங்களுக்குத் தொந்தரவு இல்லை. நீங்கள் பூக்களில் அமர்வதன் மூலம் எங்களுக்கு மிகப் பெரிய நன்மை கிடைக்கிறது. அதாவது உங்களைப் போன்ற பூச்சிகள், பறவைகள் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. நீங்கள் இருப்பதால்தான் நாங்கள் இவ்வளவு பூக்களைப் பூக்கிறோம். காய்க்கிறோம். சந்ததியை உருவாக்குகிறோம். அதனால், உங்களுக்கு நாங்கள் பூந்தேனைக் கொடுத்து நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். உங்கள் வருகை நம் இருவருக்குமே பலனைத் தருகிறது. இனிமேல் அடுத்தவர் பேச்சை எல்லாம் நம்பாதீர்கள்” என்றது ஒரு பெரிய பூ.
அப்போது அங்கு வந்த அந்த நரி திகைத்தது.
“நரியே, இந்த அப்பாவி வண்ணத்துப்பூச்சிகளை எல்லாம் எப்படி ஏமாற்றி இருக்கிறாய்? உனக்கு ஏன் இந்தக் கெட்ட எண்ணம்?” என்று பூக்கள் எல்லாம் கேட்க, மாட்டிக்கொண்டோமே என்கிற எண்ணத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது நரி.