ஆழ்கடல் அதிசயங்கள் 06: ஆழ்கடலில் திடீர் விருந்து!

ஆழ்கடல் அதிசயங்கள் 06: ஆழ்கடலில் திடீர் விருந்து!
Updated on
2 min read

கடற்பரப்பிலிருந்து சுமார் 1,500 மீட்டர் ஆழத்திற்குத் தரையை நோக்கிப் பாய்ந்தது நாட்டிலஸ் நீர்மூழ்கி. சுற்றிலும் ஒரே இருட்டு. நீர்மூழ்கியின் வெளிச்சத்தில் ஆங்காங்கே தெரிந்த உயிரினங்களைப் பார்த்துக்கொண்டே எல்லோரும் பயணித்தார்கள்.

கடல் தரையில் ஒரு பெரிய திமிங்கிலத்தின் சடலம் கிடந்தது. அதன் தசைப்பகுதிகளைக் கறுப்புச் சுறாக்களும் விலாங்கு போன்ற மீன்களும் கடித்துத் தின்றுகொண்டிருந்தன.

“ஐயோ... இதைப் பார்க்கவா வந்தோம், இறந்த விலங்குகளின் சடலத்தைப் பிற விலங்குகள் சாப்பிடுவதில் அப்படி என்ன அதிசயம் இருக்கு? ” என்று முகம்சுளித்தாள் ரோசி.

“இது பெரிய அதிசயம்தான். இறந்த திமிங்கிலங்கள் ஆழ்கடலில் விழுவதை Whale Fall என்று சொல்வோம். ஆழ்கடல் பகுதியில் இருக்கும் விலங்குகளுக்கு அவ்வளவு சுலபமா உணவு கிடைக்காது. கடல் பனி (Marine Snow) என்று சொல்லப்படுகிற உணவுத் துணுக்குகள் மேலிருந்து வந்தால்தான் உண்டு. அப்படிப்பட்ட சூழலில் இறந்த திமிங்கிலத்தின் பிரம்மாண்டமான உடல் வந்து விழுவது பெரிய விருந்துதானே?” என்று கேட்டார் அருணா.

“ம்... சரிதான். இந்த மீன்களுக்கு இதன்மூலம் சுமார் ஒரு மாசத்துக்குச் சாப்பாடு கிடைக்குமா?” என்றான் செந்தில்.

“இல்ல, பதினெட்டு மாதங்களுக்கு உணவு கிடைக்கும்” என்று சிரித்தார் அருணா.

மூவரும் ஆச்சரியமாகப் பார்க்க, “ஆமாம். இப்போ நாம பார்ப்பது முதல் கட்டம்தான். இதில் ஸ்லீப்பர் சுறாக்களும் சில வகை மீன் இனங்களும் மிதவை (Amphipods) உயிரினங்களும் திமிங்கிலத்தின் தசையைச் சாப்பிடும். இந்தத் தசைப்பகுதியை ஓரளவு சாப்பிட்டு முடிக்கவே இதுகளுக்கு 18 மாதங்கள் தேவைப்படும். அடுத்தது கரிம உணவைச் சாப்பிடும் சிறு விலங்குகள் வரும். கணவாய்கள், புழுக்கள், நண்டுகள், சிப்பிகள் எல்லாம் வந்து சில வருடங்கள் கரிம உணவையும் சுத்தி இருக்கிற சத்துள்ள மண்ணையும் சலித்துச் சாப்பிடும்” என்று அருணா விளக்கினார்.

“அப்போ வெறும் எலும்புதான் மிஞ்சும்... எலும்பைச் சாப்பிடும் நுண்ணுயிரிகள் வருமோ?” என்று ரக்‌ஷா கேட்டாள்.

“அதேதான். எலும்புகளில் உள்ள கொழுப்பைச் சிதைக்கிற பல வகை பாக்டீரியா, கிட்டத்தட்ட 50 முதல் 100 வருடங்கள் வரை இந்தப் பெரிய திமிங்கிலத்தின் எலும்புக்கூட்டில் உள்ள கொழுப்பைச் சாப்பிடுகின்றன” என்றார் அருணா.

“அவ்வளவுதான், எல்லாம் தீர்ந்துபோச்சு” என்றாள் ரக்‌ஷா.

“இல்லையே... கரிமம், கொழுப்பு எல்லாம் போன பிறகு வெறும் கனிமங்கள் மட்டும் இருக்கும் எலும்புக்கூடு பாக்கியிருக்கே. அது ஒரு திடமான அடித்தளம் கொண்ட வாழிடமா மாறும். ஒட்டிக்கொண்டு வாழ விரும்பும் உயிரிகள் இங்கே வந்து தங்கும்” என்றார் அருணா.

புதிய மீன்கள் வந்து திமிங்கிலத்தின் உடலில் இருந்து தங்களுக்கான உணவை வேகமாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தன.

“காலம் அதிகம் எடுக்கும்னாலும் இது ஒரு வழக்கமான வாழ்க்கை சுழற்சிதானே? இதுல என்ன அதிசயம் இருக்கு?” என்று கேட்டாள் ரோசி.

“இது நல்ல கேள்வி. கடலோட கரிமச் சுழற்சிக்கு இந்த நிகழ்வுகள் ரொம்ப முக்கியம். நாற்பது டன் (டன் - ஆயிரம் கிலோ) எடை கொண்ட ஒரு திமிங்கிலம் வந்து விழுவதால், 2,000 ஆண்டுகளில் ஆழ்கடலில் வந்து சேரும் சராசரி கரிமம் ஒரே நாளில் கிடைக்குது! திமிங்கிலம் வந்து விழும்போது, அந்த இடமே ஆற்றலும் சத்துகளும் நிறைந்ததா மாறுது. அடுத்த சில ஆண்டுகளில் அது உயிர்ச்சத்து நிறைந்த வாழிடமாகவும் உருமாறுது. கடல் பனியையே மட்டும் நம்பிக்கொண்டிருக்கும் விலங்குகளுக்கு, திமிங்கிலத்தின் உடலில் உள்ள புரதமும் கொழுப்பும் நிறைய ஆற்றலைக் கொடுக்குது. அதனால், ஆழ்கடல் விலங்குகள் பட்டினியிலிருந்து காப்பாற்றப்படுது” என்று சொல்லி அருணா நிறுத்தினார்.

“இதனால் பல விலங்குகளுக்கு நன்மைதான் போல” என்றான் செந்தில்.

“ஆமாம். மீன், மெல்லுடலி, சுறா, நண்டுன்னு சராசரியா ஒரு திமிங்கிலத்தின் உடலைச் சுற்றியே நானூறுக்கும் மேற்பட்ட கடல் உயிரி வகைகள் வாழும். 2015இல் நடந்தப்பட்ட ஒரு ஆய்வில், ஒரு திமிங்கிலத்தின் உடலுக்கு அருகில் மட்டும் 129 புதிய உயிரிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சாங்க. இது எப்பவாவது நடக்கும் நிகழ்வுதான், ஆனாலும் ஆழ்கடலின் நிரந்தர வாழிடங்களில்கூட இல்லாத அளவுக்கு இதில் பல உயிரிகள் இருக்கும்” என்றார் அருணா.

“அப்படின்னா திமிங்கிலமும் யானை மாதிரிதான், இருந்தும் ஆயிரம் பொன், இறந்தும் ஆயிரம் பொன்” என்றாள் ரோசி. மற்ற இருவரும் ஆமோதித்தனர்.

“இன்னும் 18 மாதங்கள் கழிச்சு இங்க மறுபடியும் வந்து பார்க்கலாம்” என்ற குழந்தைகளின் கோரிக்கைக்கு அருணா தலையாட்ட, நாட்டிலஸ் நீர்மூழ்கி ஓசையின்றி மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தது.

நாராயணி சுப்ரமணியன், கட்டுரையாளர், கடல்சார் ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: nans.mythila@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in