

அறிவியில் துறையில் இருக்கும் பலர் மாபெரும் கண்டுபிடிப்பாளர்களாகவும் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஒருவர் ரேடியம் கண்டுபிடிப்பார். இன்னொருவர் ரேடியோ. ஒருவர் ஒளியை ஆராய்வார். இன்னொருவர் ஒலியை. உயிரியல் துறையில் இருக்கும் நீ எதை ஆராய்ந்தாய், எதனைக் கண்டுபிடித்தாய் என்று கேட்கிறீர்களா? என்னுடைய முதல் பெரும் கண்டுபிடிப்பை உங்களுக்குச் சொல்கிறேன்.
என் முழுப் பெயர் கிளிண்டன் ரிச்சர்ட் டாக்கின்ஸ். சுருக்கமாக, சி.ஆர்.டி. டார்வினின் முழுப்பெயர், சார்லஸ் ராபர்ட் டார்வின். சுருக்கினால் அதே சி.ஆர்.டி. ஒருநாள் மிக, மிகத் தற்செயலாக இதைக் கண்டுபிடித்தேன். யாரோ அப்படியே என்னைத் தூக்கிச் சென்று டார்வினின் முன்னால் உட்கார வைத்தது போல் ஒரே குதூகலமாகப் போய்விட்டது. ஊரே அதிரும்படி ‘யுரேகா’ என்று சத்தம் போட்டுக் கத்தாதது மட்டும்தான் பாக்கி.
இதற்கெல்லாம் இவ்வளவு பெருமிதம் உனக்குத் தேவைதானா என்று நீங்கள் கேட்கலாம். என்ன செய்ய! மரபணுவியல், பரிணாம வளர்ச்சி என்று நிறைய ஆய்வுகளை நடத்தியிருக்கிறேன். என்னுடைய புத்தகங்கள் உலகம் முழுக்க லட்சக்கணக்கில் விற்பனை ஆகிக்கொண்டிருக்கின்றன. விருதுகளும் பாராட்டுகளும் குவிந்துகொண்டிருக்கின்றன. ஆனாலும், நீ யார் என்று கேட்டால், ‘நான் டார்வினின் மாணவன்’ என்றுதான் இன்றும் சொல்லிக்கொள்வேன். அதுதான் என் பெருமிதம். அதுதான் என் அடையாளம். அதுதான் நான் பெற்றதிலேயே பெரிய விருது.
உங்களுக்கெல்லாம் எவ்வளவோ கடவுள்கள் இருக்கிறார்கள். எனக்கு அவர் ஒருவர்தான். உயிரியல் அல்ல என் துறை. டார்வினின் உயிரியல். நான் காண்பது ஏதோ ஒரு தீவல்ல, டார்வினின் தீவு. கடல் அல்ல, டார்வினின் கப்பல் மிதந்து சென்ற கடல். காடல்ல, டார்வினின் காடு. அவர் ஆராய்ந்த தாவரங்களையும் அவர் ஆராய்ந்த உயிரினங்களையும்தான் நானும் ஆராய்கிறேன். நடு இரவில் எழுப்பினாலும், டார்வினின் ‘உயிரினங்களின் தோற்றம்’ நூலை மனப்பாடமாக ஒப்பிக்க முடியும் என்னால். என்னுடைய பைபிள் அது.
பெயர் தொடங்கி ஒவ்வொன்றிலும் அவரைப் பின்தொடர்வதால்தான் உன்னை டார்வினின் மாணவன் என்று அழைத்துக்கொள்கிறாயா என்று கேட்டால், இல்லை என்பேன். என்னால் இன்னமும் போதுமான அளவுக்கு அவரைப் பின்தொடர முடியவில்லை. போதுமான அளவுக்கு அவரிடம் கற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே, நான் டார்வினின் மாணவன்.
விளக்குகிறேன். டார்வின் ஒரு மேதை மட்டுமல்ல, கனிந்த மனிதரும்கூட. என்னதான் முயன்றாலும் அவர் அளவுக்குப் பணிவாகவும் அவர் அளவுக்கு நிதானமாகவும் என்னால் ஒருபோதும் இருக்க முடியாது. ஒரு மணி நேரம் விளக்கிய பிறகும் திருதிருவென்று விழித்தால், இன்னமுமா உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று சீறிவிடுகிறேன் மாணவர்களிடம்.
உன் மதத்தைவிடவும் என் அறிவியல் பெரியது தெரியுமா என்று போட்டிக்குப் போகிறேன். நாமும் குரங்கும் ஒரே மூதாதையரிடம் இருந்து தோன்றினோமாம். கண்டுபிடித்துவிட்டார் பெரிய டார்வின் என்று சிலர் சிரிக்கும்போது, நீ அவர் எழுதியதில் ஒரு சொல்லாவது படித்திருக்கிறாயா என்று சண்டை போடுகிறேன்.
இதில் ஒன்றையும் செய்ய மாட்டார் டார்வின். கடவுள்தான் உலகையும் நம்மையும் படைத்தார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? சரி, அது உங்கள் நம்பிக்கை. உயிர்கள் பரிணாம வளர்ச்சி அடைகின்றன என்பதை ஏற்பதற்கு உங்களுக்குக் கடினமாக இருக்கிறதா? சரி, பரவாயில்லை. வேறு ஏதேனும் ஒரு தருணத்தில் உங்கள் முடிவை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் நம்பிக்கையும் என் நம்பிக்கையும் வெவ்வேறானவையா? இருக்கட்டுமே!
வாதம் செய்ய மாட்டேன். சண்டை போட மாட்டேன். என்னுடையதுதான் சரியான கருத்து, என்னுடையதுதான் இறுதியான முடிவு என்று சாதிக்க மாட்டேன். என்னுடைய வேலை ஆராய்வது. சான்றுகளைச் சேகரிப்பது. சேகரித்த சான்றுகளின் அடிப்படையில் ஒரு வாதத்தை உருவாக்குவது. அவ்வளவுதான். அத்துடன் முடித்துக்கொண்டுவிடுவார். இதுதான் டார்வினின் வழி. இதை மட்டுமே தன் வாழ்நாள் முழுக்கச் செய்துகொண்டிருந்தார் டார்வின்.
வாயையே திறக்க மாட்டார் அவர். ஆண்டுக்கணக்கில் அவர் மேற்கொண்ட ஆய்வுகள் பேசும். குன்றுபோல் அவர் சேகரித்த சான்றுகள் பேசும். இந்தச் சான்றுகளைக் கொண்டு நான் வந்தடைந்த முடிவு இதுதான் என்று அவர் சொல்ல மாட்டார். இந்தச் சான்றுகளை எல்லாம் நீங்களே பாருங்கள். அலசுங்கள். நிதானமாக யோசியுங்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இவற்றைக் கொண்டு நீங்கள் எந்த மாதிரியான முடிவுக்கு வருவீர்கள் என்று கேட்பார். உங்கள் கரங்களில் எல்லாவற்றையும் கொண்டுவந்து கொடுத்துவிட்டு அவர் விலகிக்கொண்டுவிடுவார்.
தலைகீழாக நின்றாலும் கடிந்து ஒரு சொல் வராது அவரிடமிருந்து. எவ்வளவு வலிந்து இழுத்தாலும் சண்டைக்கு வரமாட்டார். உங்களை வீழ்த்த வேண்டும் என்றோ வெல்ல வேண்டும் என்றோ ஒருபோதும் நினைக்க மாட்டார். தன் ஆற்றலை, தன் கவனத்தை முழுக்க முழுக்க ஆய்வில் மட்டுமே செலுத்தியவர் அவர்.
எனக்குப் புரியவில்லை என்றால் மீண்டும் ஒரு மணி நேரம் சொன்னதையே சொல்லி விளக்குவார். உங்களைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு எனக்குப் புத்திக்கூர்மை இல்லையோ என்று கலங்கினால், சேச்சே அப்படியெல்லாம் இல்லை, இன்னும் எளிமையாகப் புரிய வைக்கும் திறமையை நான்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பார். இதுதான் இயற்கையின் இயல்பு. இதுதான் அறிவியலின் இயல்பு.
அறிவியலுக்கு ஓர் உருவம் அளித்தால் அது டார்வின்போல் இருக்கும். அறிவியலுக்குக் கண்கள் இருந்தால் அந்தக் கண்களில் டார்வினின் கண்களில் திரண்டிருக்கும் கனிவைக் காணலாம். டார்வின்போல் ஓயாமல் நம்மை ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கிறது இயற்கை. வேற்றுமை இருக்கும்வரை உயிர்கள் இருக்கும், உலகம் இருக்கும் என்றார் டார்வின். இதையேதான் இயற்கையும் ஒவ்வொரு கணமும் நமக்குக் கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. டார்வின்போல் நம் அனைவரையும் ஒன்றுபோல் அரவணைத்துக்கொள்கிறது இயற்கை.
நான் இயற்கையின் மாணவன் என்பதால் டார்வினின் மாணவன்.
கட்டுரையாளர், எழுத்தாளர் தொடர்புக்கு: marudhan@gmail.com