டிங்குவிடம் கேளுங்கள்: கடுகு வெடிப்பது ஏன்?

டிங்குவிடம் கேளுங்கள்: கடுகு வெடிப்பது ஏன்?
Updated on
2 min read

எண்ணெய்யில் போட்டவுடன் கடுகு வெடிப்பது ஏன், டிங்கு?

- வெ. சங்கீதா, 5-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

ஒரு பொருளில் நீர்ச்சத்து இருந்தால்தான் அந்தப் பொருள் வேகும் அல்லது எண்ணெய்யில் பொரியும். கடுகுக்குள் நீர்ச்சத்து இருக்கிறது. எண்ணெய்யில் கடுகைப் போடும்போது, கடுகுக்குள் இருக்கும் நீர் வெப்பத்தால் சூடாகி, கடுகை உடைத்துக்கொண்டு ஆவியாக வெளியேறுகிறது. அதனால்தான் கடுகை எண்ணெய்யில் போடும்போதும் வெறும் வாணலியில் வறுக்கும்போதும் சூடாகி வெடிக்கிறது, சங்கீதா.

வண்ணத்துப்பூச்சிகளின் இறக்கைகள் ஏன் கண்வர் வண்ணங்களில் இருக்கின்றன, டிங்கு?

- ரா. கீர்த்தனா, ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, கூத்தூர், திருச்சி.

வண்ணத்துப்பூச்சிகளுக்கு மிகவும் குறைவான வாழ்நாள். அதற்குள் அடுத்த சந்ததியை உருவாக்கிவிட வேண்டும். வண்ணத்துப் பூச்சிகளின் கண்கவர் இறக்கைகள் மூலம் இணையை எளிதாகக் கண்டுகொள்ள முடியும். பசியோடு நெருங்கி வரும் எதிரிகளிடம், ‘என்னைச் சாப்பிட்டால் உனக்கு ஆபத்து’ என்று எச்சரிக்க முடியும். மரங்கள், மலர்கள், இலைகளில் அமரும்போது, சட்டென்று எதிரிகளின் கண்களுக்குப் புலப்படாமல் பாதுகாக்கவும் உதவுகின்றன இந்த வண்ண இறக்கைகள்.

குறும்பு செய்து அடி வாங்கிய அனுபவம் உண்டா, டிங்கு?

- கே. வினித்குமார், 6-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, திண்டிவனம்.

குறும்பு செய்யாத குழந்தைகளே இருக்க மாட்டார்கள். அதே போல நம் நாட்டில் அடி வாங்காத குழந்தைகளும் இருக்க மாட்டார்கள், வினித்குமார்.

ஏன் குழந்தைகளின் முகத்தில் மையால் பல இடங்களில் பொட்டு வைக்கிறார்கள், டிங்கு?

- எம். காவ்யா, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம்.

அழகான ஒரு விஷயத்தைக் கண்டால் சிலர் மகிழ்ச்சியடைவார்கள், சிலர் பொறாமைப்படுவார்கள். பொறாமைக் குணம் சம்பந்தப்பட்டவருக்குத் தீங்கு விளைவிக்கும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அந்தத் தீய எண்ணத்தைக் கறுப்பு மை தடுத்துவிடும் என்றும் நம்புகிறார்கள். அதனால், குழந்தையின் முகத்தில் பல இடங்களில் கறுப்பு மையால் பொட்டு வைத்துவிடுகிறார்கள். ஒருவரின் எண்ணத்துக்குத் தீமையைக் கொடுக்கக்கூடிய சக்தி இருக்கிறது என்பதற்கும் அதைக் கறுப்பு மையால் தடுக்க முடியும் என்பதற்கும் அறிவியல் ரீதியான ஆதாரம் எதுவும் இல்லை. இது வெறும் நம்பிக்கை மட்டுமே, காவ்யா.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in