

நாராயணி சுப்ரமணியன்
இந்தோனேசியாவின் கடற்பகுதிக்கு வந்து சேர்ந்தது நாட்டிலஸ் நீர்மூழ்கி. கடல் தரையை ஒட்டி அது நின்றதும், மூன்று குழந்தைகளையும் கவனிக்கச் சொன்னார் ஆராய்ச்சியாளர் அருணா.
அங்கே அடர் சிவப்பு நிறத்தில் ஊதா வரிகளைக் கொண்ட ஒரு கணவாய், உடைந்த தேங்காய் ஓடு (சிரட்டை) ஒன்றைத் தன்னுடைய எட்டுக் கரங்களாலும் தொட்டு உணர்ந்துகொண்டிருந்தது.
“இது ஆக்டோபஸ் தானே” என்றாள் ரோசி.
“ஆமாம், ஆக்டோபஸை, பேய்க்கணவாய் அல்லது சடைக்கணவாய்னு சொல்லுவோம். இப்போ நீங்க பார்ப்பது தேங்காய் கணவாய் (Coconut Octopus) என்று பொதுவா அழைக்கப்படுது. பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் காணப்படுகிற, கடல் தரையை ஒட்டி வாழும் இந்த இனத்துக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு” என்றபடி அருணா, கணவாயை நோக்கிக் கைநீட்டினார்.
தண்ணீரைப் பீய்ச்சியடித்து தேங்காய் ஓட்டின் மேலே உள்ள மணலையும் அழுக்கையும் சுத்தம் செய்த கணவாய், தேங்காய் ஓட்டின் குழிப்பகுதி மேலே வருமாறு அதைக் கவிழ்த்தது. மீண்டும் ஒரு முறை அதைச் சுத்தம் செய்துவிட்டு, தேங்காய் ஓட்டை எட்டுக் கரங்களாலும் இறுக்கிப் பிடித்துக்கொண்டு, கடலின் தரையில் தடுமாறியபடி கைகளால் நடக்கத் தொடங்கியது!
“பார்க்கவே சிரிப்பா இருக்கே, சின்னக் குழந்தை மாதிரி தள்ளாடி நடக்குது” என்று செந்தில் சிரித்தான்.
“ஆமாம், 2009இல் இந்தக் கணவாய்கள் இப்படி நடப்பதைப் பார்த்து ஆய்வு செய்த என் நண்பர் ஜூலியன் ஃபின்னும் இதையேதான் சொன்னார், முதல்முறை பார்க்கும்போது சிரிப்பா இருந்ததாம்” என்றார் அருணா.
“கிராமத்துத் திருவிழாவில் காலில் குச்சி கட்டி ஆடுவாங்கல்ல, அது மாதிரி இருக்கு” என்றாள் ரோசி.
“ஆமாம், பார்க்க இது மரக்கால் ஆட்டம் மாதிரிதான் இருக்கு. இதை விஞ்ஞானிகள் பொய்க்கால்னு (Stilt Walking) சொல்றாங்க. உண்மையில் இப்படி நகர்வதற்கு நிறைய ஆற்றல் வீணாகும் என்பதால் கணவாய் சோர்வடையுமாம். ஆனாலும், இந்தக் கணவாய்கள் அசராமல் தேங்காய் ஓடுகளை எடுத்துப் போகும். பொதுவா இந்தக் கணவாய்கள் பெரிய மட்டி அல்லது கிளிஞ்சல் ஓடுகளில் வசிக்கும் தன்மை கொண்டவை. சமீபகாலமா இதுபோன்ற தேங்காய் ஓடுகளையும் பாதுகாப்புக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றன. இப்படிக் கணவாய்கள் செய்வதைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள், கருவிகளைப் பயன்படுத்தும் முதல் முதுகெலும்பற்ற உயிரிகள்னு இவற்றை புகழ்ந்திருக்காங்க” என்றார் அருணா.
“அதாவது தேங்காய் ஓட்டைப் பாதுகாப்புக்காகப் பயன்படுத்துவதால் இப்படிப் புகழ்ந்து சொல்றாங்க, அப்படித்தானே? இது அறிவான விலங்கு என்பதால் கருவிகளைப் பயன்படுத்துது” என்றாள் ரக் ஷா.
“கருவிகளைப் பயன்படுத்துவதால் மட்டுமே அறிவுள்ள விலங்குன்னு சொல்லிட முடியாது. மேலும் சில அம்சங்களும் வேணும். உதாரணமா இந்தத் தேங்காய் கணவாயின் செயல்பாட்டையே எடுத்துக்கலாம். சும்மா கடலில் ஒரு ஓடு கிடந்தால், அதற்குள் இந்தக் கணவாய் புகுந்து பாதுகாப்பைத் தேடிக்கிட்டா அது கருவிப் பயன்பாடு கிடையாது, அறிவின் காரணமா இப்படி செய்யுதுன்னு சொல்ல மாட்டோம். ஆனா, இந்தக் கணவாய் ஒரு தேங்காய் ஓட்டைச் சுத்தப்படுத்தி அதை வேற இடத்துக்குக் கொண்டு போகுது. கொண்டு போகும்போது கஷ்டப்பட்டு நடக்குது.
இப்படி நடக்கும்போது தேங்காய் ஓடு ஒரு தொந்தரவா இருக்கு, ஆனாலும் எதிர்காலத்தில் அந்த ஓடு பயன்படும்னு கணவாய் திட்டம் போடுது. அட, இது மட்டுமில்ல, வேறொரு இடத்துக்குப் போன பிறகு, இரண்டு தேங்காய் ஓடுகளை ஒண்ணா வெச்சு அதை ஒரு பந்து போல மாற்றி, அதற்குள் கணவாய்கள் புகுந்து வாழும்! கருவியைத் தேடி சுத்தம் செய்வது, வேறொரு இடத்துக்கு கொண்டு போவது, அதற்காகக் கஷ்டப்படுவது, எதிர்காலத்துக்காகத் திட்டம் போடுவது, புதிய இடத்தில் தன் தேவைக்கு ஏற்றபடி கருவியை மீள் உருவாக்கம் செய்வது ஆகிய இந்தச் செயல்பாடுகள்தாம் அறிவு செயல்படுவதற்கான ஆதாரங்கள்” என்று அருணா விளக்கம் கொடுத்தார்.
“அங்கே பாருங்க” என்று செந்தில் காட்ட, அங்கே இரண்டு தேங்காய் ஓடுகளைக் கச்சிதமாகப் பொருத்தி, கணவாய் அதற்குள் முழுவதுமாகப் புகுந்துகொண்டது, கண் மட்டும் இடுக்கு வழியாகத் தெரிந்தது.
“கேரளத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இந்தக் கணவாய்கள் தேங்காய் ஓட்டை முட்டை போடும் கூடாகவும் பயன்படுத்தும்னு கண்டுபிடிச்சிருக்காங்க. ஒரே கருவியை வெவ்வேறு பயன்பாட்டுக்கு மாற்றிப் பயன்படுத்துவதும் அறிவின் அடையாளம்தானே?” என்று அருணா கேட்டார்.
“ஒரு அடிதான் இருக்கு, சுருண்டு இருக்கும்போது ஒரு பெரிய பந்து மாதிரி தெரியுது. இந்தச் சின்ன விலங்குக்குள் இவ்வளவு அறிவா!” என்று செந்தில் ஆச்சரியப்பட்டான்.
“நிறைய விலங்குகளுக்குப் பல வகையான அறிவு சார்ந்த திறமைகள் இருக்கும் செந்தில், நமக்கு அது புரியுமான்னுதான் தெரியல” என்று ரோசி சொன்னாள்.
“மிகவும் சரி தலைவர் அவர்களே” என்று அருணா சிரிக்க, தேங்காய்க்குள்ளிருந்து திடீரென்று வெளிவந்த கணவாய், அருகில் வந்த இறாலை வேட்டையாடி, சாப்பிடத் தொடங்கியது.
(அதிசயங்களைக் காண்போம்)
கட்டுரையாளர், கடல்சார் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: nans.mythila@gmail.com